அக்னியை எதிர்கொள்ள அசத்தல் ஜூஸ்! --- பழங்களின் பயன்கள்,

கோ டையில், எப்போதும் உடல் குளுகுளுவென இருக்க, ஜூஸ் செய்முறைகளை பி.எல்.ஏ.ரெசிடென்சியின் சீஃப் செஃப் சி.தினகரன் தந்திருக்கிறார். மேலும...

கோடையில், எப்போதும் உடல் குளுகுளுவென இருக்க, ஜூஸ் செய்முறைகளை பி.எல்.ஏ.ரெசிடென்சியின் சீஃப் செஃப் சி.தினகரன் தந்திருக்கிறார். மேலும், குளிர்பானங்களில் உள்ள சத்துகள் மற்றும் பலன்கள் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் கிருஷ்ணமூர்த்தி தரும் தகவல்களும் இங்கே!
 ''அக்னி நட்சத்திரம் ஆரம்பம். வெயிலில் அலைந்து திரிந்து வந்தாலும், சொட்டச் சொட்ட வியர்வை வழிந்தாலும், ஒரு சிலர் மட்டும் ஃபிரிட்ஜில் வைத்த ஆப்பிள்போல எப்போதும் புத்துணர்ச்சியோடு இருப்பார்கள். இதற்கு முக்கியக் காரணம் அவர்கள் எடுத்துக்கொள்ளும் நீர்ச்சத்து மிக்க உணவுகள்தான்.
கோடைக் காலத்தில் வெயிலின் உக்கிரத்தால் உடலில் இருந்து அதிக அளவு நீர் வெளியேறி, நீர்ச்சத்து குறைந்துகொண்டே இருக்கும். கூடவே சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகளும் சேர்ந்தே வெளியேறும்.
அதை ஈடுசெய்ய, கிர்ணி, தர்பூசணி, திராட்சை போன்றவற்றின் சாறுகளை அருந்தலாம்; இளநீர் குடிக்கலாம். இதில், சோடியம், பொட்டாசியம், தண்ணீர் என மூன்றுமே இருப்பதால் இழந்த நீர்ச்சத்தைத் திரும்பவும் உடலுக்குத் தர முடியும்.
உண்ணும் உணவில்கூட, அதிக அளவு நீர்ச்சத்து உள்ள புடலங்காய், சுரைக்காய், பூசணி, பீர்க்கங்காய் போன்ற காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். தாகம் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் அதிகமாகத் தண்ணீர் குடியுங்கள்.
தாகத்தைத் தணிக்க நீர் மோர் பருகலாம். குழந்தைகளுக்குப் பாதாம் மில்க், ரோஸ் மில்க் போன்றவற்றைக் குளிரவைத்துக் கொடுக்கலாம்.
சர்க்கரை நோயாளிகள் ஆப்பிள், கொய்யா, மாதுளை, தர்பூசணி போன்ற பழங்களை அப்படியே சாப்பிடலாம். பழங்கள் சாப்பிடலாம் என்பதற்காகப் பழத்தை ஜூஸாக செய்து குடிக்கலாம் என்று நினைப்பதும் தவறு. ஜூஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஜூஸாக்கும்போது தோல், விதைகளை நீக்கி, வடிகட்டுவதால் நார்ச்சத்து போய்விடும். சர்க்கரையின் அளவும் கூடிவிடும். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பழங்களை மட்டுமே எடுத்துக் கொள்வது நல்லது.
வளரும் குழந்தைகள், வெயிலில் அதிகம் அலைபவர்கள், கர்ப்பிணிகள், விளையாட்டு வீரர்கள், வயோதிகர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், பாலூட்டும் தாய்மார்கள் பழச்சாறுகளை அருந்துவதன் மூலம் எப்போதும் சோர்வு இல்லாமல் சுறுசுறுப்புடன் இயங்க முடியும்.
தர்பூசணி கேரட் ஜூஸ்
500 கிராம் தர்பூசணி, 150 கிராம் கேரட் துருவியது, தோல் நீக்கித் துருவிய இஞ்சி 10 கிராம் இவற்றுடன் தேன், சர்க்கரை கலந்து குளிர்ந்த நீர் விட்டு, மிக்சியில் அரைத்து வடிகட்டவும்.  புதினா இலை வைத்து அலங்கரிக்கவும்.
