30 வகை கிராமிய சமையல்! 30 நாள் 30 வகை சமையல்!!

'கி ராமத்து பாட்டி வீட்டுல சாப்பிட்ட ஒவ்வொண்ணும் தேவாமிர்தம்! அதையெல்லாம் திரும்ப சாப்பிடணும்னா, ரொம்ப நாள் வெயிட் பண்ணணும்...''...

'கிராமத்து பாட்டி வீட்டுல சாப்பிட்ட ஒவ்வொண்ணும் தேவாமிர்தம்! அதையெல்லாம் திரும்ப சாப்பிடணும்னா, ரொம்ப நாள் வெயிட் பண்ணணும்...''
- இந்த ஏக்கப் பெருமூச்சு பல வீடுகளில் கேட்பதுண்டு. ''இதுக்காக எதுக்கு பெட்டி படுக்கை எல்லாம் கட்டணும்? உங்க வீட்டுலயே கிராமிய உணவுகளை செய்ய நான் சொல்லித்தர்றேன் வாங்க!'' என்று அழைக்கும் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால், கிராமிய உணவு களை அலசி, ஆராய்ந்து அவற்றில் 30 வகை களை இங்கே வழங்குகிறார்.
''மாப்பிள்ளை சொதி, சிம்ளி, சீராளம், புட்டு, புளியந்தளிர் கூட்டு... இது போன்ற நம் மண்ணின் பெருமைக்கு சிறப்பு சேர்க்கும் உணவுகளைக் கொடுத்திருக்கிறேன். மண் சட்டி, அம்மி போன்றவற்றை பயன்படுத்தி தயாரித்தால், மேலும் அற்புதமான ருசியில் இருக்கும்'' என்று பாசம்மிக்க தோழியாய் பரிந்துரை செய்கிறார் ஆதிரை.

ராகி குலுக்கு ரொட்டி
தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், பச்சரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன், பொடித்த வெல்லம் - அரை கப், வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: கேழ்வரகு மாவை லேசாக வறுத்து... பச்சரிசி மாவு, உப்பு சேர்த்து கலக்கவும். அதில் தேவையான நீர் விட்டு நன்கு பிசையவும். மாவை தோசைக்கல்லில் கனமான அடைகளாக தட்டி, சுற்றிலும் நெய் விட்டு, வெந்ததும் எடுத்து, சின்னச் சின்ன துண்டுகளாக செய்து கொள்ளவும்.
வெல்லத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, தேன் பதம் வந்ததும் ஒன்றிரண்டாக பொடித்த வேர்க்கடலை, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். இதில் கேழ்வரகு ரொட்டித் துண்டுகளை சேர்த்துப் பரிமாறவும்.
இரும்புச்சத்து கொண்ட இந்த ரொட்டி, வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

குழாப்புட்டு
தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், நாட்டுச் சர்க்கரை, தேங்காய் துருவல் - தலா அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - சிறிதளவு, முந்திரி - 8, உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: பச்சரிசி மாவை வெறும் வாணலியில் நன்கு வறுக்கவும்.  நாட்டுச் சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
வறுத்த பச்சரிசி மாவில் உப்பு கரைத்த நீர் தெளித்துப் பிசிறி, 10 நிமிடம் அப்படியே வைக்கவும். புட்டுக்குழாயில் கொஞ்சம் புட்டு மாவை அடைத்து, அதன் மேல் ஒரு அடுக்காக தேவையான அளவு தேங்காய் துருவல் கலவையை அடைத்து... மற்றொரு அடுக்காக மாவு வைத்து, பிறகு மீண்டும் தேங்காய் துருவல் கல வையை வைத்து அடைக்கவும். இதை ஆவியில் வேக வைத்து எடுக்கவும். பிறகு, குழாயிலிருந்து புட்டு எடுத்து... நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.

