30 வகை பிக்னிக் ரெசிபி ! ---30 நாள் 30 வகை சமையல்!!

30 வகை பிக்னிக் ரெசிபி ! பிக்னிக், டூர் என்றாலே, 'போகிற இடத்தில் நல்ல சாப்பாடு கிடைக்குமா?' என்கிற கேள்வி வந்து நிற்கும். அதனால்...

30 வகை பிக்னிக் ரெசிபி !

பிக்னிக், டூர் என்றாலே, 'போகிற இடத்தில் நல்ல சாப்பாடு கிடைக்குமா?' என்கிற கேள்வி வந்து நிற்கும். அதனால்தான் அந்தக் காலத்தில் கட்டுச்சோறுடன் கிளம்பினார்கள் நம்மவர்கள். 'இப்ப அதுக்கெல்லாம் ஏது நேரம்?'னு சொல்பவர்களுக்காக... நொடியில் தயாரிக்கக்கூடிய பலவிதமான ரெடி மிக்ஸ்களை இங்கே பார்சல் கட்டித் தருகிறார்  'சமையல் கலைஞர்'


பெட்டிப் படுக்கைகளைத் தூக்கும் போதே... ஒரு இன்டக்ஷன் ஸ்டவ்  மற்றும் சில பாத்திரங்களோடு இந்த மிக்ஸ்களையும் கையில் எடுத்துக் கொண்டால் போதும்... போகிற இடத் தில் ஆரோக்கியமான மற்றும் அறுசுவையான உணவுக்கு நீங்கள்தான் உத்தரவாதம்!

சரி, சமையல் ரெசிபிகள் தொடர்பான அளவுகளை ஒரு டீஸ்பூன், ஒரு டேபிள்ஸ்பூன், ஒரு கப் என்றெல்லாம்தான் குறிப்பிடப்படுகிறது. ஆனால், இந்த அளவுகள் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக எடுத்துக் கொண்டு குழம்புவது சிலருக்கு வாடிக்கையாக இருக்கிறது.



'ஒரு கப் உளுந்துனு போட்டிருக் காங்களே... அது எத்தனை கிராமா இருக்கும்? நூறு கிராம் அரிசினு போட்டிருக்காங்களே அது கால்படியா... அரைக்கால் படியா ஒண்ணும் புரியலையே!' என்றெல்லாம் ஆரம்பித்து, எல்லாவற்றி லுமே சந்தேகம் எட்டிப் பார்த்து... சமயங் களில் சமையலையே அது காலி செய்துவிடுவதும் உண்டு.
 

அவர்களுக்கெல்லாம் உதவுவதற்காக குறிப்பிட்ட சில அளவு முறைகள் இங்கே இடம் பிடிக்கின்றன. பொதுவாக படிக் கணக்கு என்பது இன்னமும் வீடுகளில் வழக்கத்தில் இருக்கத்தான் செய்கின்றன. அரைப்படி, கால்படி, அரைக்கால்படி எனப்படும் அந்த அளவைகள்... உரி, உழக்கு, ஆழாக்கு என்று பகுதிக்கு பகுதி வெவ்வேறு பெயர்களில் இவை வழங்கப்படுகின்றன. அவற்றில் கால்படியில் தானியங்கள் மற்றும் மாவுகளை அளந்தால் எத்தனை கிராம் இருக்கும் என்பது மேலே தரப்பட்டிருக்கிறது.
==========================================================================
 சத்துமாவு மிக்ஸ்

தேவையானவை: கோதுமை, ராகி - தலா 100 கிராம், கம்பு, பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை - தலா 50 கிராம், பாதாம், முந்திரி - தலா 10, வறுத்த வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, சர்க்கரை, நெய், பால் - தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் கோதுமை, ராகி, கம்பு, பாசிப்பருப்பு ஆகியவற்றை தனித்தனியே வாசனை வரும் வரை சிவக்க வறுக்கவும். இதனுடன் பொட்டுக்கடலை, பாதாம், முந்திரி, வறுத்த வேர்க்கடலை, ஏலக்காய்த்தூள் சேர்த்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

தேவைப்படும்போது இந்த மாவுடன் சர்க்கரை, நெய் சேர்த்து சத்து உருண்டையாக செய்து சாப்பிடலாம். மாவில் தண்ணீர் விட்டுக் கரைத்து, அடுப்பில் வைத்து கஞ்சி போல் காய்ச்சி, பால் சர்க்கரை சேர்த்தும் பருகலாம்.

