Saturday, August 3, 2013

எளிய பாட்டி வைத்தியம்

1. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

2. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

3. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

4. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

5. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

6. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

7. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

8. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

9. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.

10. எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

11. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

12. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

13. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

14. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

15. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

16. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.

17. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

18. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

19. தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

20. வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

21. வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

22. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.

23. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

24. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

25. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

26. கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

27. சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

28. நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

29. வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

30. பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

31. புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

32. பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

33. கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

34. சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

35. முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

47. கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

37. நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

38. பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

39. படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

40. நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

42. இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

43. மலச்சிக்கலுக்கு இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

44. கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

45. வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

46. ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

47. கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்

தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்

எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.

ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்.

கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும்.


மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது.


தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும். தயாரிக்கும் போது அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் ருசி அதிகமாக இருக்கும்.

பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.

வாஷ் பேசினில் இரண்டு அல்லது மூன்று ரசகற்பூரம் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வராது.

அடைக்கு அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும்.

இளம் காலை வெயிலிலும் மாலை வெயிலிலும் பிறந்தகுழந்தையை சிறிது நேரம் படுக்க வைத்தால் அந்த குழந்தைக்கு வைட்டமீன் ''D'' யும் கோடை காலத்தில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம் மலக்குடல் சிறப்பாக செயல்பட உதவும்.

பழைய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரீல் கேட் பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது.

மீன்தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும்.

சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது.

பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்து கொண்டால் கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.


உங்கள் வீட்டு .ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து ஃப்ரீஸருக்குள்ளும் ஃப்ரிஜ்ஜின் உள் மூலையிலும் போட்டு விடுங்கள். இனி ஃப்ரிஜ்ஜை திறந்தால் ஒரே கமகமதான்.


ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோவை திறக்கும் போது கமகமக்கும்.


துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.


நைலான் கயிரை வாங்கியவுடன்சோப்புநீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.


தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும்.


ஏலக்காயை பொடித்து அதன்விதைகளை உபயோகத்திற்கு எடுத்தபிறகு தோலை எறிந்து விடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும்.


நிறம் மங்கிய வெள்ளை துணிகளை வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும்.


மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.


பூண்டு உரிப்பதற்கு முன் தண்ணீரில் ஜந்து நிமிடம் போட்டு விட்டு உரித்தால் தோல் கைகளில் ஒட்டாது.


நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை சாம்பாரில் கலந்து விடுங்கள். நெய் மணம் கமழும் சாம்பார் ரெடி.


தேங்காயை ஃபிரிஜில் வைத்து ஜில்லென்று எடுத்து உடைத்தால் சுலபமாக உடைத்து விடலாம்.


மெழுகு வர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாது அதிக நேரம் எரியும்.


பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.


மிக்ஸியில் சட்னி மசாலா போன்ற வற்றை அரைத்து வழித்து எடுத்ததும் மீண்டும் ஜாரில் தண்ணீர் விட்டு மிக்ஸியை ஓட விடவும். அதனுள்ளே கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி மசாலா போன்றவை தண்ணீரோடு கரைந்து வந்து விடுவதால் ஜாரை சுத்தம் செய்வது மிகவும் சுலபம்.


நாலு இன்ச் பெயிண்ட் பிரஷ்ஷினால் வீட்டு ஜன்னல், டிவி, கீபோர்டு போன்றவற்றை சுத்தப்படுத்தினால் துணியால் துடைப்பதைவிட நன்றாக துடைக்க முடியும்.


குக்கர் காஸ்கட் தொளதொளவென்றாகிப் போனால் புது காஸ்க்ட் வாங்கும் வரை இந்த காஸ்கட்டை ஃபிரிஜின் ஃபிரிஸரில் வைத்து எடுத்துப் பயன்படுத்தினால் நான்கைந்து நாட்கள் வரை பயன்படும்.

நான்கு பாதாம் பருப்புகளை எடுத்து இரவில் ஊறவைத்து காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.

தினமும் சிறிது துளசி இலைகளை மென்று தின்றால் சுவாசப்பகுதி நோய்கள் வராது.


எலுமிச்சம் பழ சர்பத் தயாரிக்கும் போது கொஞம் இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

Friday, August 2, 2013

சமையல் செய்பவர்கள் அறிந்திருக்க வேண்டிய டிப்ஸ் -- வீட்டுக்குறிப்புக்கள்,

சமையலுக்கு உதவதற்காக குட்டிக் குட்டி டிப்ஸ்.கீழே தரப்பெற்றுள்ளன அவை  பல பேருக்குத் தெரிஞ்சும் இருக்கலாம், தெரியாமலும் இருக்கலாம். உங்களுக்குத் தெரியாத டிப்ஸை தெரிஞ்சுகொள்ளுங்கள்
* டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.
* மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.
* தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
* வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசை இரு புறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப் பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.
* தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.
* சமைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீ­ரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.
* வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.
* காலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக் கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.
* குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.
* நன்றாகக் காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்துத் தண்­ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.
* சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத் தேய்க்கலாம்
* வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.
* பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.
* வீட்டிலேயே கேக் செய்யும் பேது, பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்யத் தொடங்குங்கள்.
* தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்­ரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.
* இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.
* வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.
* ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள்.
* கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும்.
* வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீ­ர் வராது.
* பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் தண்­ர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில் முட்டையை போடவும் முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை. மிதந்தால் பழைய முட்டை.
* இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.
* காய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 2-3 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.
* கேக் பேக் செய்யும்போது தேவையான நேரத்திற்கு முன்பாகவே பேகிங் ஓவனைத் திறக்காதீர்கள்.
* தண்­ணீரில் சிறிதளவு வினிகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட சமைக்கலாம்.
* முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.
* உருளைக் கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது.

Thursday, August 1, 2013

வாழைப் பூ --வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!


மல்லிகைப் பூவை நாரில் தொடுத்தபடியே, அம்மணியின் முகத்தை வாசம்பா பார்க்க, பேச்சு வாழைப் பூ பக்கம் தாவியது. 
''புளிப்பு, தித்திப்பு என்றால் நாக்கை சப்புக்கொட்டிச் சாப்பிடறாங்க... வாரத்துக்கு ஒரு தடவையாவது வாழைப் பூ சமைச்சு சாப்பிடற வழக்கமே இன்னிக்கு இல்லாமப்போச்சு. அப்படியே சமைச்சாலும், வாழைப் பூவை அலசி, நெறையத் தண்ணிவிட்டு நல்லாப் பிழிஞ்சிடுறாங்க. துவர்ப்பு இருந்தால் சுவை இருக்காதுன்னு எண்ணம்தான். எல்லா வியாதிகளையும் குணப்படுத்துற தன்மை துவர்ப்புச் சுவையான வாழைப் பூவுக்குத்தான் உண்டு வாசம்பா. குடும்பத்துல ஒருத்தருக்காவது சர்க்கரை நோய் வர்ற அளவுக்கு எண்ணிக்கை அதிகரிச்சிட்டே இருக்கிற இந்தச் சமயத்துல, வாழைப்பூவை சாப்பிடறது ரொம்பவே நல்லது.  
வாழைப் பூவை நல்லா சுத்தம் செஞ்சு, சின்னச் சின்னத் துண்டுகளா நறுக்கி, எண்ணெயில் கடுகு, சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு தாளிச்சு பொரியல் செஞ்சு சாப்பிடலாம். வாரம் ரெண்டு தடவை வாழைப் பூவை உணவுல சேர்த்துக்கிட்டா, ரத்த மூலம் குணமாயிரும்.'' - வாழைப் பூவின் மருத்துவக் குணத்தைப் பற்றி அம்மணி அடுக்கினார்.
''சரி அம்மணி, விசேஷ நாட்கள்ல ஏன் வாழை மரத்தை வாசல்ல கட்டுறாங்க?''
''நம்ம முன்னோர்கள், வாழையை 'பெண் தெய்வமா’ ஆண்டாண்டு காலமா,  வழிபட்டுட்டு வந்தாங்க. திருமணமாகிப் போற பெண்டுக, புகுந்த வீட்டுக்காரங்க எல்லாரையும் எப்படி அரவணைச்சுப்போறாங்க. அந்தப் பெண்ணால, குடும்பத்துல அத்தனை பேருக்கும் பெருமை சேருது. அதுபோலதான் வாழையும். காய், கனி, இலை, பூ, தண்டு, பட்டைனு எல்லாத்தையும் தந்து, தழைச்சு வளரும்.'  
''ஓஹோ... இதைத்தான் 'வாழையடி வாழை’னு சொல்றாங்களா! வாழையை 'பெண்’ணுன்னு சொல்றியே... அது எந்தவிதத்துல நமக்கு உபயோகமா இருக்கு அம்மணி?''
''மாதவிலக்காகிறப்ப, சில பெண்களுக்கு அதிகமா ரத்தப்போக்கு இருக்கும். வாழைப் பூவுக்கு உள்ள இருக்கிற வெள்ளையான பாகத்தைப் பாதியளவு எடுத்து நசுக்கிச் சாறு எடுத்து, கொஞ்சம் மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்கவைச்சு, கூடவே பனங்கற்கண்டும் கலந்து குடிச்சிட்டு வந்தா,  ரத்தப்போக்கு சட்டுனு நிக்கும். அதோட உடல் அசதி, வயித்து வலி, சூதக வலி குறைஞ்சிடும்.
வாழைப் பூவை ரசம் வைச்சுக் குடிச்சா, வெள்ளைப்படுறது கட்டுப்படும். உடம்பு சூடு அதிகமாச்சுன்னா, வாழைப் பூவோட பாசிப்பருப்பு சேர்த்து வேகவெச்சுக் கூட்டு மாதிரி செஞ்சு நெய் சேர்த்து, வாரம் இரண்டு தடவை சாப்பிடணும்.''  
''ஆமா அம்மணி, உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? 'வேண்டாத மனைவி கைபட்டா குத்தம், கால் பட்டா குத்தம்’னு, வயக்காட்டுல வேலை செய்ற நம்ம அருக்காணியோட மகளை, புகுந்த வீட்டுக்காரங்க ஒதுக்கிவெச்சிட்டாங்களாமே. கல்யாணம் முடிஞ்சு ரெண்டு வருஷமாகியும் குழந்தையில்லையாம். ஆனா, அவ புருஷன் மட்டும் மனைவியை வந்து பார்த்திட்டுப் போறானாம்.''  
'' 'பருவத்தே பயிர் செய்’னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க. மவளுக்கு 28 வயசாகியும் கல்யாணம் கட்டாம இழுத்தடிச்சிட்டிருந்தா. இப்ப குழந்தை பாக்கியம் இல்லேன்னா என்ன செய்ய?''  
''வாழையடி வாழையா வம்சத்தைத் தழைக்கவைக்க வாழைப் பூ இருக்கே வாசம்பா. வாரம் ரெண்டு நாள் வாழைப் பூவை சமைச்சுச் சாப்பிட்டா,  குழந்தை இல்லையேங்கிற கவலை போய், பூ மாதிரி புள்ளை பிறக்கும். அவ புருஷனையும் சாப்பிடச் சொல்லலாம். ஆனா ஒண்ணு, குலையிலிருந்து பறிச்ச ரெண்டு நாளுக்குள்ள சமைச்சு சாப்பிட்டுடணும்.''
''வாழைப் பூக் குருத்தை பச்சையாவே சாப்பிடலாம். உடல் சூடு குறையும். குடல் புண் ஆறும். வாழைப்பூவுல உப்பு போட்டு அவிச்சு, அந்தச் சாறைக் குடிச்சா, வயித்துவலி உடனே சரியாயிரும்'' என்றபடியே எழுந்த வாசம்பாவின் கையைப் பிடித்து உட்காரவைத்த அம்மணி, ''என்ன கடுக்காய் கொடுக்கப் பார்க்கற? பூவைக் கட்டிட்டுதான் இந்த இடத்தைவிட்டு நகரணும்'' என்றாள்.

