முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு-மாமனிதர்கள்! வரலாற்றில் ஒரு ஏடு!!

முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு இஸ்லாத்திற்கு முன்பு..! இஸ்லாத்திற்கு முந்தைய நாட்களில் அபுபக்கர் (ரலி) அவர்களின் இயற் பெயர...

முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு இஸ்லாத்திற்கு முன்பு..! இஸ்லாத்திற்கு முந்தைய நாட்களில் அபுபக்கர் (ரலி) அவர்களின் இயற் பெயராக அப்துல் கஃபா என்ற பெயர், இஸ்லாத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டதன் பின் மாற்றம் செய்யப்பட்டு, அப்துல்லா என்றழைக்கப்பட்டார். ஆனால் இன்றைக்கு இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களிலும் சரி, அதன் பின்னாளிலும் சரி அவரது இயற் பெயர் மறைந்து, அபுபக்கர் சித்தீக் என்றழைக்கப்பட்டார்கள். அபுபக்கர் என்பது அவரது பரம்பரைப் பெயராகவும், மக்கள் அவரை அன்போடு சித்தீக் என்றும் அழைத்து பின்னாளில், அபுபக்கர் சித்தீக் என்று, இன்றும் கூட அதே பெயரில் அவரது பெயர் வரலாற்றில் நிலைத்து விட்டது. இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அபுபக்கர் (ரலி) அவர்களும் இருவரும் முர்ரா என்ற ஒரே வம்சப் பரம்பரையிலிருந்து வந்தவர்கள் தான். அபுபக்கர் (ரலி) அவர்களுடைய தந்தை உதுமான் அபு குகஃபா அவர்கள் இஸ்லாத்தினைத் தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட போது, அவர்களுக்கு 90 வயதாகி இருந்தது. அதாவது சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், மக்கா வெற்றியின் போது ஹிஜ்ரி 8 ல் தான் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டார். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட 6 வருடங்கள் கழித்து அதாவது உமர் (ரலி) அவர்கள் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று வழி நடத்திக் கொண்டிருந்த கால கட்டத்தில் இறந்து விட்டார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களது தாயாரும் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டார்கள். இவரும் பனீ தயீம் என்ற இறைத்தூதர் (ஸல்) வழி வந்த குலத்தில் பிறந்தவர்கள் தான். யானை ஆண்டு என்று சொல்லக் கூடிய ஹிஜ்ரத்திற்கு முந்தைய 50 ஆண்டுகளும் 6 மாதங்களுக்கு முன்பாக அபுபக்கர் (ரலி) அவர்கள் மக்காவில் பிறந்தார்கள். இஸ்லாத்திற்கு முந்தைய அந்த கால கட்டத்திலும் கூட குறைஷிக் குலத்தவர்களில் அபுபக்கர் (ரலி) அவர்கள் நல்ல மரியாதைக்குரிய குறிப்பிடத்தகுந்த ஒருவராகத் திகழ்ந்தார்கள். மக்காவில் இஸ்லாத்திற்கு முந்தைய கால கட்டத்திலும் இன்னும் அதற்குப் பின் வந்த கால கட்டத்திலும் மக்காவில் நன்கு மதிக்கப்பட்ட 10 தலைவர்களில் ஒருவராக அபுபக்கர் (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள். இவர் மக்காவில் பிறந்து வளர்ந்திருந்தாலும் வியாபார நிமித்தமாக அடிக்கடி சிரியா, எமன் போன்ற நாடுகளுக்குச் சென்று வரக் கூடியவராக இருந்தார். இவ்வாறு அவர் வியாபார நிமித்தமாக முதன் முதலாக மக்காவை விட்டுச் செல்லும் பொழுது அவருக்கு வயது 18. இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு கூட அபுபக்கர் (ரலி) அவர்களிடம் காணப்பட்ட நல்லலொழுக்கங்கள், பண்பாடுகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றுக்காக மக்களிடம் மிகவும் பிரபல்யமான மனிதராகத் திகழ்ந்தார்கள். பிரச்னைக்குரிய விஷயங்களில் மக்கள் இவரிடம் வந்து கலந்தாலோசனை செய்வதும், அவர் கூறக் கூடிய கருத்துக்களுக்கு அதிக மதிப்புக் கொடுக்கக் கூடியவர்களாகவும் மக்கத்து மக்கள் இவரைப் போற்றி வந்தார்கள். அன்றைக்கு மக்காவில் இருந்த மிகப் பெரிய குலத்தவர்களில் மிகவும் செல்வாக்குப் பெற்ற மதிப்புப் பெற்ற குடும்பத்தில் ஒருவராக, குறிப்பாக மக்காவில் வசிக்கக் கூடிய குலங்களில் மிகவும் முதன்மை பெற்ற குலங்களில் ஒன்றில் பிறந்த அபுபக்கர் (ரலி) அவர்கள். அன்றைய அரபுலகத்தில் கொலைக்குப் பகரமாக இரத்த இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளும் வழக்கமிருந்தது. அவ்வாறு பெறக் கூடிய பணம் அபுபக்கர் (ரலி) அவர்களின் சம்மதமில்லாமல் பெறப்படுவதில்லை என்றதொரு நிலை கூட அன்றைய நாட்களில் நிலவி வந்தது. கவிதை புனைவதில் மிகுந்த திறமை பெற்றவராக இருப்பினும், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின் அதனை முழுமையாக விட்டொழித்து விட்டார். இன்னும் இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்பு கூட மதுவின் வாடையைக் கூட நுகராத மனிதராகத் திகழ்ந்தவர் தான் அபுபக்கர் (ரலி) அவர்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின்பு..! இஸ்லாத்தின் வெளிச்சப் புள்ளிகள் மக்காவைத் தரிசப்பதற்கு முன்புள்ள கால கட்டத்தில், இறைத்தூதர் (ஸல்) அவர்களை அடிக்கடி பார்த்துப் பேசி வரும் வழக்கமுள்ளவராக அபுபக்கர் (ரலி) அவர்கள் இருந்தும், இஸ்லாமிய அழைப்பு முதன் முதலாக விடுக்கப்பட்ட அந்த நாட்களில் அவர் எமன் தேசத்திலிருந்தார். பின் எமனிலிருந்து திரும்பி மக்கா திரும்பியவரை அபு ஜஹ்ல், உத்பா, ஷைபா போன்ற மக்காவின் மிகப் பிரபலங்கள் அவரைச் சென்று சந்தித்து, மக்காவின் வெளிச்சப் புள்ளியை விட்டில் பூச்சியாக்க நினைத்தனர். வீட்டிற்கு தன்னைப் பார்க்க வந்த அபு ஜஹ்ல், உத்பா, ஷைபா போன்றோரை விளித்து, என்ன விஷயமாக வந்திருக்கின்றீர்கள், ஏதேனும் விசேஷ செய்தி உண்டா? என்று அவர்களைப் பார்த்து அபுபக்கர் (ரலி) அவர்கள் வினவுகின்றார்கள். ஆம்! அது ஒரு மிகப் பெரிய செய்தி..! அபூதாலிப்பின் பாதுகாப்பில் வளரக் கூடிய