இதனை சாப்பிட்டால்... சத்தும், நல்ல புத்துணர்வும் கிடைக்கும். இரண்டு மாதங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்த லாம்.
============================================================================
 ரவா தோசை மிக்ஸ்

தேவையானவை: வெள்ளை ரவை - 100 கிராம், அரிசி மாவு - 75 கிராம், மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், ஒன்றிரண்டாக பொடித்த மிளகு - சீரகம் - 2 டீஸ்பூன், முந்திரி - 10 (சிறு துண்டுகளாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய காய்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு.

தோசை செய்ய: பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: ரவை, அரிசி மாவு, மைதா மாவு, பொடித்த மிளகு, சீரகம், முந்திரி, கறிவேப்பிலை ஆகியவற்றை கலந்து வைத்துக் கொள்ளவும். தோசை தேவைப்படும்போது, ரவா தோசை மிக்ஸ்,  உப்பு, வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு ரவா தோசை பதத்தில் கரைக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து  இதில் சேர்க்கவும்.

சூடான தோசைக்கல்லில் கரைத்த மாவை பரவலாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, மொறுமொறுப்பாக வந்ததும் ஹோட்டல் தோசை போல் திருப்பிப் போடாமலே எடுத்துப் பரிமாறவும். ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
======================================================================
 தேங்காய் பொடி

தேவையானவை: தேங்காய் - அரை மூடி, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4. கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பையும் காய்ந்த மிளகாயையும் சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும். கறிவேப்பிலை போட்டு வறுக்கவும். தேங்காயைத் துருவி சிவக்க வறுக்கவும். இதனுடன் மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து நைஸாக பொடிக்கவும்.

இட்லி மிளகாய்ப்பொடிக்கு பதிலாக இதை பயன்படுத்தலாம். வித்தியா சமான சுவையில் இருக்கும். சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிட லாம். இரண்டு வாரங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
=====================================================================
சேமியா பகாளாபாத் மிக்ஸ்

தேவையானவை: சேமியா - 100 கிராம், சீரகம் - ஒரு டீஸ்பூன், நறுக்கி காய வைத்த இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் (அ) காய்ந்த மிளகாய் - 2, முந்திரி - 10, திராட்சை - 10. உலர்ந்த கறிவேப்பிலை, நெய், எண்ணெய் - சிறிதளவு.

பகாளாபாத் செய்ய:  உப்பு, புளிப்பில்லாத தயிர், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... சீரகம், இஞ்சி, மிளகாய், முந்திரி, கறிவேப்பிலை போட்டு வறுத்து, திராட்சை சேர்த்து வறுக்கவும். சேமியாவைத் தனியாக நெய் விட்டு வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும்.

சேமியா பகாளாபாத் தேவைப்படும்போது கடாயில் தண்ணீர் ஊற்றி (ஒரு பங்கு சேமியா கலவைக்கு இரண்டு பங்கு தண்ணீர்),  கொதித்ததும் சேமியா கலவை, உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்ததும் இறக்கி ஆற வைத்து, புளிப்பில்லாத தயிர் சேர்த்துக் கலந்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும். இரண்டு வாரங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
=======================================================================
ரெடிமேட் வத்தக்குழம்பு மிக்ஸ்

தேவையானவை: கத்திரிக்காய், சுண்டைக்காய், மணத்தக்காளி இவற்றில் ஏதேனும் ஒரு வற்றல் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2.

வறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு, தனியா - தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 7, வெயிலில் நன்றாக காய வைத்த புளி - நெல்லிக்காய் அளவு, பெருங்காயத்தூள், எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு... கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், வெந்தயம் ஆகியவற்றை வறுத்து, புளி சேர்த்து நன்றாக வதக்கிப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்கள் மற்றும் வற்றலை சேர்த்து வறுக்கவும். இதை அரைத்து வைத்திருக்கும் பொடியுடன் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.

