30 வகை ஓட்ஸ் உணவு! -- 30 நாள் 30 வகை சமையல்

ஓட்ஸ் அடை ...

ஓட்ஸ் அடை

தேவையானவை: அரிசி - அரை கப், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு சேர்த்து - அரை கப், கறிவேப்பிலை - சிறிதளவு, முருங்கைக் கீரை - ஒரு கைப்பிடி, தேங்காய் - ஒரு துண்டு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, ஓட்ஸ் - அரை கப், காய்ந்தமிளகாய், வெங்காயம் - தலா 4, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, பருப்பு வகைகளை களைந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஓட்ஸை அரை மணி நேரம் ஊற விடவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். ஊறிய அரிசியுடன் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையைச் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், ஊறிய ஓட்ஸ், முருங்கைக் கீரை, வெங்காயம் தேங்காய் சேர்த்து கலக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, அடையாக சுட்டு எடுக்கவும்.

தேங்காய் சட்னியும், அவியலும் இதற்கு ஏற்ற சைட் டிஷ்கள்!


ஓட்ஸ் பகாளாபாத்

தேவையானவை: ஓட்ஸ், பால் - தலா ஒரு கப், கெட்டித் தயிர் - அரை கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2, நெய் - 2 டீஸ்பூன், துருவிய வெள்ளரிக்காய் - 1, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, மாதுளை முத்துக்கள் - 2 டேபிள்ஸ்பூன், பச்சைத் திராட்சை, உலர்ந்த திராட்சை - தலா 10, கடுகு, சீரகம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு - சிறிதளவு.

செய்முறை: பாலில் ஓட்ஸை நன்கு குழைய வேக விடவும். கடாயில் நெய் விட்டு அதில் பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, கடுகு, கறிவேப்பிலை சீரகம் போட்டு வதக்கவும். இதனுடன், தயிர், உப்பு, வெந்த ஓட்ஸ் எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து இறக்கவும். வெள்ளரிக்காய், மாதுளை முத்து, பச்சை திராட்சை, உலர்ந்த திராட்சை, கொத்தமல்லி சேர்த்துக் கலக்கி பரிமாறவும்.


ஓட்ஸ் பிஸிபேளாபாத்

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், நீளவாக்கில் நறுக்கிய கத்தரிக்காய், முருங்கைக்காய், கேரட், பீன்ஸ், பச்சைப்பட்டாணி சேர்ந்த கலவை - ஒரு கப், துவரம்பருப்பு - அரை கப், புளி கரைசல் - கால் கப், மோர் மிளகாய் - 2, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, உப்பு - சிறிதளவு.

பொடிக்க: காய்ந்த மிளகாய் - 5, மிளகு - 5, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், கசகசா - அரை டேபிள்ஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு துண்டு, சோம்பு - அரை டீஸ்பூன், கிராம்பு - 2, பட்டை - ஒரு பெரிய துண்டு, ஏலக்காய் - 2, கறிவேப்பிலை - சிறிது, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை: துவரம்பருப்பைக் குழைய வேக விடவும். ஓட்ஸை வெந்நீரில் ஊற வைக்கவும். காய்களில் உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் தனித்தனியே வறுத்து பொடித்துக் கொள்ளவும்.

துவரம்பருப்பு, ஓட்ஸ், வெந்த காய்கறிகள், புளித்தண்ணீர், வறுத்து அரைத்த பொடி, உப்பு கலந்து அடுப்பில் சிறிது நேரம் வைத்துக் கிளறவும். எல்லாம் சேர்ந்து வந்ததும், கடாயில் நெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, மோர் மிளகாய் தாளித்து கொட்டிக் கிளறவும்.

கமகமக்கும் ஓட்ஸ் பிஸிபேளாபாத் ரெடி!