பலன்கள்: தர்பூசணியுடன் கேரட், தேன் சேர்ப்பதால் சுவை அருமையாக இருக்கும். தர்பூசணியில் நார்ச்சத்து குறைவு. கேரட்டில் நார்ச்சத்து, பீட்டா கரோட்டீன் இருக்கிறது. கார்போஹைட்ரேட், நீர்ச்சத்து அதிக அளவு இருக்கிறது. வைட்டமின் சி, எனர்ஜி சிறிதளவு இருக்கின்றன.  
  பொதுவாகச் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடவேண்டாம். காலை நேரத்தில் சர்க்கரை அளவு குறைந்தால் மட்டும் 100 மில்லி எடுத்துக் கொள்ளலாம். சிறுநீரக நோய் கட்டுக்குள் இருந்தால் 50 மி.லி. குடிக்கலாம். மற்றபடி எல்லோருக்கும் நல்லது.
கிரேப் ஜூஸ்
200 கிராம் கறுப்பு திராட்சை, தேவையான அளவு சர்க்கரை அல்லது வெல்லம் இவை இரண்டையும் மிக்சியில் அரைத்துத் துணியில் வடிகட்டிக் குளிர்ந்த நீர் விட்டு மீண்டும் அரைத்துப் பருகவும்.
பலன்கள்: குளுகோஸ் அளவு இதில் அதிகம். வைட்டமின் சி, பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம், மேங்கனீஸ் போன்ற தாது உப்புகள் சிறிதளவு இருக்கின்றன. கார்போஹைட்ரேட் இருப்பதால் நல்ல சக்தி கொடுக்கும். திராட்சை விதையில் மருத்துவக் குணம் அதிகம் இருப்பதால் ஜூஸ் தயாரித்து வடிகட்டாமல் அருந்துவது நல்லது. இதனால் நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் கிடைக்கும். திராட்சையில் பூச்சி மருந்து தெளித்து வருவதால் நன்றாகக் கழுவிவிட்டு உப்புத் தண்ணீரில் போட்டு எடுத்துப் பயன்படுத்துவது நல்லது.
  சிறுநீரக, சர்க்கரை நோயாளிகள் அருந்த வேண்டாம். இதய நோயாளிகளுக்கு நல்லது.  ஏதாவது உடல்ரீதியான பிரச்னைகளுக்கு மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள், இந்த ஜூஸ் பருகியதும், உடனடியாக மருந்துகளை எடுத்துக் கொள்ளக்கூடாது.
மாம்பழ மில்க்ஷேக்
தோல் நீக்கிய 300 கிராம் மாம்பழத்தை மிக்சியில் அரைத்துக் காய்ச்சிய பால் சேர்த்து வடிகட்டவும்.  தேவைப்பட்டால் சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பருகலாம்.  
பலன்கள்:  இதில் மிக அதிக அளவு பீட்டா கரோட்டீன் இருப்பதால் கண்ணுக்கு மிகவும் நல்லது.  மாம்பழத்துடன் பால் சேர்ப்பதால் ஆன்டிஆக்சிடன்ட், வைட்டமின் சி, சர்க்கரை, நார்ச்சத்து, ஓரளவு பொட்டாசியம், சோடியம், தாமிரம் போன்ற தாது உப்புகளும் இருக்கின்றன. இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.  உடல் சோர்ந்து வலுவிழந்து போனவர்கள் அருந்தலாம்.  
 சிறுநீரக, சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ள வேண்டாம். பொதுவாக அனைவருமே, நாள் ஒன்றுக்கு ஒரு பழம் ஒரு டம்ளர் ஜூஸ் குடிக்கலாம். அதிகமாக எடுத்துக்கொண்டால், உடலில் ஹைப்பர் வைட்டமின் சத்து ஏற்பட்டு சருமம் தடித்துவிடும்.