அந்த அநாதை, தன்னை ஒரு இறைத்தூதரென்று பிதற்றிக் கொண்டு திரிகின்றார். நாங்கள் உங்களுடைய வருகைக்காகத் தான் காத்திருக்கின்றோம். நீர் வந்தவுடன் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும், இன்னும் இதில் உம்முடைய ஆலோசனை என்ன என்பதையும் நாங்கள் அறிய மிக ஆவலாக இருக்கின்றோம். அதற்காகத் தான் உங்களது இல்லமும் வந்தோம் என்று தாங்கள் வந்தததன் நோக்கத்தை அந்த நச்சவரங்கள் வெளிப்படுத்தின. இல்லை, விஷத்தைக் கக்கினர். விஷங்கள் விருட்சங்களை என்ன செய்யும்..! செய்தியைக் கேள்விப்பட்ட அபுபக்கர் அவர்கள் தன்னைப் பார்க்க வந்த பெருந்தலைகளை விட்டு விட்டு, தன் ஆருயிர்த் தோழரைக் காண விரைந்து செல்கின்றார். தோழரே..! நான் கேள்விப்பட்ட செய்தி உண்மையா? ஆம்! என்றுரைத்தார் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். உங்களுடைய அந்த அழைப்பின் அர்த்தம் என்ன? லா இலாஹ இல்லல்லாஹ்! முஹம்மதுர் ரசூலுல்லாஹ்! என்ற ஓரிறைக் கொள்கையின் தத்துவத்தை அபுபக்கர் அவர்களுக்கு அண்ணலார் (ஸல்) அவர்கள் விளக்குகின்றார்கள். இஸ்லாத்தை பற்றி இதற்குப் பிந்தைய நாட்களில் கேள்விப்பட்ட அனைவரும் அந்தக் கொள்கையை முன்பு மறுத்து அல்லது தாமதப்படுத்தியோ தான் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அபுபக்கர் அவர்களோ அழைப்பின் வெளிச்சப் புள்ளியைக் கண்டவுடன், தானே சூரியனாக மலர்ந்து நின்றார்கள். உடனே ஏற்றுக் கொண்டார்கள். எந்தவித சுணக்கமும் அவர்கள் காட்டவில்லை என்பது அவருக்கு இறைக் கொள்கையின் மீதுள்ள பற்றும் இன்னும் அதனைக் கொண்டு வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மீதிருந்த நம்பிக்கை மற்றும் அன்பும் தான் காரணமாகும். அபுபக்கர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களின் வரிசையில், அதாவது வயது வந்தோர்களின் வரிசையில் முதலாவது நபராகவும், இன்னும் சிறுவர்களின் வரிசையில் அலி (ரலி) அவர்கள் முதலாவது நபராகவும் இருந்தார்கள். இன்னும் கதீஜா (ரலி) அவர்கள் பெண்களில் முதலாவது நபராகவும் இருந்தார்கள். அடிமைகளில் ஜைத் பின் ஹாரிதா (ரலி) அவர்கள் முதலாவது நபராகவும் இருந்தார்கள். முதல் வசனம் இறங்கியதன் பின்பு ஏழு நாட்களில் கழித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர் ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள். ஆனால் அபுபக்கர் (ரலி) அவர்களும், அலி (ரலி) அவர்களும் இவருக்கு முன்பாகவே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டனர். எப்பொழுது இஸ்லாத்தை அபுபக்கர் (ரலி) அவர்கள் ஏற்றுக் கொண்டார்களோ, அப்போதிருந்திருந்தே தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக தனது உடல், பொருள், ஆவி, திறமைகள், அனைத்தையும் வழங்கினார்கள். அவரது வாழ்க்கை முழுவதுமே தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக மாசு மறுவில்லாமல் அவர் தன்னையே இழந்த சரித்திரச் சான்றுகளைத் தான் நாம் காண முடியும். இன்னும் ஹஸ்ரத் உதுமான் (ரலி), சுபைர் (ரலி), தல்ஹா (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) போன்ற இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஸாபிக்கூன் அவ்வலூன் என்ற இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முன்னோடிகளில் அபுபக்கர் (ரலி) அவர்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவராக கணிக்கப்பட்டதற்குக் காரணம், அவரது அப்பழுக்கில்லாத தியாக வாழ்வு தான் என்றால் அதில் மிகையில்லை. இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டமைக்காக ஏகப்பட்ட அடிமை முஸ்லிம்கள், அவர்களது எஜமானர்களால் துன்புறுத்தப்பட்ட பொழுது அந்தக் கொடுமையைச் சகிக்காது தன்னுடைய சொந்த செல்வத்தைக் கொடுத்து, அந்த அடிமை வாழ்வு வாழ்ந்த முஸ்லிம்களை விடுதலை செய்த பண்பாளராக அபுபக்கர் (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள். அற்பணம் மற்றும் தியாகம் இஸ்லாத்தின் அந்த ஆரம்ப மூன்று வருடங்கள் இஸ்லாத்தின் அழைப்புப் பிரச்சாரம் பணி மிகவும் ரகசியாகவே நடந்து வந்தது. அந்த கால கட்டத்தில் அபுபக்கர் (ரலி) அவர்கள் இஸ்லாமிய அழைப்பிற்கான தனது பங்களிப்பையும் மிகவும் ரகசியமாகவே செய்து வந்தார்கள். அதன் நான்காவது வருடம் கீழக்காணும் வசனம் இறங்கியது. உமக்குக் கட்டளையிடப் பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக! இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணித்துவிடவீராக! (15:94) மேற்காணும் வசனம் இறங்கியவுடன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தூதுத்துவப் பிரச்சாரத்தை வெளிப்படையாகச் செய்ய ஆரம்பித்தார்கள். இணை வைத்து வணங்கும் அந்தக் கொடிய செயலைச் சாடினார்கள். அவர்களது அறியாமையை இடித்துரைத்தார்கள். அழைப்புப் பணியின் இந்த ஆரம்ப தருணங்கள் இஸ்லாத்தின் கொடிய விரோதிகளை மிகவும் உசிப்பேற்றி விட்டது. இஸ்லாத்திற்கு எதிராக அவர்கள் போர்ப் பிரகடனத்தையே செய்தார்கள் என்றால் அது மிகையில்லை. இன்னும் அவர்கள் எந்தளவு கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்டு இஸ்லாத்தின் வெளிச்சப் புள்ளிகளை பனிப் புகை கொண்டு மறைத்து விடலாம் என்று கூடக் கனவு கண்டார்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது சொல்லொண்ணா துன்பத்தைக் கட்டவிழ்த்து விட்டார்கள். இந்தக் கொடுமையான தருணங்கள் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது புரியப்பட்ட கொடுமைகளை தானும் பங்கு போட்டுக் கொண்டு, தனது தலைவரது