வெண்புள்ளிக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!

நம் உடலைப் போர்த்தியிருக்கும் சருமத்தின் எல்லாப் பகுதிகளிலும் இயல்பான நிறம் மாறி, வெள்ளை நிறம் தோன்றுவதை வெண்புள்ளி என்கிறோம். இது மெலனின் என்ற நிறமிக் குறைபாட்டால் ஏற்படுகிறது. வெவ்வேறு அளவுகள், வடிவங்களில் இருக்கும். 
இந்தப் புள்ளிகள் முதலில் ஓர் இடத்தில் தோன்றி, உடல் முழுவதும் பரவும். நிச்சயமாக,  இது தொற்று நோய் அல்ல.
காரணங்கள்:
 உணவில் புரதம் மற்றும் வைட்டமின் குறைபாடு
 வயிற்றில் உள்ள கிருமிகள்
 நாட்பட்ட வயிற்றுக் கோளாறுகள்
 ஹார்மோன் பாதிப்பு
 மன அழுத்தம்
 நோய்வாய்ப்பட்ட நிலை
 அமீபியாசிஸ்
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்
 கார்போக அரிசியைப் பொடித்து, கால் ஸ்பூன் எடுத்து உண்ணலாம்.
 காட்டுச் சீரகப் பொடி, மிளகுத் தூள் சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் நீரில் கலந்து சாப்பிடலாம்.
 நுணா இலைப் பொடி, சுக்குப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் சாப்பிடலாம்.
 அரை ஸ்பூன் கடுக்காய்ப் பொடியை நீரில் கலந்து உண்ணலாம்.
 அதிமதுரப் பொடி, மிளகுப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.
 வல்லாரை இலையை அரைத்து சுண்டைக்காய் அளவு காலையில் உண்ணலாம்.
 அரை ஸ்பூன் செங்கொன்றைப் பட்டைப் பொடியில் நீர் சேர்த்துக் காய்ச்சி வடித்து, கால் டம்ளர் அருந்தலாம்.
 அரை ஸ்பூன் அருகம்புல் பொடியில் ஆலம் பால் ஐந்து சொட்டுகள் கலந்து தொடர்ந்து 40 நாட்கள் தினமும் காலையில் உண்ணலாம்.
 வேப்பிலை, ஒமம் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடித்து, அரை ஸ்பூன் உண்ணலாம்.
 தராஇலை, ரோஜாப்பூ இதழ் இரண்டையும் சமஅளவு எடுத்து, உலர்த்திப் பொடித்து, அரை ஸ்பூன் உண்ணலாம்.
 கரிப்பான் இலைப் பொடி, சுக்குப் பொடி சம அளவு கலந்து, அரை ஸ்பூன் உண்ணலாம்.
வெளிப்பிரயோகம்:
 கற்கடாகசிங்கியைக் காடி நீரில் அரைத்துப் பூசலாம்.
 கார்போக அரிசியையும், புளியங்கொட்டையையும் நீரில் ஊறவைத்து, அரைத்துப் பூசலாம்.
 கண்டங் கத்தரிப் பழத்தைக் குழைய வேகவைத்து வடித்து, அதில் ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சிப் பூசலாம்.
 துளசி இலையை மிளகுடன் சேர்த்து அரைத்துப் பூசலாம்.
 முள்ளங்கி விதையைக் காடி நீரில் அரைத்துப் பூசலாம்.
 மருதோன்றி இலைச் சாற்றில் தாளகத்தை இழைத்துப் பூசலாம்.
 காட்டு மல்லிகை இலையை அரைத்துப் பூசலாம்.
 சிவப்புக் களிமண்ணை இஞ்சிச் சாற்றில் கலந்து பூசலாம்.
 மஞ்சளை நீர் சேர்த்துக் காய்ச்சி, வடித்து, அதில் கடுகெண்ணெய் சேர்த்து, நீர் வற்றும் வரை காய்ச்சிப் பின் பூசலாம்.
 செங்கொன்றைப் பட்டையை அரைத்துப் பூசலாம்.
 சேராங்கொட்டைத் தைலத்தைப் பூசலாம்.
சேர்க்க வேண்டியவை:
பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொட்டைகள், சிவப்புக் கீரை, பொன்னாங்கண்ணி, பசலைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, கறிவேப்பிலை, இஞ்சி
தவிர்க்க வேண்டியவை:
காபி, தேநீர், சர்க்கரை, வெண்மையான மாவுப் பொருட்கள், தீட்டப்பட்ட தானியங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு, புளிப்புப் பொருட்கள் மற்றும் மீன்.

''தினமும் தயிர் சாப்பிடுவது நல்லதா? ''யாரெல்லாம் மோர் சாப்பிடலாம்?''

டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு?
தமிழர்களின் உணவில் இரண்டறக் கலந்தது மோர் மற்றும் தயிர். தயிர் உடலுக்குச் சூடு என்பார்கள். அதே தயிரை நீர் மோராக்கினால் உடலுக்குக் குளிர்ச்சி. இப்படிப் புரியாத புதிராக உள்ள தயிர் மோரை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதில் ஏற்படும் சந்தேகங்களைப் போக்குகிறார் திருச்சியைச் சேர்ந்த டயட்டீஷியன் ஷீலா.