மாப்பிள்ளை சொதி
தேவையானவை: பாசிப்பருப்பு - 100 கிராம், பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, நறுக் கிய முருங்கைக்காய் (எல்லாம் சேர்த்து) - ஒரு கப்,  சின்ன வெங்காயம் - 12, தேங்காய் - ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 8 பல், பச்சை மிளகாய் - 6, சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேக விடவும். தேங்காயை துருவி அரைத்து முதல், இரண்டாம் பாலை எடுத்து தனித்தனியே வைத்துக் கொள்ளவும்.
மண் சட்டி அல்லது அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி. இரண்டாம் தேங்காய்ப் பாலை சேர்க்கவும். நறுக்கிய காய்கறிகளை அதனுடன் சேர்த்து கொதிக்கவிடவும். காய்கறிகள் வெந்ததும், வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். பிறகு, முதல் தேங் காய்ப் பாலை சேர்த்து, நன்றாகக் கொதித்து நுரைத்து வந்ததும் இறக்கி... உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் நெய் விட்டு சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை தாளித்து சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
குறிப்பு: திருமணத்து அடுத்த நாள் பெண் வீட்டுக்கு மாப்பிள்ளை விருந்துக்கு வரும்போது இதை செய்து பரிமாறுவார்கள். இதனை இடி யாப்பத்தின் மீது ஊற்றி சாப்பிட்டால்... அமர்க்களமான சுவையில் இருக்கும். சாதத்துடனும் கலந்து சாப்பிடலாம்.

நெல்லிக்காய் துவையல்
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 6, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு.  
செய்முறை: பெரிய நெல்லிக்காயை கொட்டை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் தாளித்து துவையலில் சேர்த்துப் பயன்படுத்தவும்.

கேழ்வரகு இனிப்பு அடை
தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், வெல்லம் - முக்கால் கப், தேங்காய் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி - 2 டேபிள்ஸ்பூன், நெய் - தேவையான அளவு.
செய்முறை: வெல்லத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். வெல்லக் கரைசல் சற்று கெட்டியானதும், அதனுடன் தேங்காய் துருவல் சேர்க்கவும். பிறகு கேழ்வரகு மாவு, ஏலக் காய்த்தூள், பொடித்த முந் திரி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
வாழை இலையில் நெய் தடவி, மாவை சற்று கனமான அடைகளாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் நெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

இஞ்சி துவையல்
தேவையானவை: இஞ்சி - ஒரு சிறிய துண்டு (சுத்தம் செய்து நறுக் கிக் கொள்ளவும்), காய்ந்த மிளகாய் - 3, தேங்காய் துருவல் - அரை கப்,  புளி - சிறிதளவு, உளுத்தம் பருப்பு (வறுக்க) - ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு (தாளிக்க) - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், உளுத்தம்பருப்பு, இஞ்சி ஆகியவற்றை வறுக்கவும். இத னுடன் புளி, உப்பு, சிறிதளவு நீர் சேர்த்து அரைக்கவும். இறுதியாக கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
துவையலை அம்மியில் அரைத்தால், மிகவும் சுவையாக இருக்கும். இந்த துவையல் ஜீரண சக்தியை அதி கரிக்கும்.

கலவை தானிய உருண்டை
தேவையானவை: கம்பு, கொள்ளு, பச்சைப் பயறு, காராமணி, கோதுமை, பொட்டுக்கடலை, எள் - தலா கால் கப், சர்க்கரை - இரண்டரை கப் (பொடித் துக் கொள்ளவும்), தேங்காய் துருவல் - அரை கப், நெய் - அரை கப்.
செய்முறை: தானிய வகைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்து, சற்று ஆறியதும் ஒன்றுசேர்த்து, மெஷினில் கொடுத்து நைஸான மாவாக அரைத்துக் கொள்ளவும்.
தானிய மாவுடன் பொட்டுக்கடலை, பொடித்த சர்க்கரை, தேங்காய் துரு வல் சேர்த்து நன்கு கலந்து, உருக்கிய நெய் ஊற்றி பிசிறி, உருண்டை பிடிக்கவும் (சரியாக பிடிக்க வரவில்லை என்றால், சிறிது பால் தெளித்து உருண்டை பிடிக்கலாம்).
புரோட்டீன் சத்து நிறைந்த பலகாரம் இது.