சுமையைக் குறைக்;கவும் செய்தார்கள். இன்னும் இஸ்லாத்தின் அழைப்பானது தங்களது கடவுள்களுக்கு அவமரியாதையை ஏற்படுத்தி விட்டது, தங்களது கடவுள்களின் பெருமை போய் விட்டது என்றும், இன்னும் தங்களது கடவுள்களின் கீர்த்திகளைப் பற்றியும் மக்காவின் அந்த கஃபா எல்லையில் உட்கார்ந்து கொண்டு, அந்த குறைஷிகள் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த நேரத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஃபாவினுள் நுழைகின்றார்கள். இதைக் கண்ட அவர்களது கோபம் இன்னும் தலைக்கேறியது. அதில் ஒருவன் எழுந்து வந்து, நீர் தானா எங்களது கடவுளர்களை விமர்சித்துப் பேசித் திரிவது? என்று கேட்டான். இறைத்தூதர் (ஸல்) அவர்களோ! எந்த பயமுமின்றி ஆம்! நான் தான்! என்றார்கள். இதைக் கேட்ட அத்தனை குறைஷியர்களும் ஒட்டுமொத்தமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது விழுந்தார்கள், இன்னும் அவர்களைத் தாக்க ஆரம்பித்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டே, நீர் தானா எங்களது இத்தனை கடவுள்களுக்கும் பகரமாக ஒரே ஒரு கடவுளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றீர்? என்று கேட்டுக் கொண்டு, அடித்துக் கொண்டிருக்கும் போதே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது சுயநினைவை இழந்து மயங்கிக் கீழே விழுந்தார்கள். அந்தத் தருணத்தில் அபுபக்கர் (ரலி) அவர்கள் தனது ஆருயிர்த் தோழரை அந்த இஸ்லாத்தின் எதிரிகளிடமிருந்து காப்பாற்ற விரைந்து வந்தார்கள். அந்த மடையர்களிடம் கேட்டார்கள் : அல்லாஹ் தான் எனது இறைவன், அவன் தான் அகில உலகங்களையும் பரிபாலிக்கக் கூடியவன் என்று கூறியதற்காகவா அவரை நீங்கள் கொலை செய்யப் பார்க்கின்றீர்கள்? நீங்கள் அத்துமீறிய சமுதாயமாகவல்லவா இருக்கின்றீர்கள்? என்று கூறிக் கொண்டிருக்கும் போதே, அவரையும் அவர்கள் தாக்க ஆரம்பித்தார்கள், இப்பொழுது அபுபக்கர் (ரலி) அவர்களது மண்டை உடைந்து இரத்தம் கொட்ட ஆரம்பித்தது. இப்பொழுது அபுபக்கர் (ரலி) அவர்களது உறவினர்கள் விரைந்து வந்து, எதிரிகளிடமிருந்து இருவரையும் காப்பாற்றுகின்றனர். தலையில் அடிபட்டு இரத்தம் வழிந்து கொண்டிருந்த அந்த நிலையிலும், அவர்களது உதடுகள் தன்னைப் படைத்த இறைவனையும், திருத்தூதர் (ஸல்) அவர்களையும் கண்ணியப்படுத்திக் கொண்டே இருந்தது. படுகாயமுற்ற அபூபக்கர் (ரலி), அவருடைய இல்லத்திற்க எடுத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு அவருக்கு உடனடி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. நீண்ட நேரத்திற்குப் பின் அவருக்கு சுயநினைவு வந்தது. எனினும், உடலெல்லாம் இருந்த இரத்தக் காயங்களின் வேதனைகள் காரணமாக முனகிய போது, அவரருகே கவலையே உருவாக இருந்த அவரது அன்னை துடிதுடித்துப் போனார்! சற்று நேரத்திற்குப் பின் அவர் பேசும் நிலையை அடைந்தார். அதுகண்ட அவரது அன்னை, தன் மகனின் காயங்களுக்குக் கட்டுப் போட்டு விட்டு அன்புடன் தலையை வருடிக் கொண்டே மகனே! உனக்கு எப்படி இருக்கின்றது? என்று வினவினார். ஆனால், அபுபக்கர் (ரலி) அவர்களோ அன்னைக்கு உடனடியாகப் பதில் கூறவில்லை. மாறாக, சற்று தாமதித்து அம்மா! அல்லாஹ்வின் தூதர் அவர்களைப் பற்றி எனக்குக் கூறுங்கள். அவர்கள் எங்கு இருக்கின்றார்கள்? எப்படி இருக்கின்றார்கள்? அவர்களுக்கு ஆபத்து ஏதும் இல்லையே? என்று மிக மெதுவாகக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார். இந்த இக்கட்டான நிலையிலும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றியல்லவா இவர் பேசுகின்றார்? இவர் அவரிடம் எத்தகைய பற்றும் பாசமும் வைத்திருப்பார் என வியப்புற்ற நிலையில் அவ்வன்னை அபூபக்கர் (ரலி) அவர்களை ஆர்வத்துடன் நோக்கினார். பின்னர், அன்புள்ள என் மகனே! நீ உன் காயங்களைப் பற்றியோ, அவை தரும் வேதனையைப் பற்றியோ கவலைப்படவில்லை. ஆனால் அந்த நண்பரைப் பற்றித்தான் கவலைப்படுகின்றாய்! அது தான் உன் உள்ளத்தில் மிகைத்து நிற்கிறது. அந்த அளவு அவர் மீது பாசம் கொள்ள அவர் என்ன செய்தாரோ? நீ ஏதோவொன்றினால் ஆட்கொள்ளப்பட்டுள்ளாய் எனத் தெரிகிறது. கவலைப்படாதே! மகிழ்ச்சியாக இரு! உனது நண்பர் எந்தப் பிரச்னையும் இல்லாது நல்ல நிலையில் இருக்கின்றார். அவருக்காக வருத்தப்படுவதை விட்டு விட்டு உன் நிலை எப்படி எனக் கூறு! எனக் கண்ணீர் பெருக அந்த அன்னை வேண்டி நின்றார். இப்படி தாயும் மகனும் சற்று நேரம் உரையாடினர். அப்போது தாயாருடைய கருத்துக்கள் புதியதொரு கோணத்திலிருந்து வருவதை உணர்ந்த அபூபக்கர் (ரலி) அவர்கள் அன்னையை அன்புடன் உற்று நோக்கினார். அன்னை இஸ்லாத்தை அறியும் ஆவல் கொண்டுள்ளார் என்பதை உணர்ந்த அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. மகிழ்ச்சி மிகுதியால் தம் உடற்காயங்களைக் கூட மறந்து விட்டார்! ஆமாம், இப்படியான மகிழ்ச்சியும் மனநிறைவும் அவரது வாழ்வில் என்றுமே இருந்ததில்லை என்ற உணர்வு அவருக்கு எற்பட்டு விட்டது. அன்றிரவு அதிக நேரத்தை தம் அன்னையுடன் கழித்த அபூபக்கர் (ரலி) அவர்கள், இஸ்லாத்தின் மேன்மை, இறைத்தூதரின் உயர் குணங்கள் என்பன பற்றி அழகாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறினார்கள். அவர்களது உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்பட்ட அந்தக் கருத்துக்கள் அந்த அன்னையின் இதயக் கதவுகளைத் தட்டித் திறந்து கொண்டு உள்ளே சென்றன! ஏற்கனவே தம் மைந்தனின் நற்பண்புகளை நன்கு அறிந்திருந்த அவ்வன்னை, அதே மகன் மூலம் இஸ்லாத்தைத் தெரிந்து கொண்ட போது புத்துணர்வு பெற்றார். படிப்படியாக அவரிடம் பல மாற்றங்கள் நிகழலாயின. மறுநாள் காலை, உம்முல் கைர் என