அன்னாசிப் பழ  ஜூஸ்
அன்னாசிப் பழம் ஆறு முதல் எட்டு துண்டுகள் வரை மிக்சியில் அரைத்துத் தேவையான அளவு சர்க்கரை, குளிர்ந்த நீர் சேர்த்து மீண்டும் அரைத்து வடிகட்டிப் பருகவும்.  
பலன்கள்:  பழத்தின் நடுவில் உள்ள தண்டுப் பகுதி மிகவும் நல்லது.  ஜூஸை வடிகட்டாமல் அப்படியே அருந்துவதன் மூலம் நார்ச்சத்து கிடைக்கும். குளுகோஸ், மற்றும் நீர்ச்சத்து அதிகம் இருக்கிறது. ஓரளவு இரும்புச் சத்தும், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் குறைந்த அளவிலும் இருக்கின்றன. இந்த ஜூஸ் குடித்தால் சீக்கிரத்தில் பசி எடுக்காது.  
 உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், கர்ப்பிணிகள், வளரும் குழந்தைகள் அருந்தலாம்.  சிறுநீரகப் பிரச்னைகள் உள்ளவர்கள் ஓரளவு சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளவேண்டாம்.
சாத்துக்குடி ஜூஸ்
இரண்டு அல்லது மூன்று பழத்தின் தோல் நீக்கி, சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் குளிர்ந்த நீருடன் மிக்சியில் அரைக்க வேண்டும். பிறகு துணியில் வடிகட்டி அருந்தலாம்.
பலன்கள்: அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. சர்க்கரை மற்றும் மாவுச்சத்து ஓரளவு இருக்கின்றன. இரும்பு, புரதம், கால்சியம், பாஸ்பரஸ் குறைந்த அளவும், பொட்டாசியம் மிக அதிகமாகவும் இருக்கிறது. தசைகள் நன்றாக வலுப்பெறும். சோர்வு நீக்கும். சக்தி அதிகரிக்கும்.
 சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் அருந்தவேண்டாம்.  மற்றபடி எல்லோருக்கும் ஏற்ற ஜூஸ்.
மாதுளை ஜூஸ்
இரண்டு மாதுளைப் பழங்களின் தோலைச் சீவி உதிர்த்துக்கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் குளிர்ந்த தண்ணீர்விட்டு மிக்சியில் அரைத்து வடிகட்டிப் பருகவும்.  
பலன்கள்: குளுக்கோஸ், கார்போஹைட்ரேட் அதிக அளவு இருக்கிறது. புரதம், இரும்பு, கால்சியம் குறைந்த அளவும், ஓரளவு பொட்டாசியமும் இருக்கின்றன.
 உடம்புக்கு அதிகமாகத் தேவைப்படும் தாது உப்புகள் இதில் அதிக அளவில் இருக்கின்றன.  பால் சேர்த்து அரைத்து வடிகட்டாமல் பருகலாம். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளரும் குழந்தைகள் என எல்லோரும் அருந்தலாம். உடலுக்கு நார்ச்சத்துக் கிடைப்பதுடன் சோர்வு நீங்கும். சிறுநீரக, சர்க்கரை நோயாளிகள் அருந்தவேண்டாம்.
ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி மாதுளைக்கு உண்டு.
தர்பூசணி ஜூஸ்
அரைகிலோ தர்பூசணிப் பழத்தைத் தோல் நீக்கி, சர்க்கரை சேர்த்துக் குளிர்ந்த நீர் விட்டு மிக்சியில் அரைத்து வடிகட்டிப் பருகவும். தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் சர்பத் சேர்த்துக் கொள்ளலாம்.
பலன்கள்: கந்தகமும், சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகளும் நிறைய இருக்கின்றன.  கார்போஹைட்ரேட் ஓரளவு இருக்கிறது.  கலோரி இல்லை.
வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.  சிறுநீரக, சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளவேண்டாம்.
சர்பத்
எலுமிச்சம் பழத்தின் சாறு மற்றும் 200 மி.லி பால் சேர்த்து நன்றாக மிக்சியில் அடிக்கவும். ஒரு ஸ்பூன் கிரேப் எசன்ஸ், நன்னாரி எசன்ஸ், ஐஸ் கட்டிகளைச் சேர்த்து கலந்து பருகலாம்.