பிடிகருணை குழம்பு
தேவையானவை: பிடிகருணை - 200 கிராம், சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 10 பல், தக்காளி - 2, புளி - எலுமிச்சை அளவு,  மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், குழம்பு மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், வடகம், வெல்லம் - சிறி தளவு, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிடிகருணையை மண் போக கழுவி, வேக வைத்து, தோலு ரித்து, வட்டம் வட்டமாக நறுக்கவும். சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கவும். புளியை நன்கு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
மண் சட்டி அல்லது அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து சூடேற்றி நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் வடகம் தாளித்து, சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து நன்கு வதக்கி... துண்டுகளாக்கிய பிடிகருணையை சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, புளிக்கரைசலை விட்டு நன்கு கொதிக்க விடவும். குழம்பு சற்று கெட்டியானதும் வெல்லத்தூள் சேர்த்து இறக்கவும்.
சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு இந்த குழம்பை ஊற்றிச் சாப் பிட... சுவை அள்ளும்!

புளியந்தளிர் பருப்புக் கூட்டு
தேவையானவை:  புளியந்தளிர் - அரை கப், துவரம்பருப்பு - அரை கப், பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 2, பூண்டு - 2 பல், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
தாளிக்க: குழம்பு வடகம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு.
செய்முறை: துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து மலர வேகவிடவும். வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகிய வற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ள வும்.
வெந்த துவரம்பருப்புடன் புளியந் தளிர், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, தக்காளி, உப்பு, சிறிதளவு நீர் சேர்த்து வேகவிட்டு நன்கு மசிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் குழம்பு வடகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, மசித்து வைத்த கல வையில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

கமகம கமர்கட்
தேவையானவை: தேங்காய் துருவல் - 2 கப், பாகு வெல்லம் - ஒன்றரை கப், நெய் - சிறிதளவு.
செய்முறை: வெல்லத்தில் சிறிதளவு நீர் விட்டு அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பிலேற்றி, தேங்காய் துருவல் சேர்த்து, அடுப்பை 'சிம்’ மில் வைத்து 20 நிமிடம் நன்கு கிளறவும் (இதில் கொஞ்சம் எடுத்து சற்று ஆறவிட்டு, உருட்டிப் பார்க் கும்போது உருட்ட வந்தால் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்). கலவை சற்று சூடாக இருக்கும்போதே, கையில் நெய்யை தொட்டு சின்னச் சின்ன உருண்டை களாகப் பிடிக்க... கமகம கமர்கட் தயார்.

இனிப்பு இட்லி
தேவையானவை: புழுங்கல் அரிசி - 2 கப், உளுத்தம்பருப்பு - அரை கப், தூள் செய்த கருப்பட்டி - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய்யில் வறுத்த பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - கால் கப், நெய் - சிறிதளவு, ஆப்ப சோடா, உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: புழுங்கல் அரிசி, உளுத்தம்பருப்பை தனித்தனியே ஊற வைத்து, உளுந்தை பொங்கப் பொங்கவும், அரிசியை நைஸாகவும் அரைத்து, இரண்டையும் ஒன்றுசேர்த்து, சிட்டிகை உப்பு சேர்த்துக் கரைத்து நன்கு புளிக்க வைக்கவும். பிறகு, மாவில் தேங்காய் துருவல், நெய், ஏலக்காய்த்தூள், ஆப்ப சோடா, வறுத்த பாசிப்பருப்பு சேர்த்துக் கலக்கவும். கருப்பட்டியில் சிறிது நீர் சேர்த்து கரையவிட்டு, வடிகட்டி, சூடாக்கி அப்படியே மாவில் சேர்க்கவும். இதை நன்கு கலந்து இட்லித்தட்டில் ஊற்றி இட்லிகளாக வார்க்கவும்.
குறிப்பு: கருப்பட்டிபாகு சேர்த்ததும் மாவு நீர்த்துக் கொள்ளுமென்பதால், மாவு அரைக்கும்போது சற்று கெட்டியாக இருப்பது அவசியம்.