 
''தினமும் தயிர் சாப்பிடுவது நல்லதா? யாரெல்லாம் சேர்த்துக்கொள்ளக் கூடாது?''
'புரதம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி 12, ரிபோஃப்ளோவின் எனப்படும் வைட்டமின் பி2, கொழுப்புச் சத்து எனப் பல சத்துகள் தயிரில் உண்டு.  100 மி.லி தயிரில் 60 கலோரி கிடைக்கிறது. ஒல்லியாக இருப்பவர்கள், நுரையீரலில் பிரச்னை உள்ளவர்கள் நிச்சயம் தயிர் சாப்பிட வேண்டும். மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள் செரிமானமாக நேரம் எடுத்துக்கொள்ளும் உணவுகள், பிரியாணி போன்ற உணவைச் சாப்பிடும்போது தயிர் அல்லது மோர் சாப்பிட்டால் நல்லது. ஏனெனில், இவை உணவு செரிக்கத் தேவையான பாக்ட்டீரியாக்களை உருவாக்குகின்றன. அதனால்தான் தமிழர்கள் தங்கள் உணவில் கடைசியாக தயிர் அல்லது மோர் சேர்த்துக் கொள்கின்றனர். எடை அதிகரிக்க விரும்புபவர்கள், தயிரில் சர்க்கரை கலந்து லஸ்ஸி போல் சாப்பிடலாம். ஆனால், இரவில் தயிர் சேர்த்துக்கொண்டால்,  உடனடியாகத் தூங்க செல்லாமல், 10 நிமிடம் நடைப் பயிற்சி செய்தபின்னர்தான் படுக்கைக்குச் செல்லவேண்டும்.  உடல் பருமன் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் அதிக அளவு தயிர் சேர்த்துக்கொள்ளக் கூடாது.'
''யாரெல்லாம் மோர் சாப்பிடலாம்?''
''100 மி.லி. மோரில் வெறும் 15 கலோரிதான் கிடைக்கிறது. ஆனால், இதில் நிறைய சத்துகள் இருப்பதால், எல்லோரும் மோர் அருந்தவேண்டியது அவசியம். எந்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் மோர் குடிக்கலாம். தினமும் மோர் குடிப்பது உடலுக்கு நல்லது. அதிக எடையால் பாதிக்கப்பட்டவர்கள் மோர் அதிகளவு குடிக்கவேண்டும். மோருடன் இஞ்சி, வெந்தயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றைச் சேர்த்து அருந்துவது இன்னும் நல்லது.  மோர் உடல் வெப்பத்தைக் குறைக்கும். சளி பிடித்திருப்பவர்கள் மோரை மிதமான சூடு செய்து குடிக்கலாம். பெப்டிக் அல்சர் வராமல் தடுக்க, பித்தப்பை மற்றும் சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தவிர்க்க தினமும் மோர் அருந்துவது அவசியம்!

புளிச்சக் கீரையைப் பயன்படுத்தி சட்னி தயாரிக்கும் முறை --- சட்னிகள்,

அம்மா ரெசிபி!
'புளி அதிகம் சேர்ப்பது உடலுக்குக் கெடுதி. ஆனால், புளிப்பு சுவை இல்லாமல் நம்மால் இருக்கமுடியுமா?  குழம்பு முதல் ஊறுகாய் வரை அனைத்துமே புளிப்புடன் இருந்தால், எக்ஸ்ட்ராவாக நாலு கவளம் தொண்டையில் இறங்கும்.  அதனால்தான் எங்கள் வீட்டில் புளிச்சக் கீரையைப் பயன்படுத்தி சட்னியாக செய்துவைத்துக்கொள்வோம். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும்.  தோசை, இட்லிக்கும் தொட்டுக்கொள்ளலாம்'' என்கிற ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த மாதங்கி, புளிச்சக் கீரையைப் பயன்படுத்தி சட்னி தயாரிக்கும் முறையை கூறுகிறார்.

தேவையான பொருட்கள்:  புளிச்ச கீரை (கோங்குரா) - 2 கட்டு, காய்ந்த மிளகாய் - 4, பச்சை மிளகாய் - 6, கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் - சிறுதுண்டு, மஞ்சள் தூள் - சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் வெந்தயத்தை வறுத்துக்கொள்ளவும்.  இரண்டு குழிக் கரண்டி எண்ணெயை அதில் விட்டு, பெருங்காயத்தைப் பொரித்து எடுக்கவும். அதேபோல், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாயை வதக்கி எடுக்கவும்.  கீரையை நரம்பில்லாமல் ஆய்ந்து நன்றாகக் கழுவி நீரை வடித்துக்கொள்ளவும்.  கடாயில் எண்ணெய் விட்டு புளிச்சக் கீரையைப் போட்டு சுருள வதக்கவும்.  
கீரையைத் தவிர, வதக்கிய எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, மஞ்சள் தூள், உப்பு போட்டு மிக்ஸியில் அரைத்துப் பொடிக்கவும்.  கீரையையும் போட்டு நன்றாக மசிய அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, விழுதைப் போட்டு சுருளக் கிளறி இறக்கவும்.    
இயற்கை மற்றும் ஹோமியோபதி மருத்துவர் ஜீவா சேகர்:
புளிச்சக் கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.  கர்ப்பிணிகள் அடிக்கடி சாப்பிட்டால் குமட்டல் இருக்காது. இரும்புச் சத்து நிறைந்த மாத்திரைகளைச் சாப்பிடுவதைக்காட்டிலும் இந்தக் கீரை இயற்கையான இரும்புச் சத்தை உடலுக்கு அளிக்கிறது.  நாவில் உள்ள சுவை நரம்புகளைத் தூண்டும்.  இந்தச் சட்னி செய்யும்போது, காரத்தைக் குறைவாக சேர்ப்பது நல்லது.

அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! --- ஹெல்த் ஸ்பெஷல்,

சமீபத்தில் 'ஆர்கைவ்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசன்ஸ்’ என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி பலரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.  'நாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்களின் ஆயுள் குறையும், சில மணித்துளிகள் உட்காருபவர்களுக்கு ஆயுள் கெட்டி!’ என்பதுதான் அந்த ஆராய்ச்சியின் முடிவு. அதிக நேரம் உட்கார்ந்தே பணிபுரிவதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கும் நிலையில், 
''நீங்கள் கடின உழைப்பாளியாக இருந்தாலும், வாழ்நாளில் பாதி நாட்கள் சேரில் உட்கார்ந்து, உங்கள் ஆயுளைக் குறைத்துக்கொள்ளாதீர்கள்'' என்று எச்சரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த இதயம் தொடர்பான பிசியோதெரபிஸ்ட் மற்றும் மறுவாழ்வு சிறப்பு நிபுணரான அமல் மோகன்.
''அதிக நேரம் உட்கார்ந்திருப்பவர்களுக்கு எலும்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். அலுவலகத்தில் உட்கார்ந்த நிலையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்திருக்கிறது. குறைந்தது எட்டு மணி நேரம் சேரில் ஆணி அடித்ததுபோல் இடைவிடாது உட்கார்ந்து வேலை செய்கின்றனர். இப்படித் தினமும் எட்டு மணி நேரம் தொடர்ந்து, வாரக்கணக்கில் உட்கார்ந்திருக்கும்போது, தசைகளின் செயல்பாடுகள் குறைந்து, தசைகள் இறுக ஆரம்பிக்கும். அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க, தசைகள்தான் 'பவர் ஹவுஸ்’ போன்று செயல்படுகிறது. அதில் பிரச்னை ஏற்பட்டால் கலோரிகள் சரிவர எரிக்கப்படாது. சுறுசுறுப்பாக ஓடி ஆடும்போதும், உடற்பயிற்சி செய்யும்போதும் ஆக்சிஜன் அதிகம் உள்வாங்குவது இயல்பு. ஆனால், ஒரே இடத்தில் எந்தவித அசைவும் இன்றி இருந்தால், கலோரிகள் எரிக்கப்படுவது குறைந்துவிடும். இதனால் உடலில் குளுகோஸின் அளவில் மாற்றம் ஏற்படும். முடிவில் நீரிழிவு நோயில் (டைப் 2 டயாபடீஸில்) கொண்டுவிடும்.
இதையும் கவனிக்காமல் அலட்சியமாக இருந்தால், பிரச்னைகள் இன்னும் தீவிரமடையும். இப்படியே தொடர்ந்து ஆறு வாரம் உட்கார்ந்திருக்கும் நேரத்தைக் குறைக்காமல்போனால், உடலில் 'எல்.டி.எல்.’ என்ற கெட்டக் கொழுப்பு அதிகரிக்கும். உடலில் இன்சுலின் சுரப்பில் மாற்றங்கள் ஏற்படுவதால், 'டிஸ் லிபிடெமியா’ அல்லது 'ஹைபர் லிபிடெமியா’ போன்ற பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.
தினமும் ஆறு முதல் எட்டு மணி நேரம் என, தொடர்ந்து ஒரு வருஷம் வரை நாற்காலியில் உட்காரும்போது, 'ஒபிசிட்டி’ என்ற உடல் பருமன் பிரச்னை தலைத்தூக்கும். உடல் உழைப்பு இல்லாமல் நீண்ட காலம் ஒரே இடத்தில் இருப்பதால், காலப்போக்கில் 'போன் மேரோ டென்சிட்டி’ என்ற எலும்பின் உறுதித்தன்மை, ஒரு வருடத்துக்கு ஒரு சதவிகிதம் வரை குறைய ஆரம்பிக்கும்.
உட்கார்ந்த நிலையில், அலுவலகப் பணிகளை முடிக்க முடியாமல் போகும்போது, கூடவே மன அழுத்தம் ஏற்பட்டு, 'கேட்டகோலமைன்’ என்ற ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். இதனால் இதய நோய் வரலாம். 'கரோனரி ஹார்ட் டிசீஸ்’ என்ற இதய சம்பந்தமான பிரச்னைகள் அதிகரிக்கும். இதற்கு மூல காரணம், சர்க்கரை வியாதி அல்லது டிஸ் லிபிடெமியாதான். ஆண்களுக்கு ப்ராஸ்ரேட் கேன்சர், பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் வரவும் வாய்ப்புகள் உள்ளன.  கோலன் கேன்சரும் (இரைப்பையில் ஒரு பாகம் - ஒபிசிட்டி இருப்பவர்களுக்கு அதிகம் வரக்கூடிய நோய்) வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன'' என்ற அமல் மோகன், தொடர்ந்து தவறான பொசிஷனில் உட்கார்ந்தால் 'பாஸ்சர்ஸ் ஸ்கோலியசிஸ்’ என்ற பிரச்னை ஏற்படலாம். முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு, முதுகு வலி வரலாம். கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் இருப்பதால், 'ரேடியேட்டிங் பெய்ன்’ (ராடிகலோபதி) என்ற பாதிப்பும் ஏற்படக்கூடும். மேலும், கால்களை தொங்கவிட்டபடி உட்கார்ந்திருக்கும்போது, காலில் வீக்கம், வலி, மறத்துப்போதல் போன்றவை ஏற்படலாம்'' என்கிறார்.