அழைக்கப்பட்ட சல்மா பிந்தி சக்ர் அதாவது அபூபக்கர் (ரலி) அவர்களின் அன்னை இஸ்லாத்தைத் தழுவும் ஆர்வம் கொள்ளவே, அவர்களை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்றார். அபூபக்கர் (ரலி) அவர்கள், அப்பொழுது நபிகளார் அர்கம் இப்னு அர்கம் அவர்களது இல்லத்தில் இருந்தார்கள். அபூபக்கர் (ரலி) அவர்களுக்குக் குறைஷியர் செய்த கொடுமைகள் நபி (ஸல்) அவர்களது செவிகளுக்கும் எட்டியிருந்தன. அதனால் பெரிதும் கவலை அடைந்திருந்தார்கள். துன்பம் தோய்ந்த முகத்துடன் வேதனைத் தாளாது வருவார் அபூபக்கர் என்பதை நினைக்க நினைக்க நபிகளாரின் உள்ளம் கடும் வேதனைப்பட்டது. ஆனால், அன்று காலை திடீரென மலர்ந்த முகத்துடன் அங்கு வந்த அபூபக்கர் (ரலி) அவர்களைக் கண்டதும் உளம் பூரித்துப் போனார்கள். கூடவே அவரது அன்னையும் வந்திருப்பது நபிகளாருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்து விட்டது. நபி (ஸல்) அவர்களைக் கண்டதும் தான் தாமதம், அஸ்ஸலாமு அலைக்கும் யா ரஸ_லுல்லாஹ்! என மொழிந்தவாறே அவர்களைக் கட்டித் தழுவினார் அபூபக்கர் (ரலி) அவர்கள். நபி (ஸல்) அவர்களும் அதே பாசவுணர்வுடன், "வ அலைக்குஸ்ஸலாம் அபூபக்கரே!" என்று பதிலிறுத்ததுடன், என்னுயிர் நண்பா! இறையருளால் நலமாக இருக்கின்றீர்கள் அல்லவா? என வாஞ்சையுடன் வினவினார்கள். ஆமாம்! யா ரஸ_லுல்லாஹ்! என் பெற்றோர் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நான் நலமாக இருக்கின்றேன். என்னைப் பெற்ற அன்பு அன்னை சத்தியத்தை ஏற்க வந்துள்ளார். கருணையுடன் அதை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்! என பணிவன்புடன் பதில் கூறினார் அபூபக்கர் (ரலி) அவர்கள். கருணையே உருவான நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் பற்றிய இனிய விளக்கமொன்றை அந்த அம்மையாருக்கு வழங்கினார்கள். அடுத்து, அவர் ஏகத்துவ கலிமாவை மொழிந்து இஸ்லாத்தைத் தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். இவருடன் இஸ்லாத்தைத் தழுவிய மக்காவாசிகளின் எண்ணிக்கை நாற்பதாக உயர்ந்தது. இந்த வளர்ச்சி முஸ்லிம்களுக்கு மட்டிலா மகிழ்ச்சியைக் கொடுத்தது எனலாம். எனினும், அபூபக்கர் (ரலி) அவர்களின் பனூதமீம் கோத்திரத்தினரிடையே ஆத்திரமும் அமைதியின்மையும் அலை மோதிக் கொண்டிருந்தன. எந்த நேரத்திலும் எதுவும் நிகழலாம் என்ற பதற்ற நிலை எங்கும் நிலவியது. இஸ்லாத்தின் ஆரம்ப காலங்கள் எவ்வாறு கொடுமையாக இருந்தது என்பதை கீழ்க்காணும் சம்பவம் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். புகாரீ என்ற நபிமொழித் தொகுப்பில் காணப்படக் கூடிய இந்தச் சம்பவம், இன்றைக்கும் நமக்கு நல்லதொரு படிப்பினையாக இருந்து கொண்டிருக்கின்றது. ஒருமுறை கஃபாவின் சுவரின் மீது சாய்ந்து கொண்டிருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கப்பாப் (ரலி) அவர்கள் கேட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களே! எதிரிகளின் கொடுமை தாங்க முடியாத அளவு உள்ளது. நீங்கள் எங்களுக்காக இறைவனிடத்தில் பிரார்த்திக்கக் கூடாதா? எங்களது சிரமங்களை அதன் மூலம் போக்கக் கூடாதா? என்று தான் கேட்டார்கள். அமைதியாக இருந்த அந்த வதனம், கோவைச் சிவப்பாகியது, இறைத்தூதர் (ஸல்) அவர்களது வதனமும் மட்டுமல்ல, வார்த்தைகளும் கூட சூடாக வந்தது. தோழரே! உங்களுக்கு முன் ஒரு சமுதாயம் உங்களைப் போலவே இறைநம்பிக்கை; கொண்டிருந்தது. அதன் காரணமாக அவர்களது எலும்புகள் தெரியும் அளவுக்கு, இரும்புச் சீப்பு கொண்டு சதைகள் சீவப்பட்டன. அவர்களது தலைகள் வேறாகவும் முண்டங்கள் வேறாகவும் இரு கூறாகப் பிளக்கப்பட்டன. இன்னும் நிச்சயமாக! சன்ஆ விலிருந்து ஹதரல்மவ்த் என்ற இடம் வரும் வரையும், ஒரு குதிரை வீரன் தன்னந்தனியாக இறைவனைப் பற்றிய அச்சத்தைத் தவிர வேறு எந்த அச்சமுமின்றி பயணம் செய்யக் கூடிய நிலை வரும், நீங்கள் வெற்றி பெறுவீர்கள், அதில் எந்த சந்தேகமும்பட வேண்டாம் என்று கூறி முடித்தார்கள். அபீசீனியாவிற்குப் பயணமாகுதல் (ஹிஜ்ரத்) இறைநிராகரிப்பாளர்களின் கொடுமைகள் மிதமிஞ்சிச் சென்று கொண்டிருந்த பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களை மக்காவை விட்டு அபீசினியாவிற்குப் பயணமாகும்படி அறிவுறுத்தினார்கள். அந்த காலகட்டத்தில் அபீசீனியாவை ஆண்ட கிறிஸ்தவ மன்னர் நீதிக்கும், இரக்கத்திற்கும் இன்னும் அங்கு அடைக்கலம் தேடிச் செல்வோர்களின் மீது கருணை காட்டக் கூடியவராக இருந்தார். இந்த தருணத்தில் முஸ்லிம்கள் இரண்டு பிரிவாக அபீசீனியாவிற்குப் பயணமானார்கள். முதல் குழுவில் 11 ஆண்களும் 4 பெண்களும் இடம் பெற்றிருந்தார்கள். இரண்டாவது குழுவில் 80 க்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள். இந்த இரண்டு குழுவையும் அனுப்பி விட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிலேயே இருந்து கொண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலேயே தங்கி விட்டதன் காரணத்தால், அபுபக்கர் (ரலி) அவர்களும் மக்காவிலேயே தன் ஆருயிர்த் தோழருடன் இருக்கவே விரும்பினார்கள். இருப்பினும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபுபக்கர் (ரலி) அவர்களையும் அபீசீனியாவிற்குப் பயணமாகும்படி உத்தரவிட்டார்கள். தனது தலைவருக்குக் கட்டுப்படுவதில் இன்பம் கண்ட தோழர் அபுபக்கர் (ரலி) அவர்கள், இப்பொழுது தனது குடும்பத்தவர்கள் அனைவரிடமும் பிரியா விடை கொடுத்து விட்டு, அபீசீனியாவை நோக்கிப் பயணமானார்கள். அவர் பயணமாகிக் கொண்டிருந்த வழியில் இப்னு துக்னா, பார்க் அல் காமித் என்ற இடத்தில் வசித்து