ஓட்ஸ் டோக்ளா

தேவையானவை: ஓட்ஸ் -ஒரு கப், கடலைமாவு, தயிர் - தலா அரை கப், சமையல் சோடா - 2 சிட்டிகை, தேங்காய் துருவல் - ஒரு கப், வேர்க்கடலை - ஒரு கைப்பிடி, கொத்தமல்லி - ஒரு கட்டு, முந்திரிப்பருப்பு - 5, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், எலுமிச்சம்பழம் - 1, உப்பு - தேவையான அளவு, நெய் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: தயிரை மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளவும். இதில் உப்பு, சர்க்கரை, கடலைமாவு, ஓட்ஸ், சமையல் சோடா சேர்த்து கெட்டி பதத்தில் கலந்து வைத்துக் கொள்ளவும். வேர்க்கடலையின் தோலை நீக்கிக் கொள்ளவும். முந்திரியை சிறிய துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும். வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு இரண்டையும் நெய்யில் வறுத்து மாவில் கொட்டவும்.

பிறகு, இந்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி, வெந்ததும் சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் (அ) நெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, இந்தத் துண்டுகளைப் போட்டு புரட்டி, தேங்காய் துருவல், கொத்தமல்லி சேர்க்கவும்.

எலுமிச்சம்பழத்தை பிழிந்து, கிளறி பரிமாறவும்.


ஓட்ஸ் தோசை

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், ரவை, கடலை மாவு - தலா கால் கப், புளிப்பில்லாத மோர் - 2 கப், வெங்காயம் - 2, பச்சைமிளகாய் - 4, முந்திரிப்பருப்பு - 10, மிளகு, சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஓட்ஸை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். மோரில் ஓட்ஸ் மாவு, ரவை, கடலைமாவு, உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். மிளகு, சீரகத்தைப் பொடித்து, முந்திரிப்பருப்பை இரண்டாக ஒடித்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து மெல்லிய தோசைகளாக சுட்டு எடுக்கவும்.

வெங்காய சட்னியுடன் சாப்பிட வெகு ஜோராக இருக்கும் இந்த தோசை!


ஓட்ஸ் இட்லி

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், உளுத்தம்பருப்பு - கால் கப், உப்பு - தேவையான அளவு, மிளகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்.

செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும். இதனுடன் ஓட்ஸைக் கலந்து உப்பு சேர்த்து இரண்டு மணி நேரம் புளிக்க விடவும். பிறகு மிளகு சீரகத்தைப் பொடி பண்ணி கலந்து, இட்லிகளாக வார்த்து எடுக்கவும்.

மிருதுவாகவும் வாசனையாகவும் இருக்கும் இந்த இட்லி!


ஓட்ஸ் கார சப்பாத்தி

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், கோதுமை மாவு - அரை கப், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, (பொடியாக நறுக்கவும்) உருளைக்கிழங்கு (வேக வைத்து மசிக்கவும்) - 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, வெங்காயம் - தலா கால் கப், நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஓட்ஸை மிக்ஸியில் போட்டு மாவாக்கிக் கொள்ளவும். இதனுடன் மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்துப் பிசைந்து, சப்பாத்திகளாக தேய்த்து, நெய் தடவி சுட்டு எடுக்கவும்.

தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லாத ருசியான சப்பாத்தி இது!


ஓட்ஸ் கஞ்சி

தேவையானவை: ஓட்ஸ் - 2, டேபிள்ஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், பூண்டு - 10 பல், பால் - அரை கப், தண்ணீர் - ஒன்றரை கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பால், தண்ணீர் இரண்டையும் சேர்த்து கொதிக்க விடவும். இதனுடன் உரித்த பூண்டுப் பல்லையும் சேர்த்து வேக விடவும். பிறகு ஓட்ஸைச் சேர்த்து வெந்ததும் சீரகத்தைத் தூவி, உப்பு சேர்த்து இறக்கவும்.

ஐந்தே நிமிடத்தில் அசத்தல் கஞ்சி ரெடி.


ஓட்ஸ் இனிப்பு குழிப்பணியாரம்

தேவையானவை: ஓட்ஸ் - 2 கப், வெல்லம் - ஒரு கப், சுக்கு - ஒரு சிறிய துண்டு, ஏலக்காய் - 2, சமையல் சோடா - ஒரு சிட்டிகை.

செய்முறை: ஓட்ஸை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். சுக்கு, ஏலக்காயை தட்டிக் கொள்ளவும். வெல்லத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டுக் கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும். இதில் ஓட்ஸ் மாவு, சுக்கு, ஏலக்காய், சமையல் சோடா சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்து பணியாரங்களாக ஊற்றி எடுக்கவும்.