வத்தக்குழம்பு தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் குழம்பு மிக்ஸுடன் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கி, சூடாகப் பரிமாறவும். இந்த மிக்ஸை ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
======================================================================
 உப்புமா கொழுக்கட்டை மிக்ஸ்

தேவையானவை: பச்சரிசி - 150 கிராம், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், எண்ணெய் - சிறிதளவு.

உப்புமா கொழுக்கட்டை செய்ய: தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசியை மிக்ஸியில் ரவையாக உடைத்து சலிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாயைப் போட்டு, சிவந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, உடைத்த ரவையில் கொட்டிக் கலந்து வைத்துக் கொள்ளவும்.

உப்புமா கொழுக்கட்டை தேவைப்படும்போது, கடாயில் தண்ணீர் ஊற்றி (ஒரு பங்கு ரவை கலவைக்கு 2 பங்கு தண்ணீர்) கொதிக்க வைத்து அரிசி ரவை மிக்ஸ், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி மூடி வைக்கவும். அரிசி ரவை நன்றாக வெந்ததும், தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும். ஆறியதும் உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து, வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும்.

இதற்கு தொட்டுக் கொள்ள ஊறுகாயே போதும். சட்னிகூட தேவையில்லை. மூன்று வாரங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
===========================================================================
மோர்க்குழம்பு மிக்ஸ்

தேவையானவை: துவரம்பருப்பு,  கடலைப்பருப்பு - தலா 50 கிராம், பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், தனியா, சீரகம் - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 7, பெருங்காயத்தூள் - சிறிதளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், எண்ணெய் - சிறிதளவு.

மோர்க்குழம்பு செய்ய: தயிர் - 100 கிராம், தேங்காய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, ஏதேனும் ஒரு காய்கறி (வெண்டை, பூசணி, வாழை), எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை: பருப்பு வகைகள், அரிசி,  தனியா, சீரகம், 5 காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, 2 காய்ந்த மிளகாய் தாளித்து... மிக்ஸியில் அரைத்த பொடியுடன் சேர்த்துக் கலக்கி, சேமித்து வைக்கவும்.

மோர்க்குழம்பு தேவைப்படும்போது தயிரை நன்றாகக் கடைந்து, தேங்காய் விழுது சேர்த்துக் கலக்கவும். தயாரித்து வைத்திருக்கும் மோர்க்குழம்பு மிக்ஸை இதனுடன் கலந்து மஞ்சள்தூள் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து நுரை வந்ததும்  இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காயைப் போட்டு வறுத்து, மோர்க்குழம்பில் சேர்க்கவும். இரண்டு வாரங்கள் வைத்திருந்து இந்த மிக்ஸை பயன்படுத்தலாம்.
========================================================================
ரெடிமேட் சாம்பார் மிக்ஸ்

தேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம், உளுத்தம்பருப்பு, தனியா, கடலைப்பருப்பு, கொப்பரைத் துருவல் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8 அல்லது 10, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - சிறிதளவு, வெயிலில் நன்றாக காய வைத்த புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - தேவையான அளவு.

சாம்பார் செய்ய: நறுக்கிய முருங்கை, கத்திரிக்காய், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: வெறும் கடாயில் பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய், தனியாவை வறுத்துப் பொடிக்கவும். புளி, கொப்பரை துருவலையும் தனித்தனியே வறுத்துப் பொடிக்கவும்.  இரண்டு பொடிகளையும் ஒன்றாக சேர்க்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து அரைத்து வைத்திருக்கும் பொடியுடன் கலந்து... மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து, சேமித்து வைக்கவும்.