வந்த காரா கோத்திரத்தாரின் தலைவராகிய இப்னு துக்னாவைச் சந்திக்க நேர்ந்தது. அபுபக்கர் (ரலி) அவர்களது அந்த நிலையைக் கண்ட இப்னு துக்னா அவர்கள், அபுபக்கர் அவர்களே நீங்கள் எங்கு சென்று கொண்டிருக்கின்றீர்கள்? என்னுடைய மக்கள் மக்காவை விட்டும் என்னை வெளியேற்றி விட்டதன் காரணமாக, நான் இப்பொழுது அபீசீனியாவை நோக்கிப் பயணமாகிக் கொண்டிருக்கின்றேன் என்றார்கள். உம்மைப் போன்ற ஒரு மனிதரை இந்த மக்காவாசிகள் ஊரை விட்டு வெளியேற்றி விட்டார்களா? கூடாது. நீர் கஷ்டப்படுகின்றவர்கள் மீது இரக்கம் காட்டுகின்றீர்கள், விருந்தினர்களை வரவேற்று உபசரிக்கின்றீர்கள், பிறரது கஷ்டங்களை நீங்கள் பங்கு கொள்கின்றீர்கள், இத்தகைய நற்குணங்களைப் பெற்ற நீர் ஏன் உமது நாட்டை விட்டுப் போக வேண்டும். நான் உங்களது பாதுகாப்பிற்காகப் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன். வாருங்கள்! நானும் நீங்களும் மக்காவிற்கே மீண்டும் போவோம். உங்களது பாதுகாப்பிற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்வதோடு, நீர் உமது இறைவனையும் சுதந்திரத்தோடு வழிபட்டு வரவும் ஏற்பாடு செய்கின்றேன் என்று கூறிய இப்னு துக்னா, அபுபக்கர் (ரலி) அவர்களை அழைத்துக் கொண்டு மக்காவிற்குச் செல்கின்றார். அன்று மாலை நேரத்தில், மக்கத்துப் பெருந்தலைகள் கூடியிருந்த அந்த அவையில் இப்னு துக்னா அவர்கள் இவ்வாறு உரை நிகழ்த்தி, அவர்களிடம் கேட்டார்கள், ஏழைகளுக்கு இரக்கப்பட்ட, உங்களது கஷ்டங்களில் பங்கு கொண்ட, உங்களது சிரமங்களைக் கண்டு ஓடோடி வந்து உதவிய இந்த மனிதர் சத்தியத்தை ஏற்றுப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றார் என்ற காரணத்திற்காகவா நீங்களை அவரை நாட்டை விட்டுத் துரத்துகின்றீர்கள்? அபுபக்கர் அவர்களை நாடு கடத்தவோ அல்லது அவரது சொந்த விருப்பத்தின் பெயரிலோ அவர் இந்த நகரத்தை விட்டுச் செல்ல அனுமதிக்க முடியாது. இப்பொழுது, இப்னு துக்னா அளித்த பாதுகாப்பு உத்திரவாதத்தை ஏற்றுக் கொண்ட குறைஷிகள் கூறினார்கள், அபுபக்கர் அவர்கள் இந்த ஊரில் இருப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை, ஆனால், அவர் அவரது இறைவனை அவரது வீட்டின் நான்கு சுவர்களுக்குள் வைத்து வணங்கிக் கொள்ளட்டும். அவர் அவரது இறைவனைப் பிரார்த்திக்கும் பொருட்டு சத்தமிட்டு அவர் குர்ஆன் வசனங்களை மக்களை கூடும் திறந்த வெளிகளில் ஓதக் கூடாது. ஏனென்றால் எங்களது பிள்ளைகளும் பெண்களும் இதனை வழி தவறி விடுவார்களோ என்று நாங்கள் பயப்படுகின்றோம்! என்றும் கூறினார்கள். மிக நீண்ட யோசனைக்குப் பின் குறைஷியர்களின் இந்த கட்டுப்பாடுகளுக்கு ஒத்துக் கொண்டு, அதன்படி நடக்க அபுபக்கர் (ரலி) அவர்கள் நடக்கச் சம்மதித்தார்கள். இறைவன் மீதுள்ள இறைநம்பிக்கை என்பது குப்பிக்குள் இருக்கும் வாசனைத் திரவியம் போன்றது. அதை இறுக மூடினாலும் அதன் வாசனை வெளி எட்டிப் பார்த்துக் கொண்டு தானே இருக்கும். தனது இறைநம்பிக்கையை மூடி மறைக்க இயலாத அபுபக்கர் (ரலி) அவர்கள், தனது வீட்டிற்கு வெளியே சிறிய பள்ளிவாசல் ஒன்றைக் கட்டி அதில், இறைவனைத் தொழுது வர ஆரம்பித்தார்கள். இளகிய மனம் படைத்த அபுபக்கர் (ரலி) அவர்கள், இறைவசனங்களை ஓத ஆரம்பித்தவுடன் அழ ஆரம்பித்து விடுவார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களது இந்த செயல்பாடுகளை மக்கத்து இளைஞர்களையும், பெண்களையும் ஆச்சரியத்தில் ஆழத்தியது, இன்னும் இஸ்லாத்தைப் பற்றி தாங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும் அவர்களிடம் மிகைத்தது. இப்பொழுது, மிகவும் உஷாராகிப் போன மக்கத்துக் குறைஷிகள் இப்னு துக்னாவிடம் சென்று முறையிட ஆரம்பித்தார்கள். உங்கள் முன் ஏற்றுக் கொண்ட ஒப்பந்தங்களை அபுபக்கர் அவர்கள் மீறி விட்;டார்கள். அவர் வீட்டின் முன் ஒரு பள்ளிவாசலைக் கட்டிக் கொண்டு, அதில் தொழுகை நடத்துவதுடன் இறைவசனங்களை ஓதவும் ஆரம்பித்து விட்டார்கள். இதன் காரணமாக எங்களது பெண்களும், குழந்தைகளும் வழி தவறிக் கொண்டிருக்கின்றார்கள்! என்று புலம்பி முறையிட ஆரம்பித்தார்கள். எனவே, இதனை நீங்கள் நேரில் வந்து கண்டு அபுபக்கரைத் திருத்துங்கள். நாங்கள் உங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறுவதற்கு விரும்பவில்லை அதேநேரத்தில், அபுபக்கர் அவர்களை இதே நிலையில் விட்டு விடவும் எங்களுக்குச் சம்மதமில்லை, அவர் அவரது பள்ளிவாசலில் தொழுவதையும், அங்கு இறைமறை வசனங்களை உரக்க ஓதுவதையும் நாங்கள் அனுமதிக்க முடியாது என்று புலம்பினார்கள். குறைஷிகளின் முறையீடுகளை எடுத்துரைத்த இப்னு துக்னா அவர்களிடம், அபுபக்கர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள், இப்னு துக்னா அவர்களே! உங்களது பாதுகாப்பிற்கு மிக்க நன்றி! தயவு செய்து நீங்கள் எனக்காகப் பொறுப்பேற்றிருந்த அந்த பாதுகாப்பை நீங்கள் தயவுசெய்து, வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள். நான் என்னைப் படைத்தவனின் பாதுகாப்பில் இருப்பதையே விரும்புகின்றேன். அதில் தான் நான் சந்தோஷமடைகின்றேன் என்று கூறினார்கள். ஹிஜ்ரத் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு முதன் முதலாக இறைவேதம் அருளப்பட்ட நாளிலிருந்து 13 வருடங்கள் அவர்கள் மக்காவில் தங்கி இருந்து பிரச்சாரம் பணிகளைச் செய்ய வேண்டியிருந்தது. இந்தப் 13 வருட காலமும் அவர்கள் செய்து கொண்டிருந்த அந்த பிரச்சாரப் பணிகள் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் மிகவும் உறுதியாகவும், நிதானமாகவும் நடந்து கொண்டிருந்தது, இத்தகைய பணிக்கு ஈடானதொன்று இன்று வரைக்கும் எந்த