மரவள்ளிக்கிழங்கு பாயசம்
தேவையானவை: மரவள்ளிக்கிழங்கு - கால் கிலோ, பால் - 3 கப், சர்க்கரை - ஒரு கப், நெய்யில் வறுத்த முந்திரி - 8, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ - தலா ஒரு சிட்டிகை, தேங்காய்ப் பால் - ஒரு கப்.
செய்முறை: மரவள்ளிக்கிழங்கை நன்கு கழுவி, வேகவைத்து தோல் நீக்கி  மசித்துக் கொள்ளவும். பாலுடன் சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். அதில் மசித்த மரவள்ளிக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறவும். பிறகு, முந்திரி, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து இறக்கி... தேங்காய்ப் பால் சேர்த்துப் பரிமாறவும்.

புழுங்கலரிசி ஆவி உருண்டை
தேவையானவை: புழுங்கலரிசி - ஒரு கப், தேங்காய் துருவல் - கால் கப், நல்லெண்ணெய், உப்பு - தேவை யான அளவு.
தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, பெருங் காயத்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: புழுங்கலரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக் கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப் பிலை தாளித்து... அதனுடன் அரைத்து வைத்துள்ள மாவை சேர்த்து கை விடாமல் நன்கு கிளறவும். மாவு வாணலியில் ஒட்டாமல் பந்து போல வரும் சமயம் தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். மாவு சற்று ஆறியதும் சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைக்கலாம். மாவை  உருட்டி உள்ளங்கையில் வைத்து வடை போல தட்டி, இட்லித்தட்டில் வேகவிட்டும் எடுக்கலாம்.

வேர்க்கடலை  சின்ன வெங்காய சட்னி
தேவையானவை: வறுத்த வேர்க்கடலை - ஒரு கப் (தோல் நீக்கவும்), தேங்காய் துருவல் - கால் கப், சின்ன வெங்காயம் - 10, புளி - சிறிதளவு,  பூண்டு - 4 பல், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 7, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து... வேர்க்கடலை, சின்ன வெங்காயம், புளி, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும். ஆறியதும் கொத்தமல்லித் தழை, உப்பு, பூண்டு சேர்த்து சட்னியாக அரைத்தெடுக்கவும்.

நாரத்தை இலை ரசம்
தேவையானவை: நாரத்தை இலை - 6, கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 2, பூண்டு - 4 பல், கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, எலுமிச்சம்பழச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - சிறிதளவு.
செய்முறை: நாரத்தை இலை, கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை ஒன்றிரண்டாக பொடித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும். இதில் பொடித்து வைத்த கலவையை சேர்த்து லேசாக வதக்கி, 3 கப் நீர் சேர்க்கவும். பிறகு, மிளகுத்தூள், சீரகத்தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து 3 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.

அரிசி  உளுந்து கஞ்சி
தேவையானவை: புழுங்கல் அரிசி நொய் - ஒரு கப், கறுப்பு உளுந்து - ஒரு கைப்பிடி அளவு, சீரகம் - 2 டீஸ்பூன், பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கவும்), வெந்தயம் - கால் டீஸ்பூன், உப்பு - சிறிதளவு, மோர் - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசி நொய்யுடன் 4 கப் நீர் சேர்த்து... கறுப்பு உளுந்து, சீரகம், வெந்தயம், நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். வெந்ததும் மோர், உப்பு சேர்த்துப் பருகலாம்.

கொள்ளு பொடி
தேவையானவை:  கொள்ளு - ஒரு கப், உளுத்தம்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 15, பெருங்காயம் - ஒரு சிறு துண்டு, கொப்பரைத் துருவல் - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பெருங்காயத்தை பொரித்தெடுக்கவும். காய்ந்த மிளகாயை நிறம் மாறாமல் வறுத்தெடுக்கவும். கொப்பரைத் துருவலை சிவக்க வறுக்கவும். கொள்ளை சுத்தம் செய்து வெறும் வாணலியில் மொறுமொறுப்பாக வறுத்தெடுக்க வும். வறுக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் ஆறியதும் ஒன் றாகக் கலந்து, உப்பு சேர்த்து சற்று கொரகொரவென்று பொடிக்கவும்.
இந்தப் பொடியுடன் நல் லெண்ணெய் கலந்து இட்லி, தோசைக்கு தொட்டுக் கொண் டால்... அசத்தல் சுவையில் இருக்கும். சூடான சாத்தில் எண்ணெய் விட்டு இதை கலந்து சாப்பிடலாம்.