சாம்பார் தேவைப்படும்போது முருங்கைக்காய், கத்திரிக்காயை நறுக்கி உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு வேக வைக்கவும். அரைத்த சாம்பார் மிக்ஸை தேவைப்படும் அளவுக்கு இதில் சேர்த்து, தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். சாம்பார் வாசனை வந்ததும் இறக்கி, கறிவேப்பிலை சேர்க்கவும். இரண்டு மாதங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
========================================================================
 ரவா உப்புமா மிக்ஸ்

தேவையானவை: வெள்ளை ரவை - 200 கிராம், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு, முந்திரி - 10, காய்ந்த மிளகாய் - 4, எண்ணெய் - சிறிதளவு.

உப்புமா, கிச்சடி செய்ய: மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய், நறுக்கிய வெங்காயம் மற்றும் காய்கறிகள் - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் ரவையைப் போட்டு நன்றாக வறுத்து, தனியே வைக்கவும். மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், முந்திரி, கறி வேப்பிலை போட்டு சிவக்க வறுத்து, ரவையில் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

உப்புமா தேவைப்படும்போது, கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து (ஒரு பங்கு உப்புமா மிக்ஸ் சேர்த்து இரண்டு பங்கு தண்ணீர்), ஒரு டம்ளர் உப்புமா மிக்ஸ், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். ரவை வெந்ததும் நெய் அல்லது எண்ணெய் விட்டு மூடி வைத்து, 5 நிமிடம் 'சிம்’மில் வைத்து இறக்கினால் உப்புமா தயார்.

தண்ணீர் கொதிக்கும்போதே மஞ்சள்தூள், வதக்கிய காய்கறிகளை சேர்த்து, ரவா கிச்சடி போலவும் செய்யலாம். ஐந்தே நிமிடத்தில் செய்துவிடக்கூடிய அருமையான டிபன் இது. இந்த மிக்ஸை இரண்டு மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
===========================================================================
 அரிசி உப்புமா மிக்ஸ்

தேவையானவை: பச்சரிசி - 150 கிராம், துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் - சிறிதளவு, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, துவரம்பருப்பைக் கலந்து மெல்லிய ரவையாக மிக்ஸியில் உடைத்து சலித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாயைப் போட்டு சிவக்க வறுத்து... கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்து, உடைத்த ரவையுடன் கலந்து சேமித்து வைக்கவும். அரிசி உப்புமா தேவைப்படும்போது, கடாயில் தண்ணீர் ஊற்றி (ஒரு பங்கு ரவைக்கு 3 பங்கு தண்ணீர்), உடைத்து சலித்த ரவை, உப்பு சேர்த்துக் கிளறி, நன்றாக வேக விடவும். ரவை வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து மூடி, அடுப்பை 'சிம்’மில் 5 நிமிடம் வைத்து இறக்கி, சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: உப்புமா கிளறும்போது தண்ணீர் பற்றாமல் போனால், கொதிக்கும் தண்ணீரை ஊற்றிக் கிளறலாம். ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
=======================================================================
 தேங்காய் சட்னி மிக்ஸ்

தேவையானவை: தேங்காய் துருவல் - 200 கிராம், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை, புளி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சிவக்க வறுத்து, தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக வறுக்கவும். புளி, உப்பு சேர்த்து அரைத்து, மூடியிட்ட பாத்திரத்தில் சேமிக்கவும்.

இது... புளி சாதம், தயிர் சாதம், இட்லி, தோசைக்கு ஏற்ற ஜோடி.

குறிப்பு: தேவைப்படும் போது தண்ணீரைச் சேர்த்து சட்னியாக தயார் செய்து கொள்ளலாம். ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்தி ருந்து பயன்படுத்த லாம்.
=======================================================================
கோதுமை தோசை மிக்ஸ்

தேவையானவை: கோதுமை மாவு - 200 கிராம், அரிசி மாவு - 150 கிராம், சீரகம், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன்.

தோசை செய்ய: கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவு, அரிசி மாவு, சீரகம், மிளகாய்த்தூள் ஆகியவற்றைக் கலந்து வைத்துக் கொள்ளவும். தோசை தேவைப்படும்போது, இந்த மாவுடன் உப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு, தோசை மாவு பதத்தில் கரைக்கவும். சூடான தோசைக்கல்லில் மாவைப் பரவலாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, மொறுகலானதும் திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுக்கவும்.