பலன்கள்: நன்னாரி உடலுக்கு அதிகக் குளிர்ச்சியையும், சக்தியையும் தரக்கூடியது. அதிக அளவு தாது உப்புகள் இதில் இருக்கின்றன. உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும். உடலில் நீர்ச்சத்தைத் தக்க வைக்கும். சோர்வை நீக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.  
சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவேண்டும்.  
கிர்ணி ஜூஸ்
ஒரு கிர்ணிப் பழத்தைத் தோல்நீக்கி, நறுக்கி, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து அரைத்துப் பால் சேர்த்து, ஐஸ் கட்டிகளைப் போட்டுப் பருகவும்.  
பலன்கள்:  அதிக அளவு பொட்டாசியம், கார்போ ஹைட்ரேட் இருக்கிறது. அதிகமான சக்தியைக் கொடுக்கும். ஓரளவு நார்ச்சத்தும், குறைந்த அளவு புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு  மற்றும் கந்தகம் போன்றவையும் இருக்கின்றன.
 எல்லோருக்கும் ஏற்றது என்றாலும் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவும்.
சப்போட்டா ஜூஸ்
சப்போட்டாப் பழங்களை நன்றாகக் கழுவி, கொட்டை நீக்கி, சர்க்கரை, காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். கடைகளில் தோலையும் நீக்கிவிட்டுதான் ஜூஸ் கொடுக்கின்றனர்.  ஜூஸாக அருந்துவதைவிட, விதையை மட்டும் நீக்கிவிட்டுத் தோலுடன் அப்படியே சாப்பிடுவது நல்லது.
பலன்கள்: இதில் மாவுச்சத்து அதிகமாக இருக்கிறது.  ஓரளவு இரும்புச் சத்து, பீட்டா கரோட்டீன் இருப்பதால் ரத்த ஓட்டத்துக்கு நல்லது. பொட்டாசியம், மெக்னீசியம் மிக அதிகமாக இருக்கிறது.  
  சர்க்கரை நோயாளிகள், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
கொய்யாப்பழ ஜூஸ்
கொய்யாப் பழத்தை வெட்டும்போது, புழுக்கள் இருக்கிறதா என்பதைக் கவனிக்கவேண்டும். பழத் துண்டுகளுடன் தேவையான சர்க்கரை, பால் சேர்த்து அரைத்து, சிறிது வெனிலா எசென்ஸ், ஐஸ்கட்டிகள் சேர்த்து அருந்தவும்.
பலன்கள்: நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது. பொட்டாசியம், சோடியம், வைட்டமின் சி, சர்க்கரை ஓரளவு இருக்கின்றன.
  சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவு எடுத்துக் கொள்ளலாம். சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது, மற்றபடி எல்லோருக்கும் ஏற்றது.
பப்பாளி ஜூஸ்
ஒரு பப்பாளிப் பழத்தை நறுக்கி, ஒரு கப் பால், இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு சர்க்கரை, தேன், ஐஸ்கட்டி சேர்த்து மிக்சியில் அரைத்தால் ஜூஸ் ரெடி!    
பலன்கள்: வைட்டமின் சி, சர்க்கரை, பீட்டா கரோட்டீன் அதிகமாக இருக்கின்றன. பாலுடன் சேர்த்துச் அருந்துவதால் சத்து உடம்பில் முழுவதுமாகக் கிரகிக்கப்படும்.  நார்ச்சத்து இருக்கிறது.  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கண், சருமத்துக்கும், உடல் ஊட்டத்துக்கும் மிகவும் நல்லது.  
 கர்ப்பிணிகள், தாய்மார்கள், வளரும் குழந்தைகள் என எல்லோரும் அருந்தலாம். சர்க்கரை நோயாளிகள் ஓரளவு எடுத்துக்கொள்ளலாம்.