வாழைக்காய்  சின்ன வெங்காயம் கறி
தேவையானவை: முற்றிய வாழைக் காய் - ஒன்று, சின்ன வெங்காயம் - 12, பூண்டு - 8 பல், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், குழம்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், தக்காளி - ஒன்று, தேங் காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன், முந்திரி - 4, கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப் பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:  வாழைக்காயை தோல் சீவி, சதுர துண்டுகளாக நறுக்கவும். சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். தேங்காய் துருவல், முந்திரி, பெருஞ்சீரகத்தை சேர்த்து மையாக அரைக்கவும்.
மண் சட்டி அல்லது அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளிக்கவும். பிறகு, சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கி... வாழைக்காயைச் சேர்த்து, உப்பு, மஞ்சள்தூள், குழம்பு மிளகாய்த்தூள் போட்டு கொஞ்சமாக நீர் விட்டு மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து... அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, நன்கு சிவக்க வறுத்து, கொத்தமல்லித் தழையைத் தூவி பரிமாறவும்.

மிளகாய் வடை
தேவையானவை: சிவப்பரிசி, துவரம்பருப்பு - தலா ஒரு கப், பட்டை - சிறு துண்டு, லவங்கம் - ஒன்று, காய்ந்த மிளகாய் - 10, பூண்டு - 6 பல் (விழுதாக அரைக்கவும்), சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்க வும்), கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சிவப்பரிசி, துவரம் பருப்பை ஒன்றாக சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு, அரிசி - பருப்பு டன் பட்டை, லவங்கம், காய்ந்த மிள காய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். மாவை வழித்தெடுக்கும் முன் பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங் காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இந்த மாவை வடைகளாக தட்டி சூடான எண்ணெயில் பொரித் தெடுக்கவும்.
குறிப்பு: இதை வேறொரு முறையிலும் செய்யலாம். மாவை சற்று தளர்வாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவை ஒரு சின்னக் குழி கரண்டியில் விட்டு, வெந்ததும் திருப்பிப் போட்டு எடுத்து, ஒரு ஜல்லிக்கரண்டி மேல் வைத்து அதன் மீது தோசைத் திருப்பி கொண்டு அழுத்தி எடுத்து சுடச்சுட சாப்பிட்டால்... சுவை ஆளை அசத்தும்.

வாழைத்தண்டு  பச்சை வேர்க்கடலை கூட்டு
தேவையானவை: வாழைத்தண்டு - ஒரு துண்டு, பாசிப்பருப்பு - அரை கப், சின்ன வெங்காயம் - 8, பச்சை மிளகாய் - 2, சீரகம் - அரை டீஸ்பூன், பச்சை வேர்க்கடலை - கால் கப், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, நெய், பால் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைத்தண்டை நாரெடுத்து மிகவும் மெல்லிதாக நறுக்கிக் கொள்ளவும். பாசிப்பருப்பை மலர வேகவிடவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளவும். பச்சை வேர்க்கடலையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
மண் சட்டியில் அல்லது அடி கனமான வாணலியில் வேக வைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து... நறுக்கிய வாழைத்தண்டு, வேக வைத்த பச்சை வேர்க்கடலை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும். வெந்தவுடன் நெய்யில் வறுத்த சீரகம், கறிவேப்பிலை சேர்த்து, பால் கலந்து பரிமாறவும்.