சமுதாய வரலாற்றிலும் கிடையாது. இந்தப் பிரச்சாரப் பணிகளின் பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் இன்னும் அவர்களை வாய்மையாகப் பின்பற்றிய தோழர்களுக்கும் அந்த குறைஷிகள் சொல்லொண்ணாத் துன்பங்களைத் தந்த போதும், அந்தத் துன்பங்கள் யாவும் அவர்களது பிச்சாரப் பணிகளுக்கு புது உத்வேகத்தையும், இன்னும் ஊக்கத்தையுமே தந்து கொண்டிருந்தது. மேலும், குறைஷிகளின் அந்தத் தாக்குதல்களை, அதாவது காட்டுமிராண்டிகள் போல் அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நடந்து கொண்ட அவர்களது அந்த போர்க்குணம் கொண்ட ஈனச் செயல்களை, அவர்கள் தன்னந்தனியாக எதிர்கொண்டு சமாளித்து வந்தார்கள், அதில் தன்னையும் தன்னுடைய மார்க்கத்தையும் பாதுகாத்துக் கொண்டு, இறைவனையே முற்றிலும் சார்ந்தவர்களாக இந்த மனித சமுதாயத்தை அடிமைத் தளைகளிலிருந்து விடிவிக்க வந்த அந்த விடிவெள்ளி பிரகாசித்துக் கொண்டிருந்ததோடு மட்டுமல்ல, தன்னைப் பின்பற்றியவர்களுக்கு வழிகாட்டியும் கொண்டிருந்தது. காலம் காலமாக தங்களது மூதாதையர்களின் குல வழக்கப்படி இணை வைத்து வணங்கும் கொடிய பழக்கத்தைக் கடைபிடித்து வந்த அந்த மக்கத்துக் குறைஷிகள், இன்னும் பல்வேறு படுபாதகச் செயல்களை தயக்கமில்லாது செய்து வந்த அவர்கள், இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதன் பின்பு மிகவும் நாகரீக மனிதர்களாக மாற்றம் பெற்றார்கள். நாடோடிகளாக நாகரீகமற்றவர்களாகத் திரிந்த அவர்கள் இப்பொழுது அரேபியப் பிரதேசத்தின் ஆட்சியாளர்களாக மாற்றம் பெற்றார்கள். இன்னும் அதனை விட மனிதநேய மிக்க தலைவர்களாக மாறிப் போனார்கள். இந்த மாற்றம் இரத்தம் சிந்திப் பெறப்பட்டதல்ல, மாறாக சத்தியம் அவர்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தான் எனலாம். மேலும் இந்த உலகம் இந்த சத்தியப் புள்ளிகளை கண்ட மாத்திரமே தன்னுடைய இருளை அகற்றிக் கொண்டு, சத்திய வெளிச்சம் பட்டவுடன், அந்த அசத்திய இருள்கள் தானாகவே அவர்களது மனப் பிரதேசத்தை விட்டும், இன்னும் அந்த சூழ்நிலைகளை விட்டும் அகன்று, சத்தியத்துக்கு வழிவிட்டு அசத்தியம் அகன்றே போனது. இஸ்லாத்தின் அந்த ஆரம்ப கால மூன்றாண்டுகளின் இஸ்லாமியப் பிரச்சாரம் மிகவும் இரகசியமாக நடந்தேறிக் கொண்டிருந்த வேளையில், அபுபக்கர் (ரலி), அலி (ரலி), உதுமான் (ரலி), இன்னும் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) போன்ற இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உற்ற தோழர்கள் இஸ்லாத்தில் நுழைந்து, தங்களது பெயர்களை இஸ்லாமிய வரலாற்றில் முன்னிறுத்திக் கொண்டார்கள். பின்பு இஸ்லாமியப் பிரச்சாரத்தை வெளிப்படையாகச் செய்வதற்கு இறைவன் அனுமதி வழங்கியதன் பின்பு, இஸ்லாமியப் பிரச்சாரம் வெளிப்படையாக செய்யப்பட்டு, முழு அரேபிய சமுதாயத்திற்கும் இன்னும் முழு மனித சமுதாயத்திற்கு விடுக்கப்பட்ட அந்த அழைப்பு, அரேபியப் பாலைப் பெருவெளியின் மலைகளிலும், வயல் வெளிகளிலும், சமவெளிப்பகுதிகளிலும் எங்கினும் ஒலிக்க ஆரம்பித்தது. அன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட அந்த ஏகத்துவப் பிரச்சாரப் பணி இன்றளவும் உலகின் நாலா பாகங்களிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது. இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களது அந்த உற்ற தோழர்கள் தாங்கள் ஏற்றுக் கொண்ட சத்தியத்தை ஏற்றுக் கொண்டு, உலகின் நாலா பகுதிகளுக்கும் பரவிச் சென்று அவற்றைப் பரப்பும் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்தார்கள். இஸ்லாமியப் பிரச்சாரப் பணியின் ஆரம்பக் கட்டத்தில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவினுள் தனது பிரச்சாரப் பணியை வெளிப்படையாகச் செய்ய ஆரம்பித்தார்கள். ஆரம்பப் பிரச்சாரப் பணிகள் அந்தளவு எளிதானதொரு பணியாக இருக்கவில்லை. இன்னும் உற்சாகமூட்டும் அளவிலும் இருக்கவில்லை. ஆனால் மக்காவின் வெளிப்புறப் பகுதியில் வைத்து, மதீனாவில் இருந்து வந்த சிலர் இஸ்லாத்தின் செய்திகளை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூலமாக கவனமாகவும், ஆழ்ந்த கவனத்தோடும் செவிமடுத்ததன் பின்பு, ஒரு மிகப் பெரிய மாற்றம் இஸ்லாமியப் பிரச்சாரத்தில் ஏற்பட்டது. அதன் காரணமாக, இரண்டு மூன்று ஆண்டுகளில் முழு மதீனாவுமே முழு இஸ்லாமிய பிரச்சாரக் கேந்திரமாக மாறித்தான் போனது தான் விந்தையான அதிசயமாகும். இப்பொழுது மதீனா முஸ்லிம்களைப் பாதுகாக்கக் கூடிய பிரதேசமாக, முஸ்லிம்கள் அடைக்கலம் தேடிச் செல்லும் இடமாக மாறிப் போனதன் பின்பு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவில் உள்ள தனது தோழர்களை மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்யும்படி பணித்தார்கள். அதன் பின் நான்கு மாதங்கள் கழித்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களே மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்று விட்டார்கள். மிகப் பெரும் தோழர்களான உமர் (ரலி) அவர்கள் முதற்கொண்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்பாகவே ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்குச் சென்று விட்டார்கள். இப்பொழுது, அபுபக்கர் (ரலி) அவர்கள் தனது ஆருயிர்த் தோழரைப் பார்த்துக் கேட்டார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! எனது ஆருயிர்த் தோழர் அவர்களே..! நான் எப்பொழுது ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு செல்வது? எனக்கு அனுமதி உண்டா? என்று கேட்டார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களே..! என