கேரட் ஜூஸ்
350 கிராம் பிஞ்சு கேரட்டை சுத்தம் செய்து துருவவும். இதனுடன் தேவையான சர்க்கரை, ஒரு எலுமிச்சம்பழத்தின் சாறு சேர்த்துக் குளிர்ந்த தண்ணீர் விட்டு மிக்சியில் அரைக்கவும். மெல்லிய துணியில் வடிகட்டிப் பருகவும்.
பலன்கள்:  சர்க்கரை, பீட்டா கரோட்டீன் அதிகம் இருப்பதால் கண்ணுக்கு மிகவும் நல்லது.  ஃபோலிக் ஆசிட் இருப்பதால் ரத்தவிருத்திக்குப் பயன்படும். இதில் இருக்கும் கரையும்தன்மை உடைய ஃபைபர், கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை கொண்டது. எலும்பு வளர்ச்சிக்கும், எனர்ஜியை கொடுக்கவும் ஆன்டிஆக்சிடென்ட் இருப்பதால், உடலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். சருமத்தைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
 சர்க்கரை நோயாளிகள், சர்க்கரையின் அளவு குறையும்போது மட்டும் குறைந்த அளவு எடுத்துக்கொள்ளலாம்.  இதய நோயாளிகள், வயதானவர்கள், குழந்தைகள் தினமும் அருந்துவது நல்லது.
கொத்தமல்லித் தழை ஜூஸ்
ஒரு கட்டுக் கொத்தமல்லி இலையைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.  இதனுடன் சிறிதளவு இஞ்சி, தேவையான அளவு வெல்லம் சேர்த்து ஓர் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்துவிட்டு மிக்சியில் அரைக்கவும்.  வடிகட்டிப் பருகவும்.
பலன்கள்:  எலுமிச்சை சேர்ப்பதால் வைட்டமின் சி சத்து கிடைக்கும்.  பீட்டா கரோட்டீன் இருப்பதால் கண்ணுக்கு மிகவும் நல்லது. இதில் இருக்கும் கரையாத ஃபைபர் மற்றும் பொட்டாசியம், கால்சியம், சோடியம் ஓரளவு இருக்கிறது. நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் பிரச்னை இருக்காது. உடலுக்கு எதிர்ப்பு சக்தி கொடுக்கக்கூடியது.
 சிறுநீரகக் கோளாறு இருப்பவர்களுக்கு இந்த ஜூஸ் ஆகாது, மற்றபடி எல்லோருக்கும் ஏற்றது.
புதினா எலுமிச்சை ஜூஸ்
இரண்டு கொத்துப் புதினாவைச் சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும். ஒரு பச்சை எலுமிச்சம்பழத்தின் தோலைத் துருவிக் கொள்ளவும்.  தேன், தேவையான சர்க்கரை, மூன்று எலுமிச்சம்பழத்தின் சாறு, ஒரு சிறிய அன்னாசிப் பழத் துண்டு இவை எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துக் குளிர்ந்த தண்ணீர் விட்டு அரைக்கவும். இதனுடன், பச்சை எலுமிச்சம்பழத் தோல் துருவலைச் சேர்த்து, பொடியாக நறுக்கிய புதினாவையும் கலக்கிப் பருகவும்.
பலன்கள்: புதினாவில் அதிக அளவு ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து இருப்பதால் கர்ப்பிணிகளுக்கு நல்லது. பீட்டா கரோட்டீன், வைட்டமின் சி இதில் இருக்கிறது. இதில் கரையாத ஃபைபர் இருப்பதால் மலச்சிக்கல், சிறுநீரகப் பிரச்னை ஏற்படாமல் தடுக்கும்.
  ரத்த சோகை, ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்களுக்கு ஏற்றது.
புதினாமல்லி ஜூஸ்
அரைகட்டுப் புதினா, கால்கட்டுக் கொத்தமல்லி இவற்றைச் சுத்தம் செய்து, ஓர் எலுமிச்சம் பழத்தின் சாறை எடுத்து, தேவைக்கு ஏற்ப வெல்லம், சிறிதளவு சாட் மசாலா கலந்து அரைக்கவும்.  துணியில் வடிகட்டிப் பருகவும்.
பலன்கள்: மல்லி, புதினாவுக்கு உரிய சத்துக்கள் சேரும்.
  எல்லோரும் அருந்தலாம்.