மணத்தக்காளி சாறு
தேவையானவை:  மணத்தக்காளி கீரை - ஒரு கைப்பிடி அளவு, சின்ன வெங்காயம் - 4, பச்சை மிளகாய் - ஒன்று, அரிசி கழுவிய நீர் - 2 கப், தேங்காய்ப் பால் - ஒரு கப், எண் ணெய், உப்பு - சிறிதளவு.
செய்முறை:  சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளவும், மண் சட்டி அல்லது அடி கனமான வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், கீரை சேர்த்து நன்கு வதக்கி... அரிசி கழுவிய நீர் சேர்த்து வேகவிடவும். கீரை நன்கு வெந்த பின் அடுப்பிலிருந்து இறக்கி... உப்பு, தேங்காய்ப் பால் சேர்த்துப் பரிமாறவும்.

கொள்ளு இனிப்பு உருண்டை
தேவையானவை:  கொள்ளு - ஒரு கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - கால் கப், நெய் - சிறிதளவு.
செய்முறை: வாணலியில் நெய் விட்டு கொள்ளை லேசாக வறுத்து எடுத்து, குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும். பிறகு, நீரை நன்கு வடித்து... பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். இதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி, சின்னச் சின்ன உருண்டைகளாக பிடித்து சாப்பிடக் கொடுக்கவும்.

கம்பு மாவு தோசை
தேவையானவை:  கம்பு மாவு - 2 கப், உளுந்து - அரை கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உளுந்தையும், வெந்தயத்தையும் 3 மணி நேரம் ஊற வைத்து இட்லிக்கு அரைப்பது போல் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் கம்பு மாவு, உப்பு சேர்த்துக் கரைத்து, மறுநாள் சற்று கனமான தோசைகளாக வார்க்கவும் (தோசை வார்ப்பதற்கு முன் கரைத்த மாவில் அரை டேபிள்ஸ்பூன் எண்ணெய், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிள காயை சேர்த்துக் கொள்ளலாம்).
இதற்கு தொட்டுக் கொள்ள காரச்சட்னி ஏற்றது.

மரவள்ளிக்கிழங்கு பணியாரம்
தேவையானவை: மரவள்ளிக் கிழங்கு துருவல் - 3 கப், தோசை மாவு - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 8, பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன், எண் ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தேங்காய் துருவலுடன் காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம் சேர்த்து நீர் விடாமல் நைஸாக அரைக் கவும். இதனுடன் மரவள்ளிக்கிழங்கு துருவல், உப்பு சேர்த்து மேலும் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும். தோசை மாவை இதில் சேர்த்து நன்கு கலக்கவும்.
குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி, எண்ணெய் தடவி, காய்ந்ததும் மாவை ஊற்றவும். அடுப்பை 'சிம்’மில் வைத்து, பணியாரங்களைத் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

பூண்டு பொடி
தேவையானவை: நாட்டுப் பூண்டு - சுமார் 50 பல் (தோல் நீக்கவும்), உளுத்தம்பருப்பு - ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் கப், காய்ந்த மிளகாய் - 15, பெருங்காயம் - சிறு துண்டு, புளி - சின்ன நெல்லிக்காய் அளவு, கறிவேப்பிலை - 4 ஆர்க்கு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரிக்கவும். பிறகு, காய்ந்த மிளகாயை வறுத்தெடுக்கவும். பின்னர் பருப்பு வகைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு சிவக்க வறுத்தெடுக்கவும். வாணலியில் பூண்டு சேர்த்து சற்று நிறம் மாறும் வரை வறுத்தெடுக்கவும். மீதமுள்ள எண்ணெயில் புளியை சற்று மொறுமொறுப்பாக பொரித்தெடுத்துவிட்டு, கறிவேப்பிலையை வறுத்தெடுக் கவும்.
வறுக்கப்பட்ட அனைத் துப் பொருட்களும் ஆறிய தும் ஒன்றாகச் சேர்த்து, உப்பு கலந்து நைஸாக அரைக்கவும்.