இதற்கு இட்லி மிளகாய்ப்பொடி, சட்னி சரியான சைட் டிஷ். மாதக்கணக்கில் இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம். .
==========================================================================
 வெண் பொங்கல் மிக்ஸ்

தேவையானவை: பச்சரிசி - 150 கிராம், பாசிப்பருப்பு - 75 கிராம், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், முந்திரி - 10, உலர்ந்த கறிவேப்பிலை, காய்ந்த இஞ்சித் துண்டுகள், பெருங்காயத்தூள் - சிறிதளவு, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் நெய் விட்டு முந்திரியை வறுக்கவும். மிளகு, சீரகத்தை வறுத்து ஒன்றிரண்டாக பொடிக்கவும். கறிவேப்பிலை,   இஞ்சித் துண்டுகள், பெருங்காயத்தூளை சேர்த்து வறுக்கவும். எல்லாவற்றையும் அரிசி, பாசிப்பருப்புடன் சேர்த்து ஒன்றாக கலந்து வைக்கவும்.

பொங்கல் தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் பொங்கல் கலவையுடன், உப்பு, தண்ணீர் சேர்த்து (ஒரு பங்கு கலவைக்கு நான்கு பங்கு தண்ணீர்) குக்கரில் வைத்து, 5 அல்லது 6 விசில் வந்ததும் இறக்கவும். மேலாக நெய் விட்டு பரிமாற வும். ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
============================================================================
 மிளகு ரச மிக்ஸ்

தேவையானவை: மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - 2 டேபிள்ஸ்பூன், தனியா - ஒன்றரை டேபிள்ஸ்பூன், வெயிலில் காயவைத்த புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, பூண்டுப் பல் - 4, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, நெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் புளியை நன்றாக வறுக்கவும். மிளகு, சீரகம், தனியா ஆகியவற்றை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதனுடன் வறுத்த புளியைச் சேர்த்து அரைத்து, எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து வைக்கவும்.

ரசம் தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் அரைத்த பொடி, தேவையான தண்ணீர், உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்க வைக்கவும். நன்றாக நுரை வந்ததும் இறக்கி, நெய்யில் பூண்டை வதக்கிச் சேர்க்கவும்.

ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
=============================================================================
 வெந்தயக் குழம்பு

தேவையானவை: வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன், குழம்பு மிளகாய்த்தூள், குழம்பு வடகம் - தலா 2 டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் - 2, மஞ்சள்தூள், வெல்லம், கறிவேப்பிலை - சிறிதளவு, உரித்த பூண்டு - ஒரு கைப்பிடி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெந்தயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். காய்ந்த மிளகாயையும் சேர்த்து வறுத்து, தனியே எடுத்து வைக்கவும். சிறிது எண்ணெயில் பூண்டு, குழம்பு வடகத்தை சிவக்க வறுத்து... வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, புளியைக் கெட்டியாக கரைத்து விடவும். உப்பு, மஞ்சள்தூள், குழம்பு மிளகாய்த்தூள், வெல்லம் இதில் சேர்த்து, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும். 

குழம்பு கொதிக்கும்போது வீடே மணக்கும். இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். 

குறிப்பு: சாதத்துடன் சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.
========================================================================
 இஞ்சி புளி

தேவையானவை: இஞ்சி - 50 கிராம், பச்சை மிளகாய் - 10, கெட்டியான புளிக் கரைசல் - 50 கிராம், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், வெல்லம் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய், கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: இஞ்சியைத் தோல் சீவி, பொடியாக நறுக்கி, ஒன்றிரண்டாக இடிக்கவும். பச்சை மிளகாயையும் இடித்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து... நசுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, சுருள வதக்கவும். இதில் புளிக் கரைசல், உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

இதை தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ளலாம். ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
=====================================================================
 எலுமிச்சம்பழ சாத மிக்ஸ்

தேவையானவை: வேர்க்கடலை, நல்லெண்ணெய் - தலா ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு - 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, முந்திரி - 10, கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, கீறிய பச்சை மிளகாய் - 1.