வெள்ளைப் பூசணி ஜூஸ்
500 கிராம் வெள்ளைப் பூசணியைத் துருவிக் கொள்ளவும். இதனுடன், சிறிதளவு சீரகத்தூள், தேவையான உப்பு, ஓர் எலுமிச்சம்பழத்தின் சாறு சேர்த்துக் குளிர்ந்த நீர் விட்டு மிக்சியில் அரைத்துப் பருகவும்.
பலன்கள்: குறைந்த அளவு கலோரி, அதிக அளவு நீர்ச்சத்து மற்றும் புரதம், வைட்டமின் சி இதில் இருக்கின்றன.
  எடை குறைக்க விரும்புபவர்கள், சர்க்கரை நோயாளிகள் வாரத்துக்கு இரண்டு, மூன்று நாட்கள் மோர் சேர்த்து இரண்டு டம்ளர் குடிக்கலாம். சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் அதிகம் எடுத்துக் கொள்ளவேண்டாம். இதய நோயாளிகள் குடிக்கலாம். மற்ற எல்லா வயதினரும் தினமும் ஒரு டம்ளர் குடிப்பது நல்லது.
வெள்ளரி ஜூஸ்
நான்கு பிஞ்சு வெள்ளரிக்காய், கைப்பிடி அளவு கொத்தமல்லியை அரைத்து, சிறிது மோர், தண்ணீர், சிட்டிகை உப்பு, மிளகுத் தூள் சேர்த்து அருந்தலாம்.  
பலன்கள்: அதிக அளவு நீர்ச்சத்து இதில் இருப்பதால்  நா வறட்சியைப் போக்கும்.  பசியைத் தூண்டி, உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். பொட்டாசியம் அதிக அளவு இருக்கிறது.  சோடியம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகள் இருக்கின்றன. பித்தத்தைக் குறைக்கும். வயிற்றுப் புண், உப்புசம், குடல் புண்ணை சரியாக்கும்.  இருமல், கபம் இருந்தால் வெள்ளரியை வாங்கி அப்படியே சாப்பிடலாம்.
 சிறுநீரகம் பழுதடைந்தவர்கள் தவிர்க்கவேண்டும். மற்றபடி எல்லோருக்கும் ஏற்றது.
நுங்கு பதநீர்
நான்கு ஐந்து நுங்குகளைச் சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் அரைத்து, பதநீருடன் கலந்து, சிறிது சர்க்கரை சேர்த்து அருந்தலாம். பதநீர் கிடைக்கவில்லை எனில் இளம் நுங்காகப் பார்த்து வாங்கிச் சாப்பிடலாம்.  
பலன்கள்:  பதநீரில் குளுகோஸ், கால்சியம் மிக அதிக அளவு இருக்கின்றன. நுங்கில் பொட்டாசியம், சோடியம், தாது உப்புகள் இருக்கின்றன. நுங்கைத் தோலுடன் சாப்பிடுவதால் நார்ச்சத்து உடலில் சேரும். அதிகக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. நுங்கு, பதநீரைப் 10 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால், உடல் உஷ்ணம் குறையும். 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் சருமம் பளபளப்பாகும். கிராமங்களில் மட்டுமே பதநீர் கிடைக்கும். ஆனால், சென்னையில், காதி கிராஃப்டில் பதநீர் விற்கப்படுகிறது.
 சிறுநீரக இயக்கத்தில் கோளாறு இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.
இளநீர்
இளநீரைக் குடித்துவிட்டுச் சிலர் தேங்காயை வேண்டாம் என்று விட்டுவிடுவார்கள். தேங்காய் வழுகலோடு இளநீர் சேர்த்து அரைத்து குடிக்கலாம்.