ஓட்ஸ் கார குழிப்பணியாரம்

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், உளுத்தம்பருப்பு - அரைகப், வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 3, கடுகு - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு.

செய்முறை: உளுந்தை அரை மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் ஓட்ஸ் சேர்த்து மிக்ஸியில் அரைத்து 3 (அ) 4 மணி நேரம் புளிக்க விடவும். (உடனடியாக செய்ய வேண்டும் என்றால் தயிர் சேர்த்துக் கொள்ளலாம்) வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கி, கறிவேப்பிலை, ஓட்ஸ் விழுது, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். குழிப்பணியாரச் சட்டியில் மாவை ஊற்றி தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.


ஓட்ஸ் லட்டு

தேவையானவை: ஓட்ஸ், சர்க்கரை, நெய் (அ) டால்டா - தலா ஒரு கப், ஏலக்காய் - 4, முந்திரிப்பருப்பு - 10.

செய்முறை: ஓட்ஸை நெய்யில் வாசனை வரும்வரை வறுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையை அரைத்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்பை ஒடித்து நெய்யில் வறுத்துக் கொள்ளவும். ஏலக்காயை தட்டிக் கொள்ளவும். நெய்யை உருக்கி அதில் இவை அனைத்தையும் சேர்த்துக் கலந்து, லட்டாகப் பிடித்து வைக்கவும்.

எளிதாக செய்யக் கூடிய சுவையும் சத்தும் நிறைந்த லட்டு இது.


ஓட்ஸ் மசாலா உப்புமா

தேவையானவை: ஓட்ஸ் - 2 கப், பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் - தலா ஒரு கப், பச்சை மிளகாய் - 1, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பட்டை, ஏலக்காய், கிராம்பு - தலா 2, நெய் (அ) டால்டா - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: ஓட்ஸை 5 நிமிடம் கொதிக்கிற தண்ணீரில் போட்டு வடிகட்டவும். கடாயில் நெய் விட்டு அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்துத் தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய், தக்காளி போட்டு வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து ஓட்ஸைக் கலந்து கிளறி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.


ஓட்ஸ் மோர்க்களி

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், கெட்டியான மோர் - அரை கப், பச்சை மிளகாய் - 5, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, எண்ணெய் - கால் கப், உப்பு - தேவையான அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லி - ஒரு கட்டு.

செய்முறை: ஓட்ஸை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கொத்தமல்லியில் பாதி எடுத்து, இஞ்சி பச்சைமிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். மோருடன் ஓட்ஸ் மாவு, அரைத்த விழுது, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, ஓட்ஸ் கலவையைக் கொட்டிக் கிளறவும். நன்றாக வெந்து உப்புமா பதம் வந்ததும் மீதம் உள்ள கொத்தமல்லியை பொடியாக நறுக்கித் தூவவும்.


ஓட்ஸ் வடாம்

தேவையானவை: ஓட்ஸ் - 2 கப், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் விழுது, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், ஜவ்வரிசி - ஒரு கப்.

செய்முறை: ஜவ்வரிசியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். ஒரு கப் ஜவ்வரிசி மாவுடன் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்துக் கரைத்து, அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். நன்றாகக் கொதிக்கும்போது ஓட்ஸ், பச்சை மிளகாய் விழுது, பெருங்காயத்தூள், உப்பு, சீரகம், எலுமிச்சைச்சாறு கலந்து இறக்கி வைக்கவும். இவற்றை பிளாஸ்டிக் பேப்பரிலோ, சுத்தமான வெள்ளைத் துணியிலோ வடாமாக இட்டு, காய வைத்து எடுக்கவும்.