சீராளம்
தேவையானவை: பச்சைப்பயறு - ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை கப், உளுத்தம்பருப்பு - கால் கப், காய்ந்த மிளகாய் - 8, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, தேங்காய் துருவல் - ஒரு கப்,  பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு
தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 8 (பொடியாக நறுக்கவும்), பூண்டு - 8 பல் (நறுக்கிக் கொள்ளவும்), கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பச்சைப்பயறு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை ஒரு மணி நேரம் ஊற வைத்து...  உப்பு, காய்ந்த மிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரவென்று அரைக்கவும். மாவை இட்லித் தட்டில் வேக வைத்து ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து... வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, உதிர்த்து வைத்துள்ள பருப்புக் கலவையை சேர்க்கவும். இறுதியாக தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி, கிண்ணங்களில் வைத்துப் பரிமாறவும்.

கீழாநெல்லி கீரை மசியல்
தேவையானவை: கீழாநெல்லி கீரை- ஒரு கைப்பிடி அளவு, பாசிப்பருப்பு - 100 கிராம், சீரகம் - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கீழாநெல்லி கீரையை நீரில் நன்கு அலசி, இலைகளை உருவிக் கொள்ளவும். இதனை பாசிப்பருப்புடன் சேர்த்து வேக வைக்கவும். மண்சட்டி அல்லது அடி கனமான வாணலியில் சிறிது நெய் விட்டு உருக்கியதும், வேக வைத்த கீரை, உப்பு, சீரகம் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.
கீழாநெல்லி கீரை உடலுக்குக் குளிர்ச்சி தரும். மஞ்சள்காமாலை நோயி னால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது நிவாரணம் அளிக்கும்.

வெண்ணெய் புட்டு
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், வெல்லம் - ஒரு கப், கடலைப்பருப்பு - கால் கப், தேங்காய் துருவல் - கால் கப், பால் - 200 மில்லி, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், வெண்ணெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: புழுங்கல் அரிசியை ஊற வைத்து... நைஸாக, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வெல்லத்தில் சிறிதளவு நீர் விட்டு, கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து இளம் பாகாகக் காய்ச்சவும். வெல்லப் பாகில் பாலை ஊற்றி, கொதித்து வந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் மாவை அதில் சேர்த்து நன்கு கிளறவும். மாவு சற்றே வெந்தவுடன், வேக வைத்த கடலைப்பருப்பு மற்றும் உப்பு சேர்க்கவும். முழுவதுமாக வெந்தவுடன் தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் தூவி கிளறி இறக்கவும்.
ஒரு பெரிய தட்டு எடுத்து அதில் வெண்ணெயைத் தடவி, செய்து வைத்திருக்கும் கலவையை அதில் போடவும். ஆறியதும் துண்டுகளாக்கிப் பரிமாறவும்.

சிம்ளி
தேவையானவை:  கேழ் வரகு மாவு - ஒரு கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், வேர்க்கடலை - கால் கப், எள் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: வேர்க்கடலை, எள் இரண்டையும் வாணலியில்  லேசாக வறுத்து, மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடிக்கவும். கேழ்வரகு மாவில் சிறிதளவு நீர் விட்டு நன்கு பிசைந்து கனமான ரொட்டியாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு சுட்டெடுத்து ஆறியதும் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். இதனுடன் பொடித்த வேர்க்கடலை - எள், வெல்லம் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதை கிண்ணத்தில் போட்டு, ஸ்பூன் வைத்து பரிமாறலாம் அல்லது உருண்டை பிடித்து சாப்பிடக் கொடுக்கலாம்.

பச்சப்புளி
தேவையானவை: புளி - எலுமிச்சை அளவு, காய்ந்த மிளகாய் - 4, சின்ன வெங்காயம் - 4,  சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு
செய்முறை: புளியைக் கெட்டியாக கரைத்து வடிகட்டவும். மிளகாயை அடுப்பில் வைத்து சுட்டு (கருகாமல்), புளி கரைசலில் சேர்த்து நன்கு பிசைந்து மிளகாய் சக்கையை எடுத்து விடவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், சீரகம், உப்பு சேர்த்துக் கலக்கவும்.
சூடான சாதத்தில் இதனை ஊற்றி சாப்பிட்டால்.. அசத்தலான சுவையில் இருக்கும்.

 


Related

30 நாள் 30 வகை சமையல் 7776562209644875518

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item