பலன்கள்:  அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உடல் தசைகளுக்கு மிகவும் நல்லது.  குறைந்த அளவு கால்சியம், பாஸ்பரஸ் இருக்கின்றன. எந்த அளவுக்கு இளநீர் குடிக்கிறோமோ அந்த அளவுக்குச் சிறுநீரை வெளியேற்றும் தன்மை இதற்கு உண்டு. வெளியில் அதிகம் அலைபவர்களுக்கு ஏற்றது. சிறுநீரகத்தில் கல் இருப்பவர்களுக்கும் உகந்தது. வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் இளநீர் அருமருந்து. சோர்வை நீக்கும். மஞ்சள் காமாலை இருப்பவர்கள் இளநீர் சாப்பிடுவது நல்லது.  இளநீருடன் வழுகல் சேர்வதால் கொழுப்புச் சத்தும், தாது உப்புகளும் உடலில் சேரும்.
  சிறுநீரகம் பழுதடைந்தவர்கள், சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவேண்டும்.
நீர்மோர்
வெண்ணெய் எடுத்த மோரைத்தான் நீர்மோர் என்கிறோம்.  நீர்மோரில் உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, ஒரு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த விழுதைக் கலந்து குடிக்கலாம்.  
பலன்கள்: வயிற்றில் உள்ள தீமை செய்யும் பாக்டீரியாவை அழித்து நல்ல பாக்டீரியாவை வளர்க்கும் தன்மை இதில் இருக்கிறது. வயிற்றுப் போக்கு, நீர்க்கடுப்பைப் போக்கும்.  
 எடை குறைக்க விரும்புபவர்கள், சர்க்கரை மற்றும் இதய நோயாளிகள் அருந்தலாம். சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் ஓரளவு அருந்தலாம்.
நீராகாரம்
மிஞ்சிப்போன சாதத்தில் நீரை விட்டு, மண் பானையில் வைத்துவிடுங்கள். மறுநாள், இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயத்தைத் துருவிப் போட்டு உப்பு, சிறிதளவு மோர் சேர்த்து நன்றாகக் கரைத்து அருந்தலாம்.
பலன்கள்: பழைய சாதத்தில் நல்ல பாக்டீரியா வளர்ந்திருக்கும். இது உடலுக்கு மிகவும் நல்லது. மிகக் குறைந்த கலோரியே உள்ளது.  நீர்ச்சத்து, கார்போஹைட்ரேட், சோடியம், பி.காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் இருப்பதால் உடலுக்கு நல்ல தெம்பையும், குளிர்ச்சியையும் தரும்.  
  எல்லோரும் அருந்த ஏற்றது.
பாதாம் பால்
50 கிராம் பாதாமை மிதமான கொதிநீரில் ஊறவைத்துத் தோல் நீக்கி, மிக்சியில் விழுதாக அரைக்கவும். 250 மி.லி. பாலை நன்றாகச் சுண்டக் காய்ச்சி, பாதாம் விழுது, சிறிது குங்குமப்பூ சேர்த்துக் கலக்கவும். தேவையான சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவைக்கவும். குளிரவைத்துப் பருகவும்.
பலன்கள்: புரதம், நல்ல கொழுப்பு, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இதில் இருக்கின்றன. குறைந்த அளவு நார்ச்சத்துக் கிடைக்கிறது. பால் சேர்ப்பதால் சக்தி கிடைக்கும். காலை வேளையில் அருந்துவது நல்லது.
 சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம். வளரும் குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிகள், தாய்மார்கள், வயோதிகர்கள் அருந்தலாம்.
ரோஸ் மில்க்
பாலை நன்றாகச் சுண்டக் காய்ச்சி, ரோஸ் எசென்ஸ் (அ) பவுடர், சர்க்கரை சேர்க்கவும். பிறகு ஐஸ் கட்டிகளைச் சேர்த்துப் பருகலாம்.
பலன்கள்:  இதயத்துக்கு மிகவும் நல்லது. பால் சேர்ப்பதால் வைட்டமின் ஏ சத்து கிடைக்கும். புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் சோடியம், பொட்டாசியம், கால்சியம் இருப்பதால் உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கும். கண்களுக்கு மிகவும் நல்லது.
  சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவேண்டும்.
நெல்லிக்காய் ஜூஸ்
நான்கு நெல்லிக்காயை வெந்நீரில் போட்டு துண்டுகளாக நறுக்கி, அதனுடன், சிறு துண்டு இஞ்சி, ஐஸ்கட்டிகளை சேர்த்து அரைக்கவும். தேன் சேர்த்து பருகவும்.