ஓட்ஸ் புளி உப்புமா

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், புளி - எலுமிச்சம்பழ அளவு, காய்ந்த மிளகாய் - 10, வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - கால் கப், கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புளியைத் தண்ணீரில் கரைத்து ஒன்றரை கப் அளவில் புளித்தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். ஓட்ஸை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். வெந்தயத்தை வறுத்துப் பொடிக்கவும். புளித்தண்ணீரில் ஓட்ஸ் மாவு, பெருங்காயத்தூள், வெந்தயத்தூள், உப்பு கலந்து தோசைமாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை வறுத்து, கறிவேப்பிலை, மிளகாயை கிள்ளிப் போட்டுத் தாளிக்கவும். பிறகு, கரைத்து வைத்த ஓட்ஸ் கலவையைக் கொட்டி அடிபிடிக்காமல் கிளறவும். நன்றாக வெந்து உப்புமா பதத்துக்கு வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.


ஓட்ஸ் பக்கோடா

தேவையானவை: ஓட்ஸ் - அரை கப், பொட்டுக்கடலை, பச்சரிசி மாவு - தலா கால் கப், வெங்காயம் - ஒரு கப், கொத்தமல்லி - ஒரு கட்டு, பச்சை மிளகாய் - 3, இஞ்சி - சிறு துண்டு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, கறிவேப்பிலை சிறிதளவு, பூண்டு - 4 பல், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: இஞ்சி, கொத்தமல்லி, பச்சைமிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஓட்ஸை அரை மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் பொட்டுக்கடலை மாவு, பச்சரிசி மாவு, வெங்காயம், கொத்தமல்லி, உப்பு, கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு, இஞ்சி வெண்ணெய் சேர்த்து பிசிறி பக்கோடாவாகப் பொரித்து எடுக்கவும்.

*************************************************************************************

ஓட்ஸ் ஃப்ளோட்டிங் பால்ஸ்

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், பால் - அரை லிட்டர், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், சுக்கு - ஒரு சிறு துண்டு (தட்டிக் கொள்ளவும்), ஏலக்காய் - 2, நாட்டு வெல்லம் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஓட்ஸை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பாலைக் காய்ச்சி ஆற விடவும். நாட்டு வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் உருட்டி வைத்த உருண்டைகளைப் போடவும். அவை வெந்து மேல் எழும்பி மிதக்க ஆரம்பித்துவிடும். இதனை வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும். இப்படியே எல்லா உருண்டைகளையும் செய்துக் கொள்ளவும். பிறகு அந்த தண்ணீரில் வெல்லம், ஏலக்காய், சுக்கு, தேங்காய் துருவல், உப்பு போட்டு கொதிக்க விட்டு இறக்கி ஆற வைத்து அதில் பாலை ஊற்றவும்.

ஒரு கிண்ணத்தில் பாதியளவு உருண்டைகளையும், மீதி பால் என விட்டு பரிமாறவும்.


ஓட்ஸ் வடை

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், உளுத்தம்பருப்பு - அரை கப், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), பச்சை மிளகாய் - 3 (வட்டமாக நறுக்க வேண்டும்), மிளகு, சீரகம் - கால் டீஸ்பூன் (ஒன்றிரண்டாக பொடிக்கவும்) இஞ்சி - சிறிய துண்டு (தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்), உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஓட்ஸில் வெந்நீரைத் தெளித்து ஊற வைக்கவும். உளுந்தை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, வெண்ணெய் போல் அரைத்துக்கொள்ளவும். இதனுடன் வெங்காயம் பச்சைமிளகாய், மிளகு, சீரகம், உப்பு, இஞ்சி, ஊற வைத்த ஓட்ஸைக் கலந்து, வடையாகவோ போண்டாவாகவோ சுட்டு எடுக்கவும்.


ஓட்ஸ் ஸ்வீட் பட்டர் பன்

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், பன் - 6, வெண்ணெய், தேங்காய் துருவல், பச்சை, சிவப்பு, மஞ்சள் நிற டூட்டி ஃப்ருட்டி - தலா 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒன்றரை கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், செர்ரி பழம் - 4 (பொடியாக நறுக்கவும்).

செய்முறை: ஓட்ஸில் வெந்நீர் தெளித்து இதை 5 நிமிடம் ஊற வைக்கவும். ஊறியதும் இதனுடன் ஒரு கப் சர்க்கரை, தேங்காய் துருவல், டூட்டி ஃப்ருட்டி, செர்ரி பழம் கலந்து வைத்துக் கொள்ளவும். மீதமிருக்கும் அரை கப் சர்க்கரையை மிக்ஸியில் போட்டு அரைத்து, இதனுடன் வெண்ணெயைக் கலந்து கிரீம் போல குழைத்துக் கொள்ளவும். பன்-ஐக் குறுக்காகக் கீறி அதனுள் ஓட்ஸ் கலவையையும், சர்க்கரை - வெண்ணெய் கலவையையும் வைத்துப் பூசி மூடவும்.