ரிலாக்ஸ் டிப்ஸ்...

 ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து நின்று, சிறிது தூரம் நடக்க வேண்டும்.
 உட்கார்ந்தபடியே கால்களுக்கு அசைவு கொடுப்பதுபோல், எளிய பயிற்சிகள் செய்யலாம்.
 வீடு மற்றும் அலுவலகத்தில் லிஃப்ட்டில் போகாமல் படிகளைப் பயன்படுத்தலாம்.
 கடைத்தெருவுக்கு டூவீலரில் போகாமல், காலார நடக்கலாம்.
 அலுவலகத்துக்குள் இன்டர்னல் மெயில் அனுப்புவதற்கு பதில், சிறிய நடை நடந்து கேபினுக்குச் சென்று கைகுலுக்கலாம்.
 பிரேக் நேரங்களில் டீ ஆர்டர் பண்ணாமல், பக்கத்தில் இருக்கும் கேன்டீனுக்கு நடந்து சென்று காபி அருந்தலாம். 

படுத்தநிலை ஆசனங்கள் --- ஆசனம்,

ஆசனங்களைச் செய்யும் முன் உடல், மூச்சு மற்றும் மனம் மூன்றும் தயாராக இருக்க வேண்டும். இந்த மூன்றும் சரியாக, இயல்பாக இணையும்போதுதான் பலன்கள் அதிகம் கிடைக்கும். மேலும், ஆசனங்களை எந்தப் பிரச்னையும் இன்றி நல்லமுறையில் செய்ய முடியும். மாற்று ஆசனமும் (Counter Pose), ஓய்வும்கூட சரியாக இடம்பெறும்போதுதான் பிரச்னைக்கு வழியில்லாமல் போகும். 
இப்படி ஒவ்வோர் ஆசனத்தையும் அறிவியல்பூர்வமாக வரிசைப்படுத்துவதால், அதற்கான பலனை அளிப்பதுடன், அடுத்த ஆசனம் செய்யவும் நம்மை தயார் செய்கிறது. அந்தவகையில்தான் சென்ற இதழில் ஓய்வோடு முடித்தோம். அதன்பிறகு செய்ய வேண்டிய பெண்களுக்கான ஆசனங்கள் சிலவற்றை இப்போது பார்ப்போம்.
ஜதார பரிவிருத்தி தழுவல்
முதுகை தரையில் வைத்துப் படுக்கவும். கால்களை மடக்கி, சிறிது இடைவெளியுடன் உடலுக்கு நெருக்கமாக வைத்துக்கொள்ளவும். கைகளை தோள்பட்டைவரை பரப்பி, உள்ளங்கைகளை தரையைப் பார்த்தபடி வைக்கவும். இந்த நிலையில், மூச்சை உள்ளிழுத்துக்கொள்ளவும். பிறகு, வெளியேவிட்டபடி கால்களை இடப்பக்கமாகச் சாய்க்கவும். தலையை தரையை ஒட்டியபடியே வலப்பக்கம் கொண்டு செல்லவும். பிறகு மூச்சை உள்ளிழுத்தபடி முட்டியையும் தலையையும் நேராக்கிக்கொள்ளவும்.
மூச்சை வெளியே விட்டவாறு முட்டியை, வலப்பக்கம் கொண்டு செல்ல, தலை இடது பக்கம் போகும். இது ஒரு சுற்று. இதுபோல ஆறு முறை செய்ய வேண்டும். பிறகு இருகால்களையும் நீட்டி, கைகளை உடலுக்குப் பக்கத்தில் வைத்துக் கொள்ளவும்.
பலன்கள்: மேல் உடலின் இறுக்கம், பிடிப்புகளை தளர்த்தும். வலி இருந்தால் குறையும்.  முதுகெலும்பு நன்கு அசை வதால் அந்தப் பகுதி நன்கு வேலை செய்யும். கழுத்துப்பகுதி நன்றாக அசைவுப் பெறும். வயிற்றுப் பகுதி நன்கு வேலை செய்யும்.
அபானாசனம்
முதுகு தரையில்படும்படி படுக்கவும். கால்களை மடித்து சற்று உயர்த்திய நிலையில் முட்டிகளை உள்ளங்கைகளால் பிடித்துக்கொள்ளவும். இருமுட்டிகளுக்கும் இடையில் சிறிது இடைவெளி இருக்கட்டும். மூச்சை உள்ளிழுத்துக்கொள்ளவும். பிறகு, மூச்சை வெளியே விட்டபடி முட்டிகளை மார்புப் பக்கம் கொண்டு செல்லவும். பிறகு, மூச்சை உள்ளிழுத்தபடியே பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு ஆறு முறை செய்யவும்.
பலன்கள்:  வயிறு நன்றாக அமுக்கப்படுவதால் அப்பகுதி மசாஜ் செய்யப்பட்ட உணர்வு ஏற்படும். முதுகு, தோள்பட்டையில் ஆரோக்கியம் பெறும். வயிறு சம்பந்தமான பிரச்னைகள் குறைந்து, அடிவயிற்றில் தேங்கி இருக்கும் கழிவுகள் நீங்கும்.
 ஊர்துவ பிரஸ்ரித பாதாசனா
முதுகுத் தரையில் இருக்கும்படி படுக்கவும். கைகள் உடலை ஒட்டியும், உள்ளங்கைகள் தரையைப் பார்த்தும் இருக்கட்டும். உடலை அசைக்காமல் மூச்சை உள்ளிழுத்து, வெளியே விட்டவாறே இடது காலை மேல் நோக்கித் தூக்கவும். எவ்வளவு தூரம் நேராக்க முடியுமோ அவ்வளவு தூரம் உயர்த்தலாம். ஓரிரு வினாடிக்குப் பிறகு மூச்சை உள்ளிழுத்தபடி இடது காலை தரைக்குக் கொண்டு வரவும். பிறகு, மூச்சை வெளியே விட்டபடி வலது காலை மேல்நோக்கித் தூக்கவும். மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு தரைக்குச் கொண்டு வரவும். இது ஒரு சுற்று. இவ்வாறு ஆறு முறை செய்ய வேண்டும்.
பலன்கள்: அடிவயிற்று தசைகள் இறுக்கம் அடைவதால், தொப்பை குறையும். முட்டியின் பின்புறம் நன்கு நீட்டப்படும். கெண்டை சதை நன்கு வேலை செய்யும். கணுக்கால் இறுக்கம் நீங்கி, நெகிழ்வுத் தன்மையைப் பெறும். இடுப்புப் பகுதி நன்கு வேலை செய்யும்.
அபானாசனாவில் இருந்து ஊர்துவப்பிரஸ்ரித பாதாசனா
முதுகுப் பக்கம் தரையில் படும்படி படுக்கவும். கால்களை மடக்கி உள்ளங்கைகளால் முட்டியைப் பிடித்துக்கொள்ளவும். இந்த நிலையில் இருந்து மூச்சை உள்ளிழுத்தபடி உள்ளங்கைகளின் உதவியோடு கால்களை நேராக்க வேண்டும். பாதங்களை சற்று தரையை நோக்கி நகர்த்தவும். பிறகு மூச்சை வெளியில் விட்டவாறு முட்டிகளை மடக்கி அபானாசனாவுக்கு வர வேண்டும். இதுபோல ஆறு முறை செய்யவும்.
பலன்கள்: முன்பு பார்த்த அபானாசனாவின் பலன்களுக்கு மேல் முட்டிகள் நன்கு வேலை செய்யும். பாதங்கள், அது சார்ந்த பகுதிகள் வளைந்துகொடுக்கும் தன்மையைப் பெறும்.
த்துவிபாதபீடம் தழுவல்
தரையில் முதுகு படும்படி படுத்து, கால்களை மடக்கி உடலுக்கு அருகில் வைத்துக்கொள்ள வேண்டும். இரு பாதங்களுக்கு இடையில் சற்று இடைவெளி இருக்கட்டும். கைகள் உடலுக்கு அருகில் இருக்க வேண்டும். இந்த நிலையில் இருந்து, மூச்சை உள்ளிழுத்தபடி, இடுப்பையும், கைகளையும் ஒரே நேரத்தில் மேலே தூக்க வேண்டும். கைகள் மேல் சென்று தலைக்கு மேல் தரையில் இருக்கும். ஓரிரு வினாடிக்குப் பிறகு, மீண்டும் பழைய நிலைக்கு மூச்சை வெளியே விட்டவாறு வர வேண்டும். இவ்வாறு ஆறு முறை செய்ய வேண்டும்.
பலன்கள்: கீழ் முதுகு நன்கு வேலை செய்வதுடன், பலம் பெறும். முழு முதுகெலும்பும் நீட்டப்படும். மேல் முதுகு இழுக்கப்பட்டு பயன்பெறும். கணுக்கால்களும் முட்டிகளும் பலம் பெறும்.
த்துவிபாத பீடத்துக்குப் பிறகு கால்களை நீட்டி சற்று ஓய்வு எடுத்துவிட்டு, மீண்டும் அபானாசனத்தை ஆறு முறை செய்யவும். அதன்பிறகு தேவையெனில் சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம்.