பலன்கள்: ஓர் ஆப்பிளின் பலன் ஒரு நெல்லிக்காயில் இருக்கிறது என்பார்கள். ஐந்து கிராம் நெல்லிக்காயில் இருக்கக்கூடிய வைட்டமின் சி சத்து, 200 கிராம் ஆப்பிளில் இருக்கிறது.  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். பொட்டாசியம், வைட்டமின் சி, தாது உப்புகள் ஓரளவு உள்ளன. குறைந்த அளவு கார்போஹைட்ரேட், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் இருக்கின்றன.
  சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் அருந்த வேண்டாம். மற்றபடி எல்லோருக்கும் ஏற்ற அருமையான ஜூஸ் இது.
ஆப்பிள் மில்க்ஷேக்
ஆப்பிளை தோல் சீவி, துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் விட்டு மிக்சியில் அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதைவிட்டு, நான்கு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு கப் பால் சேர்த்து பருகவும்.
பலன்கள்:  இதில் அதிக அளவு மாவுச்சத்து இருக்கிறது. இதனால் உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கும். பி.காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், வைட்டமின் சி, பொட்டாசியம் ஓரளவு இருக்கின்றன. கரையும் தன்மையுடைய  ஃபைபர் இருப்பதால் கொலஸ்ட்ராலை குறைக்கும்.
 சர்க்கரை நோயாளிகள் அருந்தவேண்டாம்.  சிறுநீரகம் பழுதடைந்தவர்கள் சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம். குழந்தைகள், பெரியவர்கள், தாய்மார்களுக்கு ஏற்றது.
ஆரஞ்சு ஜூஸ்
இரண்டு ஆரஞ்சு பழத்தின் தோல், கொட்டை நீக்கி, மிக்ஸியில் போட்டு சர்க்கரை சேர்த்து அரைக்கவும்.  ஐஸ் கட்டிகள் சேர்த்து தண்ணீர்விட்டு மீண்டும் அடித்து அருந்தவும்.  
பலன்கள்: இதில் வைட்டமின் சி, மாவுச்சத்து இருப்பதால் எனர்ஜி கிடைக்கும். கால்சியம், பாஸ்பரஸ், சிறிதளவு இருக்கின்றன. பீட்டா கரோட்டீன் இருப்பதால் கண், தோல், எலும்பு வளர்ச்சிக்கு நல்லது.  நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
 சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவேண்டும்.  பொட்டாசியம் சிறிதளவே இருப்பதால் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம்.
ஸ்ட்ராபெரி ஜூஸ்
பழங்களிலிருந்து கொட்டையை எடுத்துவிட்டு, பால், தேன் சேர்த்து கலந்து, ஐஸ் கட்டிகளைப் போட்டு மிக்சியில் அரைத்து பருகவும்.
பலன்கள்: இதில் கார்போஹைட்ரேட் அதிக அளவு இருக்கிறது. ஓரளவு வைட்டமின் சி, சிறிதளவு பீட்டா கரோட்டீன், புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகியவை இருக்கின்றன. நல்ல எனர்ஜியை கொடுக்கும்.
  சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவும். எல்லோரும் அருந்தலாம்.
வாழைப்பழ மில்க்ஷேக்
ஒரு வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு டேபிள் ஸ்பூன் ஜாம், அரை கப் யோகர்ட், காய்ச்சி ஆற வைத்த பால் அரை கப், தேவையான சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்து மிக்சியில் அரைத்து பருகவும்.
பலன்கள்: சர்க்கரை, மாவுச்சத்து இதில் மிகவும் அதிகமாக இருக்கின்றன. இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் மற்றும் நார்ச்சத்து குறைந்த அளவே இருக்கின்றன.  சீக்கிரத்தில் பசிக்காது. வயிற்றுக்கு நிறைவாக இருக்கும்.
  இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
கோடையைக் குதூகலமாகக் குளிர்ச்சியுடன் கொண்டாடுவோம்!

Related

பழங்களின் பயன்கள் 7874731966178299364

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item