குறைந்த விலையில் சுவையான ஓட்ஸ் ஸ்வீட் பட்டர் பன் ரெடி!


ஓட்ஸ் கட்லெட்

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2, நன்கு வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி - கால் கப், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), கொத்தமல்லி - ஒரு கட்டு, எலுமிச்சம்பழம் - ஒரு மூடி, முட்டை - 1, உப்பு - தேவையான அளவு, ரஸ்க் தூள் - கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3.

செய்முறை: ஓட்ஸில் வெந்நீர் தெளித்து, பத்து நிமிடம் ஊற வைக்கவும். இதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, முட்டை, எலுமிச்சம் பழச்சாறு எல்லாம் சேர்த்துக் கலந்து, கெட்டியாக பிசையவும்.

இந்தக் கலவையை வட்டமாகவோ முக்கோணமாகவோ தட்டி, ரஸ்க் தூளில் புரட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றி சிவக்க வெந்தவுடன் எடுக்கவும்.

தக்காளி சாஸ¨டன் பரிமாறலாம் இந்த டேஸ்ட்டி கட்லெட்டை!


ஓட்ஸ் சூப்

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், பொடியாக நறுக்கிய மஞ்சள் - சிவப்பு - பச்சை குடமிளகாய் சேர்ந்த கலவை - ஒரு கப், வெண்ணெய் - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், பட்டை, பிரியாணி இலை - தலா 1, பால் - 2 கப், ஃப்ரெஷ் கிரீம் - அரை கப், உப்பு - தேவையான அளவு, பூண்டு - 3 பல்.

செய்முறை: ஓட்ஸை கொதிநீரில் பத்து நிமிடம் ஊற வைத்து பிறகு மத்தினால் மசித்துக் கொள்ளவும். இரண்டு கப் பாலில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, இதில் வெந்த ஓட்ஸைக் கலந்து கொதிக்க விடவும்.

கடாயில் வெண்ணெயைப் போட்டு அதில் பூண்டைத் தட்டிப் போட்டு, பட்டை, பிரியாணி இலை, குடமிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும், இதில் வேக வைத்த ஓட்ஸைப் போட்டு கலக்கவும்.

பரிமாறும்போது மிளகுத்தூள், ஃப்ரெஷ் கிரீம் கலந்து பரிமாறவும்.


ஓட்ஸ் பான் கேக்

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், நெய் - 2 டீஸ்பூன், ரவை - அரை கப், வெல்லம் - அரை கப், ஏலக்காய் - 2, தோல் கருப்பாக மாறிய வாழைப்பழம் - 1, வேர்க்கடலை - கால் கப், முந்திரி - 10, பசும்பால் - ஒரு கப், எண்ணெய் - தேவையான அளவு, சமையல் சோடா - சிறிதளவு.

செய்முறை: வேர்க்கடலையைத் தோல் நீக்கி, நெய்யில் வறுத்துக் கொள்ளவும். முந்திரியை சிறிய துண்டுகளாக ஒடித்துக் கொள்ளவும். ஓட்ஸை மிக்ஸியில் போட்டு பவுடராக்கிக் கொள்ளவும். வெல்லத்தைப் பொடித்து தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். இதை ஒருமுறை கொதிக்க வைத்து இறக்கி, இதனுடன் ஓட்ஸ், ரவை, வாழைப்பழம், வேர்க்கடலை முந்திரிப்பருப்பு, பால், சமையல் சோடா, ஏலக்காய் கலந்து சிறிது நேரம் ஊற விடவும்.

தோசைக்கல்லில் வட்டமான கேக்குகளாக ஊற்றி, வெந்ததும் எடுக்கவும்.