எலுமிச்சம்பழ சாதம் செய்ய: எலுமிச்சைச் சாறு, உப்பு - தேவையான அளவு.


செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். இதில் முந்திரி, வேர்க்கடலை சேர்த்து வறுத்து... மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்தால் எலுமிச்சம்பழ சாத மிக்ஸ் ரெடி! 

எலுமிச்சம்பழ சாதம் தேவைப்படும்போது, சாதத்தை உதிராக வடித்து... அதில் எலுமிச்சம்பழச் சாறு, உப்பு, எலுமிச்சம்பழ சாத மிக்ஸ் கலந்து பரிமாறவும்.

ஒரு வாரம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
==========================================================================
 புளிக் காய்ச்சல்

தேவையானவை: புளி - பெரிய எலுமிச்சம்பழ அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, கறிவேப்பிலை, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், வெல்லம் - சிறிதளவு, வறுத்த வேர்க்கடலை (அ) முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தனியா - அரை டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, எள் - ஒரு டீஸ்பூன் (விருப்பப்பட்டால்) இவற்றை வெறும் கடாயில் சிவக்க வறுத்துப் பொடிக்கவும்.

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு, சிவந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து  வறுக்கவும். வேர்க்கடலை (அ) முந்திரி,  கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, கெட்டியான புளிக் கரைசலை விடவும். இதில் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் போட்டு, நன்றாக கொதித்ததும் வறுத்துப் பொடித்த பொடியை சேர்க்கவும்.  மேலாக எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

வெளியூர் பயணத்தின்போது இதை கையோடு எடுத்து சென்றால்,  தேவையானபோது உதிரான சாதத்தில் கலந்து கொள்ளலாம்.

குறிப்பு: வறுத்துப் பொடிக்கும்போது, சிறிது ஜாதிக்காயை உடைத்து, வறுத்துப் பொடித்து சேர்க்கலாம். ஜீரணத்துக்கு மிகவும் நல்லது. ஒரு மாதம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
========================================================================
தக்காளி சாத மிக்ஸ்

 தேவையானவை: பழுத்த தக்காளி - 10, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தக்காளியில் மூழ்கும்வரை தண்ணீர் விட்டு, 5 நிமிடம் கொதிக்க வைத்து, ஆறியதும் தோல் நீக்கி, மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த தக்காளி விழுதைச் சேர்க்கவும். மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். எண்ணெய் பிரிந்து வரத் தொடங்கியதும் இறக்கி, சேமித்து வைக்கவும்.

இந்த மிக்ஸை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன் படுத்தலாம். தேவைப்படும் போது, சாதத்தை உதிராக வடித்து தக்காளி மிக்ஸை கலந்து சாப்பிடலாம்.
============================================================================
 சீரக குழம்பு

தேவையானவை: சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கடுகு, குழம்பு மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் - 2 டீஸ்பூன், கெட்டியான புளிக் கரைசல் - 50 கிராம், மஞ்சள்தூள், வெல்லம், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சீரகத்தைப் போட்டு பொரிக்கவும். காய்ந்த மிளகாயை கிள்ளி சேர்த்து, புளிக் கரைசலை ஊற்றவும். உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு... கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.

குழம்பு வடகத்தை தாளித்தும் சேர்க்கலாம். ஆறிய சாதத்தில் இந்தக் குழம்பை விட்டு, நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட லாம். தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம். ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
=======================================================================
 பஜ்ஜி மிக்ஸ்

தேவையானவை: கடலைப்பருப்பு - 200 கிராம், பச்சரிசி - 50 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 8, சோடா உப்பு - ஒரு சிட்டிகை, விருப்பமான காய் (வாழைக்காய், வெங்காயம், கத்திரிக்காய், பீர்க்கங்காய், உருளைக்கிழங்கு, கேரட்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: பச்சரிசி, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து சேமித்து வைத்துக் கொள்ளவும். இதுதான் பஜ்ஜி மாவு.