தினந்தோறும் ஆரோக்கியம் - பளிச் டிப்ஸ் -- உடற்பயிற்சி,


தினமும் எழுந்து, அன்றாட வேலைகளைச் செய்து, அரக்கபரக்க அலுவலகத்துக்கு ஓடுகிறோம்.  மாலை வீட்டுக்கு வந்ததும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்த்துவிட்டு, இரவு தூங்குகிறோம். ஆனால், ஆரோக்கியமாக வாழ்வது பற்றிய விழிப்பு உணர்வு என்பது நம்மில் பலரிடம் இல்லை என்பதுதான் உண்மை. நாம் செய்யும் அன்றாட வேலைக்கு நடுவில் உடல் நலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க மறந்துவிடுகிறோம். அல்லது, செய்யும் வேலையே உடலுக்குப் பயிற்சிதானே என்று அசட்டையாக இருந்துவிடுகிறோம். காலையில் எழுந்தது முதல், இரவு படுக்கச் செல்லும் வரை ஒருவர் ஆரோக்கியமாக இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என, மருத்துவர், ஊட்டச் சத்து நிபுணர் மற்றும் உடற்பயிற்சி ஆலோசகர் இங்கே ஆரோக்கிய விஷயங்களை அள்ளித் தந்திருக்கின்றனர்.  இந்த கையேடு உங்கள் கைவசம் இருந்தால், நோய் நொடியில்லாத நிம்மதியான சந்தோஷமும், வாழ்வின் மீதான நம்பிக்கையும், உற்சாகமும் பிறக்கும் என்பது  நிச்சயம்!  
 தினமும் எழுந்தது முதல் செய்ய வேண்டிய ஆரோக்கிய விஷயங்கள்குறித்து எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர் நந்தகுமார் காட்டும் வழி முறைகள்...
ஆரோக்கியவாழ்வுக்கு ஐந்து வழிகள்:
1 ஒவ்வொருவர் வீட்டிலும் எடை பார்க்கும் கருவி வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். தினமும் காலையில் எழுந்ததும், எல்லா வயதினரும் தங்கள் எடை எவ்வளவு என்று பார்க்க வேண்டும். இப்படிப் பார்க்கும்போது உடல் எடை சற்று கூடியிருந்தால், நாள் முழுக்க நம் மனதில் அது நிழலாடும். அப்போதுதான் அன்று கொஞ்சம் கூடுதலாக உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்று கடைப்பிடித்து எடையைக் குறைக்க முயற்சி எடுக்க முடியும்.
2 காலையில், காலைக்கடனை முடித்துவிட்டு நடைப்பயிற்சியில் ஈடுபட வேண்டும். குழந்தைகள், 40 வயதுக்கு உட்பட்டவர்கள், இதய நோய், மூட்டு வலி போன்ற பிரச்னை இல்லாதவர்கள் நடைப்பயிற்சிக்குப் பதில், ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது.
 40 வயதைக் கடந்தவர்கள், வயதானவர்கள் நடைப் பயிற்சி செல்லலாம். அதுவும் 'பிரிஸ்க் வாக்’ எனப்படும் வேக நடைப் பயிற்சி செல்வது அவசியம். சாதாரணமாக நடப்பதால், எந்த பலனும் இல்லை. 'பிரிஸ் வாக்’ செய்யும்போதுதான், உடலுக்கு அதிக அளவு நன்மை கிடைக்கும்.  
 நடக்கும்போது அருகில் உள்ளவரிடம் பேசுகிறோம் என்றால், நமக்கு மூச்சு வாங்கக் கூடாது. அப்படி மூச்சு வாங்குவதாக இருந்தால், நாம் மிகவும் வேகமாக நடக்கிறோம் என்று அர்த்தம். வேகத்தைக் குறைத்துக்கொண்டு, நடைப்பயிற்சியைத் தொடரலாம்.
 ஒரே சாலையில் நடைப்பயிற்சி செல்வதற்கு பதில், அவ்வப்போது நடக்கும் இடத்தை மாற்றிக்கொள்ளலாம். இதனால் மனதில் சோர்வு ஏற்படாது.
 மழை நேரத்தில் வீட்டுக்குள்ளேயே நடைப்பயிற்சி செய்யலாம். வசதியிருந்தால், நல்ல தரமான ட்ரெட் மில் இயந்திரத்தில் வாக்கிங் செய்யலாம்.
 நடைப்பயிற்சி செய்யும்போது மூட்டுகள், தசைகள், எலும்புகள் வலுவடையும். எலும்பு உறுதியாக இருக்க, கால்சியம் அவசியம். உடற்பயிற்சி செய்வதால், கால்சியத்தை எலும்பு நன்கு கிரகிக்கும். இல்லையெனில் என்னதான் கால்சியம் சத்து மாத்திரை எடுத்துக்கொண்டாலும் அத்தனையும் வெளியேறிவிடும்.
 நடைப்பயிற்சி என்பது 30 முதல் 45 நிமிடங்களுக்கு இருக்க வேண்டும். மெதுவாக நடைப் பயிற்சியை ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரிக்க வேண்டும். அதேபோல், வேகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து நடைப்பயிற்சியை முடிக்க வேண்டும்.
 இதன் பிறகு, ஜிம் உடற்பயிற்சிகள் செய்யலாம். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஜிம்மில் செய்யக்கூடிய எடைப் பயிற்சிகளை செய்யலாம். 90 வயதினர்கூட ஜிம் பயிற்சியைச் செய்யலாம். அவர்களுக்கு ஏற்ற வகையில் எடை குறைவாக வைத்து செய்யும்போது தசைகள் வலிமையாக, இளமையாக, ஆரோக்கியமாக இருக்கும்.  
 யோகா, தியானம் போன்ற பயிற்சிகளிலும் ஈடுபடலாம். அனைத்துப் பயிற்சிகளையும் விட சிறந்தது நீச்சல் பயிற்சி. இந்தப் பயிற்சி செய்யும்போது, மூட்டுகளுக்கு அழுத்தம் செல்லாது.  முழு உடலுக்கும் பயிற்சி கிடைக்கும்.
 பெண்கள், பெருக்குவது, துடைப்பது, பாத்திரம் கழுவுவது போன்ற வேலைகளையும் தாண்டி,  தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
3 காலை உணவைச் சாப்பிட்டுவிட்டு அன்றைய வேலையில் ஈடுபடலாம். அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதற்கு பதில், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை சிறிய நடைப்பயிற்சியில் ஈடுபடலாம். அலுவலகத்தை இரண்டு முறை சுற்றிவந்தாலே போதுமானது.
 அலுவலகத்தில் லிஃப்ட் பயன்படுத்துவதற்குப் பதில், படிக்கட்டுகளைப் பயன்படுத்துவதும் ஒருவகையில் பயிற்சியாக இருக்கும். முடியாத நேரத்தில் மட்டும் லிஃப்ட் பயன்படுத்தலாம்.  
 ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடாமல் உணவை ஐந்து அல்லது ஆறு சிறிய பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடும்போது உடலின் வளர்ச்சிதை மாற்ற விகிதம் (மெட்டபாலிசம் ரேட்) அதிகரிக்கும்.
 குழந்தைகள் பள்ளிக்கு அதிக எடைகொண்ட புத்தகப் பையைச் சுமந்து செல்வதைத் தவிர்க்க வேண்டும். இதனால், அவர்கள் முதுகு வளைந்து, நடக்கும் முறையிலேயே மாற்றம் ஏற்படலாம்.
4மதிய உணவுக்குப் பிறகு 10-15 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். அதன்பிறகு 10 முதல் 20 நிமிடங்கள் தூங்கலாம்.
 வெப்ப மண்டல நாட்டில் இருந்தாலும் உலகிலேயே வைட்டமின் டி குறைபாடு அதிகம் உள்ளவர்கள் நாம்தான். தினமும் அரை மணி நேரம் சூரிய ஒளி நம் மீது பட்டாலே தேவையான வைட்டமின் டி-யை நம்முடைய உடல் கிரகித்துக்கொள்ளும்.
 ஜங்க் ஃபுட், எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். மாதத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை என்ற அளவில் வைத்துக்கொள்வது நல்லது.
5 மாலையில் அலுவலகத்தில் இருந்து திரும்பும்போது, வீட்டுக்கு நடந்தே செல்வது நல்ல உடற்பயிற்சி. வெகு தூரத்தில் இருப்பவர்கள், குறைந்த தூரமாவது நடக்க வேண்டும்.
 குழந்தைகளை கம்ப்யூட்டர், டி.வி. முன் அமர்ந்திருக்கவிடாமல், எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெளியில் விளையாட அனுமதிக்க வேண்டும். இப்படிச் செய்வதால் தசைகள், எலும்புகள் வலு பெறும், நன்கு வளர்ச்சியடையும்.