ஓட்ஸ் கிச்சடி

தேவையானவை: ஓட்ஸ் - இரண்டு கப், பச்சைப் பட்டாணி, நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் சேர்ந்த கலவை - ஒரு கப், பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 4, தக்காளி - 4, எலுமிச்சம்பழம் - ஒரு மூடி, இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பட்டை, கிராம்பு - தலா 2, கொத்தமல்லி - ஒரு கட்டு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: ஓட்ஸை கொதி நீரில் 10 நிமிடம் போட்டு வடிகட்டவும். பச்சைப் பட்டாணி, கேரட், பீன்ஸை வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், முட்டை கோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, முட்டைகோஸ் போட்டு வதக்கவும். இதனுடன் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும். இதில் வெந்த காய்கறிகளை சேர்த்து வதக்கி, தேவையான உப்பு சேர்த்து ஓட்ஸைப் போட்டுக் கிளறி இறக்கவும்.

எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொத்தமல்லியை பொடியாக நறுக்கித் தூவி பரிமாறவும்.


ஓட்ஸ் குருமா

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், பெரிய வெங்காயம், பழுத்த தக்காளி - தலா 1, பச்சை மிளகாய் - 2, தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய் - ஒரு மூடி, பட்டை, கிராம்பு - தலா 1, ஏலக்காய் - 2, நெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, சாம்பார் வெங்காயம் - 5, சோம்பு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: மிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவி அதனுடன், சாம்பார் வெங்காயம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு அரைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கி, ஓட்ஸைப் போட்டுக் கிளறவும். இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்துக் கிளறி அரைத்த மசாலாவைப் போட்டுக் கொதிக்க வைத்து இறக்கவும்.

காய்கறி இல்லாதபோது செய்யக்கூடிய சூப்பர் குருமா இது.


ஓட்ஸ் கீர்

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், பால் - 2 கப், சர்க்கரை - ஓன்றரை கப், பாதாம், முந்திரிப்பருப்பு - தலா 10, வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், ஏதேனும் ஒரு எசென்ஸ் - ஒரு சொட்டு, கிஸ்மிஸ் பழம் 10.

செய்முறை: முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு தலா 5 எடுத்து தோல் உரித்து பாலில் ஊற வைக்கவும். வேர்க்கடலையைத் தோல் நீக்கி நெய்யில் வறுத்துக்கொள்ளவும். இந்த மூன்றையும் மையாக அரைக்கவும். மீதம் உள்ள பாதாம், முந்திரிப்பருப்பை சிறிய துண்டுகளாக வெட்டி, நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். பாலுடன் ஓட்ஸைக் கலந்து நன்கு குழைய வேக வைக்கவும். இதனுடன் அரைத்த விழுதை சேர்த்துக் கலக்கவும். பிறகு சர்க்கரையைக் கொட்டி கிளறவும். ஓரளவு கெட்டியான பதத்தில் வந்ததும் இறக்கி வறுத்த முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, கிஸ்மிஸ் பழம், எசென்ஸ் கலந்து ஃபிரிட்ஜில் குளிர வைத்துப் பரிமாறவும்.


ஓட்ஸ் இனிப்பு உண்டை

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், வெல்லம் - அரை கப், பயத்தம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் - ஒரு பெரிய துண்டு, எள் - ஒரு டேபிள்ஸ்பூன், சுக்கு - ஒரு சிறிய துண்டு.

செய்முறை: ஓட்ஸை மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை பல் பல்லாக நறுக்கி சிறிதளவு நெய்யில் வறுத்துக் கொள்ளவும். பயத்தம் பருப்பை வாசம் வரும்வரை வறுக்கவும். சுக்கைத் தூளாக்கிக் கொள்ளவும். எள்ளை வாசனை வரும் வரை வறுக்கவும். வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டி விட்டு இளம்பாகு வைக்கவும். இதில் ஒட்ஸ் மாவைப் போட்டுக் கிளறவும். பிறகு இதனுடன் தேங்காய், எள், பயத்தம் பருப்பு, சுக்குத்தூள் போன்றவற்றைப் போட்டு கிளறி, இறக்கி, பொறுக்கக்கூடிய சூட்டில் உள்ளங்கையில் வைத்து சிறிது சிறிதாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.