பஜ்ஜி தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு பஜ்ஜி மாவு, உப்பு, சோடா உப்பு ஆகியவற்றை சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். விருப்பமான ஏதாவது ஒரு காயை நன்றாக சீவி, ஒவ்வொரு துண்டாக மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்

குறிப்பு: சோடா உப்புக்கு பதிலாக, ஒரு டேபிள்ஸ்பூன் புளித்த தோசை மாவை பஜ்ஜி மாவுடன் சேர்த்தாலும் உப்பலாக வரும்.  இரண்டு வாரம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
=========================================================================
 ரவா இட்லி மிக்ஸ்

தேவையானவை: ரவை - 100 கிராம், முந்திரி - 10, ஒன்றிரண்டாக பொடித்த மிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கி காய வைத்த இஞ்சி - சிறிதளவு, கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு.

ரவா இட்லி செய்ய: தயிர் - 2 கப், சோடா உப்பு - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ரவையை கடாயில் நன்றாக வாசனை வரும்வரை வறுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு... உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, உடைத்த மிளகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி, முந்திரி சேர்த்து வறுத்து, ரவையுடன் சேர்த்து, எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து வைக்கவும்.

ரவா இட்லி தேவைப்படும்போது அரை மணி நேரத்துக்கு முன்பாக, ரவை கலவையில் தயிர், உப்பு,  சோடா உப்பு கலந்து கொத்தமல்லி போட்டு கலக்கவும். இந்த மாவை இட்லி தட்டில் ஊற்றி, வெந்ததும் எடுக்கவும். ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்த லாம்.
=========================================================================
 தனியா குழம்பு

தேவையானவை: தனியா - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 10, புளி - நெல்லிக்காய் அளவு, நறுக்கிய பூண்டுப் பல் - ஒரு கைப்பிடி அளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் தனியா, மிளகாயை சிவக்க வறுத்துப் பொடிக்கவும். புளியைக் கெட்டியாகக் கரைத்து, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து... வறுத்துப் பொடித்த தனியா - மிளகாய்தூளை போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். பச்சை வாசனை போக கொதித்ததும் இறக்கவும். சிறிது எண்ணெயில் பூண்டை நன்றாக வதக்கி, குழம்பில் சேர்க்கவும்.

இது பத்திய குழம்பு. பசி எடுக்க வைக்கும். ஜீரணத்துக்கு நல்லது.

குறிப்பு: இதை இரண்டு வாரங்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். வறுத்துப் பொடிக்க நேரமில்லாதவர்கள், தனியாத் தூள், மிளகாய்த்தூள் வாங்கி சேர்க்க லாம்.
===========================================================================
 அடை மிக்ஸ்

தேவையானவை: இட்லி புழுங்கலரிசி - 100 கிராம், பச்சரிசி - 50 கிராம், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 75 கிராம், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயத்தூள், காய்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு.

அடை செய்ய: பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: புழுங்கலரிசி, பச்சரிசி, பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் ரவை போல் அரைத்தால்... அடை மிக்ஸ் ரெடி! அதிக அளவு மாவு தேவையாக இருந்தால் மெஷினில் அரைக்கலாம்.

அடை தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு அடை மாவு மிக்ஸ், உப்பு, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு அடை மாவு பதத்தில் கரைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து, சூடான தோசைக்கல்லில் மாவை சிறு அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, நன்றாக வெந்ததும் திருப்பிப் போட்டு மொறுமொறுவென எடுக்கவும்.

குறிப்பு: இதற்கு தொட்டுக் கொள்ள வெல்லம், வெண்ணெய், தேங்காய் சட்னி சூப்பராக இருக்கும். இந்த மிக்ஸை மாதக்கணக்கில் பயன்படுத்தலாம்.
========================================================================
 குழம்பு பவுடர்

தேவையானவை: மிளகு - 75 கிராம், சீரகம், தனியா - தலா 50 கிராம்.

