நெல்லை 'வெள்ளரி அல்வா’! --சமையல் குறிப்புகள்
நெல்லை 'வெள்ளரி அல்வா’! நெல்லை என்றாலே 'அல்வா’தான். 'பொதிகை மலையில் உற்பத்தியாகி, அங்குள்ள அரிய வகை மூலிகைச் செடிகளுக்கு இடையே...
நெல்லை 'வெள்ளரி அல்வா’!
நெல்லை என்றாலே 'அல்வா’தான். 'பொதிகை மலையில் உற்பத்தியாகி, அங்குள்ள அரிய வகை மூலிகைச் செடிகளுக்கு இடையே ஓடிவரும் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரைப் பயன்படுத்தி செய்வதால்தான், எங்கள் அல்வாவுக்கு அவ்வளவு சுவை' என்கிறார்கள் நெல்லைக்காரர்கள்.
உடல் சூட்டைத் தணிக்கவல்ல வெள்ளரி அல்வா, இப்போது நெல்லையில் ஹாட். ''வெள்ளரி விதைகள் மின்ன பச்சை நிறத்துல இருக்குற இந்த அல்வாவை கோதுமை மாவு அல்லது மக்காச்சோள மாவுகொண்டு செய்யலாம். கோதுமை மாவுல செய்யும் போது சுவை அதிகமா இருக்கும். ஆனா, கூடுதல் கவனம் தேவை. கொஞ்சம் அசந்தாலும் அல்வா கெட்டியாகி சாப்பிட முடியாத பக்குவத்துக்குப் போயிடும். அதனால வீட்டுல இந்த அல்வாவைச் செய்றவங்க, முதல்ல மக்காச்சோள மாவுல டெஸ்ட் பண்ணிட்டு, கோதுமை மாவுக்கு மாறுறதுதான் நல்லது!'' என டிப்ஸ் தந்து, செய்முறையைத் தொடர்ந்தார் பாளையங்கோட்டை, 'ஸ்ரீராம் லாலா ஸ்வீட்ஸ்’ உரிமையாளர் சுப்பிரமணியன். 65 வருட அனுபவம் மற்றும் பாரம்பரியம் கலந்த சுவை இவர்களுடையது.
தேவையான பொருட்கள்: மக்காச்சோள மாவு - அரை கிலோ, சர்க்கரை - 2 கிலோ, வெள்ளரி விதை - 100 கிராம்.
செய்முறை: மக்காச்சோள மாவை ஒரு லிட்டர் தண்ணீரில் நன்றாகக் கரைத்து பால்போல ஆக்க வேண்டும். அதனுடன் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்துச் சூடாக்க வேண்டும். லேசாக சூடானதும் ஒரு கிலோ சர்க்கரையை அதில் சேர்க்க வேண்டும். இதுவரை பாலாக இருந்த மக்காச்சோள மாவு, சர்க்கரை போட்டதும் கெட்டியாக ஆரம்பிக்கும். கெட்டியாக விடாமல் நன்றாக கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். அதோடு கொதிக்கவும் விடக்கூடாது. கொதித்து விட்டால் ஆங்காங்கே கட்டியாகிவிடும். அதனால் தேவையான அளவுக்குத் தண்ணீர் சேர்த்து கலக்கியபடி, மீதி இருக்கும் சர்க்கரையையும் சேர்க்க வேண்டும். பேஸ்ட்போல உருவாகி வரும்போது காய்ந்த வெள்ளரி விதைகளை அதன் மீது பரவலாகத் தூவ வேண்டும். பசுமை நிறம் தேவை என்றால், கடையில் கிடைக்கும் கலர் பொடியை சிறிது தூவி கலக்கியபின் இறக்கிவிட வேண்டும்.
அதிகபட்சம் இருபது நிமிடத்தில் இந்த வேலை முடிந்தாலும் அதன் பிறகு, மூன்று மணி நேரத்துக்கு அந்தப் பாத்திரத்தை மூடி, அப்படியே ஆற வைக்க வேண்டும். மெதுவாக ஆறினால் மட்டுமே நெகிழ்வான நிலையில் அல்வா இருக்கும்.
Post a Comment