 இரவு சாப்பிட்டதும் உடனே படுக்கச் செல்லக்கூடாது. 15 நிமிடங்கள் வாக்கிங் சென்றுவிட்டு வந்து, மீண்டும் உங்கள் எடை எவ்வளவு என்று பார்க்க வேண்டும்.
 உடற்பயிற்சிகளை வாரத்துக்கு நான்கு நாட்கள் செய்தால் போதும். இரண்டு நாட்கள் சிறிய அளவில் பயிற்சிகள் செய்துகொள்ளலாம். ஒருநாள் முற்றிலும் செய்யாமல் ஓய்வு எடுக்கலாம்.
 வயோதிகர்கள் நடக்கும்போது தடுக்கி விழாமல் இருக்க, எப்போதும் கையில் ஸ்டிக் வைத்திருப்பது அவசியம்.
தினசரி வாழ்வில் இவற்றைக் கடைப்பிடித்துவந்தால் எந்த ஒரு நோயும் உங்களை அண்டாது.
ஒவ்வொரு நாளும் ஊட்டமான உணவு!
உழைக்க வேண்டும், பணம் சம்பாதிக்கவேண்டும் என்று சதா சர்வகாலமும் ஓடித் திரிகிறோம். உழைப்பில் காட்டும் அக்கறையை, உடலுக்குக் காட்டுவதில்லை. மனம் விரும்பும்படி உழைக்க ஆரோக்கியமான உணவு உண்ணுவது முக்கியம். சத்தான உணவை நன்றாக உண்ணும்பட்சத்தில் உடல்நலக் குறைவுக்கு எதிராக நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள முடியும். கொஞ்சமும் களைப்பு இன்றி, நீண்ட நேரம் ஆரோக்கியமாக இருக்க முடியும். உணவு மற்றும் சிற்றுண்டியைக் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். உணவைத் தவறவிடுதலும், ஆரோக்கியமற்ற உணவை உண்ணுவதாலும், மன அழுத்தம், சோர்வு, உடல் நலக் குறைவு போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும்.
''காலை டிஃபன், மதியம் உணவு இடைப்பட்ட நேரத்தில் ஸ்நாக்ஸ், பழங்கள், காய்கறி சாலட் இரவு பாதி வயிறு உணவு எனப் பட்டியலிட்டு உரிய நேரத்தில் ஊட்டமான உணவை உட்கொண்டால், நோய் நம்மை நெருங்காது. நீண்ட ஆயுளுடன் நிம்மதியாக வாழலாம்'' என்கிற டயட் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி ஒருநாள் உணவைப் பட்டியலிடுகிறார் இங்கே...    
  இந்தத் தினசரி உணவுக் கையேடானது எந்தவித உடல் நலப் பிரச்னையும் இல்லாத, ஆரோக்கியமாக இருக்க விரும்புகிறவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது. கர்ப்பிணிகள், இதய நோய், சர்க்கரை நோயாளிகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கான உணவு பட்டியலை மருத்துவர் மற்றும் டயட் வல்லுநரின் ஆலோசனையைப் பெற்று பின்பற்றுவது நல்லது.
2 வயது முதல் 10 வயது வரை (துள்ளித் திரியும் பருவம்)
காலை
7 மணி: அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்த ஒன்றரை கப் பால் / சத்து மாவுக் கஞ்சி ஒரு கப்.
8 மணி: 2 இட்லி / ஒரு தோசை. இதனுடன் சட்னி, சாம்பார். முடிந்தவரை தேங்காய் சட்னியைத் தவிர்க்கலாம். பூரி மசாலா - 2 / பொங்கல் - 150 கிராம் / உப்புமா - 150 கிராம். தினசரி இவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடலாம்.
11 மணி: ஒரு ஆப்பிள். அல்லது சிறிது அளவு பழ சாலட்.
12 மணி : காய்கறி சூப் - ஒரு கப்.
மதியம்
1 மணி : பின் வருபவனவற்றில் ஏதாவது ஒன்று 200 கிராம்.
நெய் சேர்த்த பருப்பு சாதம் / பருப்பு சேர்த்த கூட்டு சாதம் / சாம்பார் சாதம் / தயிர் சாதம். இதனுடன், 150 முதல் 200 கிராம் அளவுக்குப் பொரியல். ஏதேனும் ஒரு கீரை - ஒரு கப். அசைவம் சாப்பிடுபவர்கள், ஒரு வேக வைத்த முட்டை அல்லது ஆம்லெட். வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு வேகவைத்த கோழி இறைச்சி 50 கிராம் அல்லது குழம்பில் போட்ட மீன் துண்டு கொடுக்கலாம்.
(குறிப்பு: சாம்பார் சாதம் கொடுக்கும்போது, முந்திரி, வேர்க்கடலை சேர்த்துத் தரலாம். தயிர் சாதத்தில் திராட்சை, முந்திரி, உலர் பழங்கள், மாதுளை முத்துக்கள் சேர்த்துக் கொடுக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.)
மாலை
4 மணி: பால், சுண்டல் அல்லது பயறு வகைகள் - 50 கிராம்
6 மணி: ஒரு கப் பால்.
இரவு
8 மணி: காலை டிஃபன் அல்லது மதிய உணவு போல் சாப்பிடலாம்.  
10 மணி : ஒரு வாழைப் பழம்
உடல் வலுவில்லாமல், புரதச் சத்து குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு டாக்டரின் பரிந்துரையின்பேரில் புரோட்டீன் பவுடர் 2 டீஸ்பூன் பாலுடன் சேர்த்துக் கொடுக்கலாம்.
11 வயது முதல் 15 வரை
(வளரும் பருவம்)
(இந்த வயதினருக்கு ஒரு நாளைக்குச் சராசரியாக 2,300 கிலோ கலோரி முதல் 2,750 கிலோ கலோரி வரை ஆற்றல் தேவை. புரதம் 51.9 கிராம் முதல் 54.3 கிராம் வரை தேவை. அதற்கு ஏற்றவாறு உணவுப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது)
காலை
7 மணி: ஒரு கப் பால் / சத்து மாவுக் கஞ்சி. விருப்பப்பட்டால் டீ / காபி - சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம்.
8 மணி: (ஏதாவது ஒன்று)
இட்லி - 4 / தோசை - 3/ பொங்கல் - 250  கிராம். இதனுடன் சட்னி சாம்பார்.
11 மணி: ஆப்பிள் 1 / பழ சாலட்.
மதியம்
1 மணி: சாதம் - 300 கிராம், கீரை கூட்டு - ஒரு கப், தினமும் இரண்டு விதமான காய்கறிகள், இறைச்சி - 75 கிராம். ஒரு வேகவைத்த முட்டை / ஆம்லெட்.
மாலை
4.00: ஒரு கப் பால், சுண்டல் - 75 கிராம்
இரவு
8 மணி: காலை டிஃபன் அல்லது மதிய உணவு போல் எடுத்துக்கொள்ளலாம்.  
10 மணி: ஏதேனும் ஒரு பழம்.
  ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு விதமான பழங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.  புரதம், கார்போஹைடிரேட் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வது அவசியம். வாரத்துக்கு மூன்று நாட்கள் கேழ்வரகு மாவுக் கஞ்சி குடிக்கலாம். இது எலும்பு வளர்ச்சிக்கு நல்லது.  
16 முதல் 18 வயது வரை (டீன் ஏஜ்)
(ஒரு நாளைக்கு 2440 கிலோ கலோரி முதல் 3020 கிலோ கலோரி வரை தேவை. புரதம் - 55.5 கிராம் முதல் 61.5 கிராம் வரை)
காலை
7 மணி: பால் / காபி / டீ / க்ரீன் டீ
8 மணி: இட்லி - 4 முதல் 5 / தோசை - 3 சட்னி,
சாம்பார் / பூரி கிழங்கு - 4 முதல் 5,
11 மணி: ஆப்பிள் 1 அல்லது ஸ்நாக்ஸ், பழங்கள்
மதியம்
1 மணி: சாம்பார் சாதம், தயிர் சாதம், காய்கறிப் பொரியல், பச்சடி,
கீரை. அசைவ விரும்பிகள் வாரத்துக்கு இரண்டு
நாட்களுக்கு வேகவைத்த கோழி இறைச்சி அல்லது
மீன் 100 கிராம்.
மாலை
4 மணி: பால், கிரீன் டீ, பழ சாலட், ஸ்நாக்ஸ் ஊறவைத்த
நிலக் கடலை.
8 மணி: டிபன் (அ) மதியம் சாப்பிட்டது போன்ற உணவு.
10 மணி: ஒரு கப் பாலுடன் பழம்.
(குறிப்பு: ஆரோக்கியமாக இருக்கவேண்டிய கட்டம் இது. நிறைய ஆற்றல் தேவையாக இருக்கும். மதியம் காய்கறியைச் சேர்த்துக்கொள்ள முடியவில்லை எனில், இரவில் சாப்பிடலாம். உடலுக்குத் தேவையான வைட்டமின் மற்றும் மினரல்கள் இந்தக் காய்கறி, பழங்களில் இருந்து நேரடியாகக் கிடைத்துவிடும்.)