குழம்பு செய்ய: புளி - நெல்லிக்காய் அளவு, பூண்டுப் பல் - 10,    மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: மிளகு, சீரகம், தனியாவை ஒன்றாக மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

குழம்பு தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் புளியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றி... உப்பு, மஞ்சள்தூள், அரைத்து வைத்திருக்கும் பொடி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். எண்ணெயில் பூண்டை நன்றாக வதக்கி குழம்பில் சேர்த்து இறக்கவும் 

சூடான சாதத்தில் கலந்து நெய் சேர்த்து சாப்பிடலாம். இந்த மிக்ஸை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்த லாம்.
============================================================================
 அரிசி - பருப்பு சாதம்

தேவையானவை: சாப்பாட்டு புழுங்கலரிசி - கால் கிலோ, துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன், கடுகு, சீரகத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் துருவல் (அ) நறுக்கிய வெங்காயம், குழம்பு வடகம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு - 3 பல், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, பருப்புடன் சீரகத்தூள், மிளகாய்த்தூள்,     மஞ்சள்தூள், பூண்டு, உப்பு சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, 4 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, குழம்பு வடகம் தாளித்து, தேங்காய் துருவல் (அ) நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கலந்து, சாதத்தில் சேர்த்துக் கலக்கவும்.

இதற்கு வறுத்த வெங்காய வடகம், அப்பளம் தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.
============================================================================
அரிசி - பருப்பு தோசை மிக்ஸ்

தேவையானவை: இட்லி புழுங்கலரிசி - 100 கிராம், துவரம்பருப்பு - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 4, தனியா - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், காய்ந்த கறிவேப்பிலை, சீரகம் - சிறிதளவு. 

தோசை செய்ய: பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் ரவை போல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

தோசை தேவைப்படும்போது, அரைத்த மாவை தேவையானஅளவு எடுத்து... உப்பு, தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைக்கவும். 2 மணி நேரம் கழித்து, வெங்காயம் சேர்த்துக் கலந்து, காயும் தோசைக்கல்லில் மெல்லிய தோசையாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு, நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

சட்னியுடன் சூடாகப் பரிமாறலாம். இந்த தோசையை செய்வதும் ஈஸி... சுவையும் வித்தியாசமாக இருக்கும். ஆறு மாதங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
=======================================================================
 வெங்காய குழம்பு

தேவையானவை: பொடி யாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் - 50 கிராம், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, குழம்பு மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், வெல்லம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு,

செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, வெங்காயத்தை சிவக்க வதக்கவும். காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, புளியைக் கரைத்து ஊற்றி, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். உப்பு, குழம்பு மிளகாய்தூள், மஞ்சள்தூள், வெல்லம் சேர்த்து, குழம்பு நன்றாக மனம் வந்து கொதித்ததும் இறக்கவும்.

இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
==============================================================================
 உளுந்து வடை மிக்ஸ்

தேவையானவை: உளுத்தம்பருப்பு - 100 கிராம், பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு (அ) காய்ந்த மிளகாய் - தேவையான அளவு, உலர்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு.

வடை செய்ய: பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, உளுத்தம்பருப்பு, மிளகு (அ) மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

வடை தேவைப்படும்போது, இந்த மாவுடன் உப்பு, வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து, தண்ணீர் விட்டு வடை மாவு பதத்தில் பிசையவும். 10 நிமிடம் ஊற வைத்து, வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.  ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
==========================================================================
 பருப்பு வடை மிக்ஸ்

தேவையானவை: கடலைப்பருப்பு - 2 கப், காய்ந்த மிளகாய் - 4, சோம்பு, தனியா - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, காய்ந்த இஞ்சி, உலர்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு.

வடை செய்ய: நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, நெய் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், சோம்பு, தனியா, பெருங்காயத்தூள், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து வைக்கவும்.

வடை தேவைப்படும்போது, அரைத்த மிக்ஸுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, நெய், உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து வடை மாவு பதத்தில் பிசையவும். பதினைந்து நிமிடத்தில் வடை மாவு நன்றாக ஊறிவிடும். இந்த மாவை சிறு வடைகளாகத் தட்டி, காயும் எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

Related

30 நாள் 30 வகை சமையல் 526255871398186858

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item