ஓட்ஸ் மிக்ஸர்

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், கார்ன் ஃப்ளேக்ஸ், அவல், வேர்க்கடலை - தலா கால் கப், முந்திரிப்பருப்பு - 10, வெள்ளரி விதை - ஒரு டேபிள்ஸ்பூன், பொட்டுக்கடலை - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, பூண்டு - 3 பல், மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை: ஓட்ஸ், கார்ன் ஃப்ளேக்ஸ், அவல் மூன்றையும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். கறிவேப்பிலையை எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். பூண்டை நசுக்கிக் கொள்ளவும்.

ஒரு பெரிய வாய் அகன்ற பாத்திரத்தில் ஒட்ஸ், கார்ன் ஃப்ளேக்ஸ், முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, அவல் கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், வெள்ளரி விதை, பொட்டுக்கடலை எல்லாவற்றையும் கலந்து குலுக்கி, பாட்டிலில் போட்டு வைக்கவும்.


ஓட்ஸ் சாண்ட்விச்

தேவையானவை: ஓட்ஸ் - அரை கப், புதினா, கொத்தமல்லி - ஒரு கட்டு, பச்சைமிளகாய் - 2, தக்காளி - 2, வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2, பெரிய வெங்காயம் - 3, வேக வைத்த பச்சை பட்டாணி - கால் கப், கேரட் - 1 (பொடியாக துருவவும்), மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஓட்ஸை பத்து நிமிடம் கொதிநீரில் ஊற வைத்து வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, கேரட் சேர்த்து வதக்கவும். கேரட் வெந்ததும் அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, வேக வைத்த பச்சைப் பட்டாணி கலந்து கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், ஊற வைத்த ஓட்ஸ், உப்பு கலந்து சுருள வதக்கவும். கொத்தமல்லி, புதினா கலந்து இறக்கவும்.

டோஸ்டு செய்த ப்ரெட் ஸ்லைஸ் நடுவே இந்தக் கலவையை வைத்துப் பரிமாறவும்.

இதற்கு தொட்டுக் கொள்ள தக்காளி சாஸ் நன்றாக இருக்கும்.


ஓட்ஸ் கார உண்டை

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4, தேங்காய் - ஒரு துண்டு, கறிவேப்பிலை - சிறிது, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஓட்ஸை வாசனை வரும் வரை வறுத்து, ரவை பதத்தில் உடைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, மிளகாயை கிள்ளிப் போட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். தேங்காயை பல்லு பல்லாக நறுக்கி, தனியே சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

ஓட்ஸில் உப்பு சேர்த்து, எல்லாவற்றையும் போட்டு, குறைவாகத் தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். இதில் சிறிது எடுத்து உள்ளங்கையில் வைத்து அழுத்தவும். இப்படி எல்லாவற்றையும் செய்து கொண்டு ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.


ஓட்ஸ் பிரதமன்

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், கறுப்பு வெல்லம் - அரை கிலோ, தேங்காய் - 3, ஏலக்காய் - 2, முந்திரி பருப்பு, கிஸ்மிஸ் - தலா பத்து, தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: ஏலக்காயை தட்டிக் கொள்ளவும். முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழத்தை தேங்காய் எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி முதலில் வரும் கெட்டிப்பாலைத் தனியாக வைத்துக் கொள்ளவும். பிறகு வரும் இரண்டாம் பால், மூன்றாம் பாலைத் தனியாக வைத்துக் கொள்ளவும்.

வெல்லத்தை சுத்தம் செய்து அதில் மூன்றாவதாக எடுத்த தேங்காய்ப்பாலை ஊற்றி, கிளறிக் கொண்டே இருக்கவும். இது கெட்டியானதும் இரண்டாவதாக எடுத்த பாலை ஊற்றிக் கிளறவும். ஓரளவு கெட்டியாக வந்ததும், ஓட்ஸையும் மூன்றாவதாக எடுத்த பாலையும் ஊற்றிக் கிளறவும். இது தேன் நிறத்துக்கு வரும்போது இதனுடன் முந்திரி, ஏலக்காய், கிஸ்மிஸ் கலந்து இறக்கவும்.

*******************************************************************************************

Related

30 நாள் 30 வகை சமையல் 5441581415481467675

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item