19 முதல் 40 வயது வரை... (கல்லூரிப் பெண்கள் முதல் வேலைக்குச் செல்பவர்கள் வரை.)
(1,900 கிலோ கலோரி முதல் 2,300 கிலோ கலோரி வரை தேவை. புரதம்: 50 கிலோ எடை இருந்தால், அவருக்கு 50 கிராம் வரை தேவை)
காலை
7 மணி: பால் / சத்து கஞ்சி. உடல் பருமன் உள்ளவர்கள்
சர்க்கரையைக் குறைத்துக்கொள்ளலாம்.
8 மணி: இட்லி 4-5 / தோசை 3-4 / பூரி கிழங்கு - 4.
11 மணி: காய்கறி சூப் / பழங்கள் / ஸ்நாக்ஸ்
மதியம்
1 மணி: சாதம் - 350 கிராம், பருப்பு, இரண்டு விதமான காய்கறிகள், தயிர், கீரை, ஒரு ஸ்வீட் - 25 கிராம். அசைவ விரும்பிகள் வாரத்துக்கு இரண்டு முறை வேக வைத்த இறைச்சி அல்லது மீன் 100 கிராம் சாப்பிடலாம்.
மாலை
4 மணி: கிரீன் டீ, பழம்.
6 மணி: சுண்டல் - 75 கிராம்.
இரவு
8 மணி: காலைச் சிற்றுண்டி போல்.
10 மணி: ஒரு கப் பால்.
40 முதல் 60 வயதுக்கும்
மேற்பட்ட முதியவர்கள் வரை
(தேவை- 2,320 கி.கலோரி முதல்  2,730 கி.கலோரி வரை, புரதம் - சுமார் 60 கிராம் புரதம். (50 கிலோ எடை இருந்தால், அவருக்கு 50 கிராம் புரதம் தேவையாக இருக்கும்).  
காலை
7 மணி: பால் / சத்துமாவுக் கஞ்சி / கிரீன் டீ / காபி / டீ.
(முடிந்தவரை காபி, தேநீர் குடிப்பதைக்
குறைத்துக்கொள்வது நல்லது)
8 மணி: இட்லி - 4 / தோசை - 3 / பொங்கல் - 250
கிராம் / உப்புமா - 250 கிராம், (தொட்டுக்கொள்ள
- புதினா, கொத்தமல்லி சட்னி வகைகள், சாம்பார்)
11 மணி: காய்கறி சூப், ஒரு ஆப்பிள்
மதியம்
1 மணி: சாதம் - 300 கிராம், பருப்பு, இரண்டுவிதமான
காய்கறிகள், தயிர் - ஒரு கப், வேக வைக்கப்பட்ட
கோழி இறைச்சி அல்லது மீன் - 75 கிராம், முட்டை
வெள்ளைப் பகுதி மட்டும் - 75 கிராம். இனிப்பு அல்லது பழங்கள் - 25 கிராம்.
மாலை
4 மணி: கிரீன் டீ, சுண்டல் - 75 கிராம்
இரவு
8 மணி: எண்ணெய் சேர்க்காத சுக்கா ரொட்டி, பருப்பு தால் (அ) ஏதேனும் ஒரு டிஃபன் காய்கறி சாம்பார்
 எண்ணெய் மிகக் குறைந்த அளவு சேர்க்கலாம். பொரித்ததைத் தவிர்க்க வேண்டும்.
இயற்கை தருதே... சத்துக்கள்
கீரைகள்: தினமும் ஒரு கீரையைச் சேர்த்துக் கொள்வதன் மூலம், உடலுக்குத் தேவையான சத்துக்களைப் பெற முடியும். நார்ச்சத்து நிறைந்து இருப்பதால், கீரை சாப்பிட்டவுடன் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். இரும்புச் சத்து, தாது உப்புக்கள், நார்ச் சத்துக்கள், கால்சியம் நிறைந்து இருப்பதால், உடல் சீராக இயங்க உதவும். எலும்புகள் உறுதிப்படும். அன்றன்றைக்குப் பறித்த கீரைகளைச் சாப்பிடுவதுதான் நல்லது!
பழங்கள்: பழங்களைச் சாப்பிடுவதால் முதுமையை விரட்டலாம்.  தினமும் ஒரே மாதிரியான பழத்தை சாப்பிடாமல், மூன்று விதமான பழங்களைச் சாப்பிடுவதைக் கட்டாயமாக்கிக்கொள்ளுங்கள். பழம் சாப்பிட்டதும் பால் அருந்துவது சத்துக்களை உடல் கிரகிக்க உதவும்.  
காய்கறிகள்: குழந்தைகளுக்கு எல்லாவிதமான காய்கறிகளையும் உண்ணப் பழக்க வேண்டும். வயதானவர்கள் நீர்ச் சத்து, நிறைய நார்ச் சத்துள்ள அவரைக்காய், புடலங்காய், பூசணி, பீன்ஸ் வாழைத் தண்டு, கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.  தினமும் இரண்டு விதமான காய்கறிகள் சேர்த்துக்கொள்ளவேண்டும்.  
பருப்பு வகைகள்: பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பிஸ்தா, அக்ரூட் போன்ற பருப்பு வகைகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.  மொத்தப் பருப்பு வகைகளையும் கலந்து அதில் தினமும் ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி அளவில் சாப்பிடலாம்.  உடல் எடையும்கூடும்.  குழந்தைகளின் உடல் உறுதியாகும்.  சருமம் பொலிவடையும்.  
எண்ணெய்: உணவில் எண்ணெயை அளவோடு சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும்.
பயறு வகைகள்: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயறு வகைகள் தேவை. அதே சமயம் இதனை அளவோடு சாப்பிடுவதே நல்லது. தினமும் 50 முதல் 75 கிராம் எடுத்துக்கொள்ளலாம்.
முளை தானியங்கள்: முளைவிட்டப் பயறு வகைகளில் நீர்ச்சத்து, வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளன. ரிபோஃபிளேவின் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள், இரும்பு சத்து, கால்சியம், பாஸ்பரம் போன்ற சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலுக்கு நல்ல உட்டத்தைத் தரும். அப்படியே சாப்பிடாமல் வெந்நீரில் போட்டு லேசாக வேகவைத்து சாப்பிடுவது நல்லது. தினமும் 50 கிராம் அளவுக்கு முளைவிட்ட தானியத்தை எடுத்துக்கொள்ளலாம்.
ஊக்கம் தரும் உடற்பயிற்சி!
''உடலுக்கு ஆரோக்கியத்தையும் புத்துணர்ச்சியையும் தருவது உடற்பயிற்சி ஒன்றுதான். உடலில் தேவையற்றக் கொழுப்பைக் கரைக்கும். உடல் தசைகளுக்கும் எலும்புகளுக்கும் வலுவைக்கூட்டி, உடலை உறுதியாக்கும் உடற்பயிற்சியைத் தினசரி மேற்கொள்வதன் மூலம், என்றும் இளமையையும், ஆரோக்கியத்தையும் தக்கவைத்துக் கொள்ளலாம்'' என்கிற உடற்பயிற்சியாளர் கிருஷ்ணா, அந்தந்த வயதில் அன்றாடம் செய்யக்கூடிய உடற்பயிற்சிகளைப் பட்டியலிடுகிறார்.      
வெளிநாடுகளில் குழந்தைகளுடைய திறமைக்குத் தகுந்தவாறு விளையாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும். நம் நாட்டில் இன்னும் அத்தகைய பயிற்சிமுறைகள் வரவில்லை. ஆனாலும் பொதுவாக, தசைகள், எலும்பு, மூட்டுக்களை பலமாக்கவும், கை, கால் வலுவடையவும் பயிற்சிகளை செய்யலாம். குழந்தைகளுக்கு எளிய உடற்பயிற்சிகளை சொல்லித் தரலாம்.  உடல் ஆரோக்கியமாக இருக்கும். மூளை நன்கு சுறுசுறுப்படையும், எப்போதும் உடல் ஃபிட்டாக இருக்கும்.
12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குப் பயிற்சி
 விளையாட்டை ஊக்குவியுங்கள்
 குழந்தைகளுக்குத் தொங்குவது என்றால் ரொம்பப் பிடிக்கும். அதிகம் உயரம் இல்லாத வீட்டின் உத்தரக் கம்பின் மேல் குழந்தையின் கைகளை வைத்து தொங்கும் பயிற்சி. இப்படி தினமும் ஐந்து நிமிடம் தொங்குவதால், தோள்பட்டை மற்றும் ஆம்ஸ் பகுதி நன்கு வலுவடையும்.  
 காலையில் ஸ்கிப்பிங் விளையாடச் சொல்லலாம். மனம் ஒருநிலைப்படும். வியர்வை வெளியேறி, புத்துணர்ச்சி கிடைக்கும்.  
 குழந்தைகளை ஓடவிட்டு, கூடவே நாமும் ஓடலாம்.  இதனால், குழந்தைகளுக்குப் பெற்றோரின் மீதான நெருக்கம் அதிகரிக்கும்.  உடல் சோர்வு நீங்கும்.  
 நீச்சல், டென்னிஸ், கிரிக்கெட், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில் பயிற்சி கொடுக்கலாம். இவர்களுக்கு வருங்கால விளையாட்டு வீரர்களாக வாய்ப்பு தேடிவரும்.  உயரம் குறைவாக இருந்தால், அவர்களுக்குக் கூடைப்பந்துப் பயிற்சி பலன் தரும்.  
 நன்றாக ஓடி ஆடி விளையாடினாலே, அது ஒருவகையில் பயிற்சிதான்.
 நீச்சல், ஓட்டப்பந்தயம், கால்பந்து, கிரிக்கெட் என விளையாட்டுக்களில் ஈடுபடும்  குழந்தைகள், தினமும் கட்டாயம் உடல் வலுவை மேம்படுத்த சில பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
 பள்ளியைவிட்டுத் திரும்பியதும் சைக்கிள் ஓட்டலாம், ஓடிப் பிடித்து விளையாடலாம்.
 படிகளில் ஏறி இறங்கலாம். ரத்த ஓட்டம் சீராகும்.  
 அருகில் உள்ள பூங்காவுக்குச் சென்று அவர்களுக்குப் பிடித்த விளையாட்டை விளையாடச் சொல்லாம். எந்தப் பயிற்சியில் ஈடுபடும்போதும், பெற்றோர் பிள்ளைகளைத் தொடர்ந்து கண்காணித்தபடியே இருக்கவேண்டியது அவசியம்.
டீன் ஏஜ்
உடலும் மனமும் வளரும் காலகட்டம் இது. எனவே, உடலை உறுதியாக வைத்திருப்பதற்கான தொடக்கம் இங்கே தான். பிற்காலத்தில் நோய்களிலிருந்து தப்பிக்க, இப்போதே வளப்படுத்துவது முக்கியம். ஹைடென்சிட்டியான உடற்பயிற்சிகளை  இந்தக் காலகட்டத்தில் செய்யலாம். டீன் ஏஜ் ஆண் பெண் இருபாலரும் எல்லாவிதப் பயிற்சியையும் மேற்கொள்ளலாம். பெண்கள் மாதவிலக்கின்போது பயிற்சியில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
  டீன் ஏஜ் பருவத்தினர் பலருக்கு வீட்டிலும் சரி... வெளியிலும் சரி... உடல் உழைப்பு என்பதே இல்லாமல் போய்விட்டதால், விளையாட்டில் அதிக அளவு ஈடுபடுவது நல்லது.  
  தனியாகப் பயிற்சி எடுக்கப் பிடிக்காது என்பதால் குரூப் ஏரோபிக்ஸ் பயிற்சி செய்யலாம். இது மனதையும் உடலையும் உற்சாகமாக வைத்திருக்கும்.  
 வாக்கிங், ஸ்கிப்பிங், இடுப்பை அசைத்தும் வளைத்தும் செய்யக்கூடியப் பயிற்சிகளை 15 நிமிடங்கள் செய்யலாம்.    இதனால், உடல் அழகான தோற்றத்தைத் தரும்.  
  வாஷிங் மெஷினுக்கு ஓய்வுகொடுத்து, நம் துணிகளை நாமே துவைப்பது உடலுக்கு நல்ல பயிற்சிதான்.  
பயிற்சி
குட்மார்னிங் எக்சர்சைஸ் செய்வது மிகவும் நல்லது. நேராக நிமிர்ந்து கால்களை அகட்டிவைக்கவும். கைகள் இரண்டையும் காதுக்கு அருகில் கொண்டுபோய் அப்படியே, உடலை முன்புறமாக இடுப்பு வளையும் அளவுக்குக் குனிந்து, நிமிரவும். தலை நேராக இருக்கவேண்டும். 15 தடவை இந்தப் பயிற்சியை செய்யவேண்டும். சிறிது நிமிட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் 15 தடவை செய்யவேண்டும்.  இதனால், முதுகு, கழுத்து, தோள்பட்டை, கைகள் என உடலுக்கான ஒட்டுமொத்த தசைகளையும்  இந்தப் பயிற்சி நன்றாக வலுவாக்கும்.
வேலைக்குச் செல்லும் காலகட்டம்!  
தூங்கி எழுந்திருக்கும்போது, நேரடியாக அப்படியே எழுந்திருக்கக்கூடாது. தசைப்பிடிப்பு ஏற்படலாம்.  கைகளை ஊன்றிக்கொண்டு, பக்கவாட்டில் திரும்பிய நிலையில் எழுந்திருப்பதுதான் நல்லது.
  இந்த வயதில் தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சிக்காக ஒதுக்குவது முதுமை வரையிலும் உதவியாக இருக்கும். கண்களை மூடி, ஒரு காலை நேராகவும், மற்றொரு காலை முட்டி வரை உயர்த்தியபடி நிற்கவும்.  இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நேராகவையுங்கள். முதலில் இந்தப் பயிற்சியை செய்யும்போது சில நொடிகள்கூட, நம்மால் பேலன்ஸ் செய்ய முடியாது. தொடர்ந்து செய்யும்போது, உடலுக்கு நல்ல கிரிப் கிடைக்கும்.  
50 வயதுக்கு மேல்...
கால் வலி, மூட்டு வலி, கழுத்து வலி, எலும்பு தேய்மானம், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் எனப் பலப் பிரச்னைகளுடன் முதுமையுடனும் போராடும் காலகட்டம் இது. இந்த வயதினரைக் குழந்தைகளைக் கையாள்வதைப் போல கையாளவேண்டும். பெண்களுக்கு, மாதவிலக்கு நிற்கும் நேரம் என்பதால், எலும்பு தேய்மானம் அதிகம் இருக்கும். அதனால், கவனமாக பயிற்சியில் ஈடுபடுவது அவசியம். கூடியவரையில் எளிமையான ஃப்ளோர் பயிற்சிகளை செய்யலாம்.
  தினமும் வீட்டுக்குள்ளே சமமான பாதையில் வாக்கிங் போகலாம். இவர்களும் 'பேல்ன்ஸ் பயிற்சி’ மேற்கொள்வது நல்லது.
  காலையில் எழுந்ததும், சோம்பல் முறிப்பதுபோல், கை, கால்களை நன்றாக நீட்டி மடக்கவேண்டும். இதனால், தசைப்பிடிப்புகள் இருக்காது.  
  கீழே விழுந்தப் பொருட்களை எடுக்கச் சட்டென குனியக் கூடாது. கால் முட்டிகளுக்கு சப்போர்ட் கொடுத்து குனிந்து எடுக்க வேண்டும். கால், கைகளுக்கு வலு சேர்க்கும் பயிற்சி செய்யலாம்.
  சுவரின் மீது சாய்ந்தபடி, ஒரு காலைத் தூக்கி தவம் புரிவதுபோல் செய்வது புத்துணர்ச்சி தரும்.
  குனிந்து நமஸ்கரிப்பதும் நல்ல பயிற்சிதான். ரத்த ஓட்டம் சீராகும், கால் எலும்புகளுக்கு நல்லது.
  சூரிய நமஸ்காரத்தில் அதிகம் உடலை வளைக்காமல் கைகளை மேலாகத் தூக்கி நின்று செய்யும் நான்கைந்து ஆசனங்களில் ஒன்றை மாற்றி மாற்றி செய்யலாம்.
ஃபிட்னெஸ் டிப்ஸ்:
  வயிறு முட்ட சாப்பிட்டால் ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரத்துக்குப் பிறகுதான் உடற்பயிற்சியில் ஈடுபடவேண்டும். ஸ்நாக்ஸ் சாப்பிட்ட பிறகு, 20 நிமிடங்கள் கழித்துப் பயிற்சி செய்யலாம்..
  நன்றாக பயிற்சி செய்தால் நன்றாகப் பசிக்கும், சத்தான உணவுகளைச் சாப்பிட்டால், உடல் அதை கிரகித்துக் கொள்ளும். உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். மன அழுத்தம் வராது. எந்த வேலையும் திறமையாக செய்து முடிக்கும் ஆற்றல் வளரும். பெண்களுக்கு உடலை இந்த வயதிலிருந்தே ஆரோக்கியமாக வைத்திருந்தால், திருமணத்துக்குப் பின் சிசேரியன் தவிர்த்து சுகப் பிரசவம் சாத்தியமாகும்.
  எண்ணெயில் அதிக நேரம் வறுத்த, பொரித்த உணவு வகைகளைச் சாப்பிடக் கூடாது. உணவில் சர்க்கரை மற்றும் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
  உயரத்துக்கு ஏற்ற எடை இருக்கிறோமா என்பதை அவ்வப்போது பார்த்துக்கொள்ள வேண்டும்.
  வொர்க்அவுட் செய்யும் ஆர்வத்தில் அதிகப்படியாகவும் செய்துவிடக் கூடாது. அது தசைப் பிரச்னை, உடல் வலி போன்றவற்றுக்குக் காரணமாகிவிடும்.
  வயதான காலத்தில் உடல் பேலன்ஸ் இழந்து தடுமாறும். இந்த வயதில் பயிற்சிகளை செய்துவந்தால், தெம்பாக இருக்கலாம்.
  24 மணி நேரத்தில் எந்த நேரமும் பயிற்சிகளை செய்யலாம்.
  எடை குறைய வேண்டும் என்று நினைத்துப் பயிற்சி செய்பவர்களுக்கு, காலை நேரமே  உகந்தது.
  வெறும் வயிற்றில் பயிற்சி செய்யும்போது, கொழுப்பு நன்றாக கரையும் என்ற நம்பிக்கை உள்ளது. இது தவறு, பயிற்சிக்கு முன்பு பழங்கள் அல்லது சிறிது அளவு சிற்றுண்டி உட்கொள்வது நல்லது.
  தினம் பயிற்சி செய்தால், ஒரு மாதத்தில் அரை கிலோவைக் குறைக்கலாம்.