இடை நிறுத்திய இறைத்தூதர் (ஸல்) அவர்கள்..! நானும் தான் உங்களைப் போலக் காத்திருக்கின்றேன், இறைவனது உத்தரவு வரட்டும் பொருங்கள் என்று கூறினார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களது தொலைநோக்குச் சிந்தனை இப்பொழுது வேலை செய்தது. நாம் மட்டும் தனியாகப் போகப் போவதில்லை. நம்முடன் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் வர இருக்கின்றார்கள் போலல்லவா தெரிகின்றது..! இனி நாம் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது தான் என முடிவு செய்த அபுபக்கர் (ரலி) அவர்கள் பயணத்திற்கான ஒட்டகைகளையும், பயண வழிகாட்டியையும் ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்கள். இதற்காக இரண்டு ஒட்டகங்களைத் தயார்படுத்தினார்கள். வழக்கமாக அபுபக்கர் (ரலி) அவர்களது வீட்டிற்கு மாலையிலோ அல்லது காலையிலோ தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் செல்வது வழக்கமாக இருந்தது. ஆனால் இப்பொழுது வழக்கத்திற்கு மாற்றமாக, தலையில் ஒரு மறைப்பை வைத்துக் கொண்டு அந்தக் கடுமையான வெயில் நேரத்தில் மதிய நேரத்தில் அபுபக்கர் (ரலி) அவர்களது இல்லத்தினுள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நுழைகின்றார்கள். அப்பொழுது தனது குடும்பத்தவர்களுடன் அபுபக்கர் (ரலி) அவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்ற வேளையில், இறைத்தூதர் (ஸல்) அவர்களது வருகையைக் கண்ட அபுபக்கர் (ரலி) அவர்கள், எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அற்பணமாகட்டும்..! எனது ஆருயிர்த் தோழரே...! நீங்கள் காரணமில்லாமல் இந்த அகால வேளையில் வர மாட்டீர்கள் என்பது திண்ணம்..! இப்பொழுது கதவுக்கு மிக அருகில் வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கதவைத் தட்டி உள்ளே வர அனுமதி கோருகின்றார்கள். உள்ளே வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அபுபக்கர் (ரலி) அவர்களே..! நான் உங்களுடன் தனிமையில் உரையாட வேண்டும்..! என்னுடன் எனது இரண்டு மகள்தான் இருக்கின்றார்கள். அவர்களைத் தவிர இங்கு வேறு யாருமில்லை தோழரே..! என்று அபுபக்கர் (ரலி) அவர்களிடமிருந்து பதில் வந்தது. தோழரே..! நமக்கு அனுமதி வந்து விட்டது. இப்பொழுது மதீனாவிற்குப் பயணமாக வேண்டும். நான் உங்களுடன் வருவது பற்றிய முடிவு? என்றார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள் மிகவும் ஆவலுடன்..! நீங்களும் தான் என்னுடன் வருகின்றீர்கள்..! என்னுடன் வருவதற்கு உங்களுக்கும் அனுமதி கிடைத்திருக்கின்றது..! இது இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து பதிலாக வந்தது. இந்த சம்பவத்தைப் பற்றி ஆயிஷா (ரலி) அவர்களது விவரிப்பதைப் பாருங்கள்..! இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் ஹிஜ்ரத் செய்வதற்கு அனுமதி கிடைத்து விட்டதை அறிந்து எனது தந்தை ஆனந்தத்தில், சந்தோஷமானது கண்ணீராக அவரது கண்களிலிருந்து வழிந்து கொண்டிருந்தது. இப்பொழுது, பயணத்திற்குத் தேவைப்படும் நோக்கில் தயார் செய்யப்பட்ட இரண்டு ஒட்டகங்களைத் தனது தோழரின் முன்னால் நிறுத்திய அபுபக்கர் (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! இரண்டில் ஒன்றைத் தங்களுக்காகத் தேர்வு செய்து கொள்ளுங்கள் என்றார்கள். ஒன்றைத் தேர்வு செய்து கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அதற்கான கிரயப்பணத்தையும் அபுபக்கர் (ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள். இப்பொழுது இருவரும் அன்றைய இரவே மக்காவை விட்டும் கிளம்பி விட வேண்டும் என்ற முடிவாகியது. இப்பொழுது அபுபக்கர் (ரலி) மற்றும் அலி (ரலி) அவர்களைத் தவிர..! மற்ற அனைத்து பிரபலமாக நபித்தோழர்களும் மக்காவை விட்டும் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்று விட்டிருந்தார்கள். இதில் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் மக்கத்து மக்கள் கொடுத்து வைத்திருந்த அமானிதப் பொருட்களை திருப்பி ஒப்படைக்கும் பொருட்டு, அந்தப் பொருட்களுக்குப் பாதுகாப்பாக, அலி (ரலி) அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நியமித்தார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களோ..! இப்பொழுது இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் பயணப்பட இருக்கின்றார்கள். நிர்ணயிக்கப்பட்ட அந்த இரவு நேரத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அபுபக்கர் (ரலி) அவர்களும் மக்காவை விட்டும் புறப்பட்டு, தவ்ர் குகையில் தஞ்சமடைந்தார்கள். அங்கு மூன்று நாட்கள் தங்கி இருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவை விட்டும் புறப்பட்டு விட்டார்கள் என்பதை அறிந்த குறைஷித் தலைவர்கள் கோபமடைந்தார்கள். அவரை எப்படியாவது உயிருடன் அல்லது பிணமாகவோ பிடித்து விட வேண்டும் கங்கணம் கட்டிச் செயல்பட்டார்கள். இந்த நிலையில் தவ்ர் குகையில் இருவரும் இருந்து கொண்டிருந்த பொழுது தான் கீழ்க்கண்ட வசனத்தை அல்லாஹ் இறக்கி அருளி, தனது உண்மை அடியார்களுக்கு ஆறுதல் வழங்கினான். குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், ''கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்"" என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைதுதான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்;. (9:40) மக்காவிலிருந்து மதீனாவிற்குச் செல்லும் வழக்கமான பாதையை விட்டு விட்டு, கடலோர மார்க்கமாக மதீனாவைச் சென்றடைந்தார்கள். அப்பொழுது அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு 49 வயதும், 6 மாதங்களும் ஆகி இருந்தது, அவர்களது தலைமுடி கறுப்பு நிறத்திலிருந்து சற்று நிறம் மங்கத் தொடங்கி இருந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு 53 வயதாகியிருந்த போதிலும், தலைமுடி கறுத்தும், அடர்த்தியாகவும் இருந்தது. அபுபக்கர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பொழுது, 40 ஆயிரம் திர்ஹம்களுக்கு சொந்தக் காரராக இருந்த அவர், இப்பொழுது வெறும் 5 ஆயிரம் திர்ஹம்கள் மட்டுமே மீதமிருந்தது. அவர் தன்னுடைய சொத்துக்களில் அதிகமானதை இறைவனுடைய வழியில் செலவு செய்தவராகவே இருந்தார். இப்பொழுது, மீதமிருந்த அந்த சொத்தையும், தன்னுடனேயே மதீனாவிற்கு எடுத்து வந்து விட்டார். அவர் தனது மனைவியையும், பிள்ளைகளையும், இன்னும் தனது பெற்றோர்களையும் இறைவனது பாதுகாப்பின் கீழ் தான் விட்டு வந்திருந்தார். அவர்களுக்கென எதனையும் விட்டு விட்டு வந்திருக்கவில்லை. தந்தையின் மனக்குமுறல் அபுபக்கர் (ரலி) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்று விட்டதை அறிந்த அவரது தந்தையாரான அபூ குஹஃபா அவர்கள் மிகவும் கவலையுற்றார்கள், விசனப்பட்டார்கள். தகவலறிந்தவுடன் நேராக தனது பேத்தியான அஸ்மா (ரலி) அவர்களிடம் வந்து, அஸ்மாவே..! உனது தந்தையார் மக்காவை விட்டு மதீனாவிற்குச் சென்று விட்டதாக அறிகின்றேன்..! இன்னும் இருந்த பணத்தையும் தன்னுடன் எடுத்து விட்டாரோ..? என்று வினவுகின்றார். இல்லை..! இல்லை..! நமக்காக எனது தந்தையார் ஓரளவு பணத்தை விட்டு விட்டுச் சென்றிருக்கின்றார்கள் என்று கூறிய அஸ்மா (ரலி) அவர்கள், அபூகுஹஃபாவை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு, துணியினால் சுற்றப்பட்டதொரு மூட்டையில் சில ஓட்டுத் துண்டுகளை நிரப்பி வைத்து, கண் தெரியாத அவரின் கைகளை அதனுள் விட்டு, அவரே அதனை தொட்டுப் பார்த்து, திருப்பி அடைய வைக்கின்றார்கள். கண் தெரியாத அவர், அதனைப் பணம் என நம்பி, இந்தளவு பணத்தை அபுபக்கர் விட்டு விட்டுச் சென்றிருப்பதால், நமக்குக் கவலையில்லை என்று கூறுகின்றார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களது ஹிஜ்ரத்துக்குப் பின் அவரது வீட்டில் நடந்த கீழக்கண்ட சம்பவமும் முக்கியத்துவம் பெறுகின்றது. அஸ்மா (ரலி) அவர்கள் வீட்டில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் ஹிஜ்ரத் சென்று விட்டதை அறிந்து குறைஷித் தலைவர்கள் பலர் ஒன்று சேர்ந்து அபுபக்கர் (ரலி) அவர்களது வீட்டிற்கு வருகின்றார்கள். அவ்வாறு வந்தவர்களின் தலைவனாக வந்த அபுஜஹல், அபுபக்கர் (ரலி) அவர்களது வீட்டுக் கதவை பலம் கொண்ட மட்டும் தட்டுகின்றான். வெளியே வந்த அஸ்மா (ரலி) அவர்களிடம், எங்கே உனது தந்தையார்..? அபுஜஹல் ன் வாயிலிருந்து வார்த்தைகள் நெருப்பாய் விழுந்தன. அவரைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.. இது அஸ்மா (ரலி) அவர்களது பதில்..! என்ன உனக்குத் தெரியாதா? என்று கோபாவேசப்பட்ட அபுஜஹல், அஸ்மா (ரலி) அவர்களின் கன்னத்தில் ஓங்கி அறைய.., அஸ்மா(ரலி) அவர்களின் காதில் போட்டிருந்த தோடு கழன்று சுவரில் பட்டுத் தெரித்து விழுந்தது. ரபியுல் அவ்வல் மாதம் 12 ம் நாள், இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அபுபக்கர் (ரலி) அவர்களும் மிகவும் பத்திரமாக மதீனா நகரை வந்தடைந்தார்கள். தூரத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அபுபக்கர் (ரலி) அவர்களும் வந்து கொண்டிருப்பதைக் கண்ட மதீனத்து மக்களுக்கு வருவதில் யார் இறைத்தூதராக இருக்கும் என்று கேள்வி துளைத்தெடுத்துக் கொண்டிருந்தது. அவர்களது சந்தேகம் வலுக்க வலுக்க அவர்களது இதயத் துடிப்பு உச்சத்துக்குச் செல்கின்றது. இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களது முகத்தில் பட்ட வெயிலை மறைப்பதற்காக, அபுபக்கர் (ரலி) அவர்கள், தனது துண்டை எடுத்து இறைத்தூதர் (ஸல்) அவர்களது முகத்திற்கு குடையாகப் பிடிக்கின்றார்கள். இப்பொழுது தான் அந்த மதீனத்து மக்களுக்கு சந்தேகம் தீர்ந்தது. ஆகா..! குடை பிடிப்பவர் அவரது தோழர்..! குடைக்குள் இருப்பவர் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்ற முடிவுக்கு வந்த பின் தான் அவர்களது நாடித் துடிப்பும் சற்று இறங்க ஆரம்பித்தது. மதீனாவை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அடைந்ததும், முதல் பணியாக மதீனத்து அன்ஸார்களையும், மக்கத்து முஹாஜிர்களையும் ஒன்றிணைத்து சகோதரத்து பந்தத்தை உருவாக்கினார்கள். அந்த அடிப்படையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ஃகாரிஜா பின் ஸைத் (ரலி) அவர்களை அபுபக்கர் (ரலி) அவர்களது தோழராக இணைத்து வைத்தார்கள். இப்பொழுது தனது இல்லத்திற்கு தனது சகோதரராக அபுபக்கர் (ரலி) அவர்களை ஃகாரிஜா பின் ஸைத் (ரலி) அழைத்துச் செல்கின்றார்கள். தனது சொத்துக்களையும், தனது உடமைகளையும் சுட்டிக் காட்டிய ஃகாரிஜா (ரலி) அவர்கள், சகோதரரே..! இந்த சொத்துக்களில் சரி பாதியை எடுத்துக் கொள்ளுங்கள். இன்னும் எனக்கு இரண்டு மனைவிகள் உண்டு. நீங்கள் விரும்பும் மனைவியை நான் விவாகரத்துச் செய்து தருகின்றேன். நீங்கள் மணமுடித்துக் கொள்ளுங்கள் என்று சற்றுப் பேச்சை நிறுத்தினார். அனைத்தையும் நிதானமாகக் கேட்டுக் கொண்டிருந்த அபுபக்கர் (ரலி) அவர்கள், சகோதரரே..! உங்களது பெருந்தன்மைக்கு மிக்க நன்றிகள் பல..! இதில் எது ஒன்றும் எனக்குத் தேவையில்லை என்று பதில் கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களது குடும்பம் மதீனாவிற்குச் சென்றதிலிருந்து ஏழு மாதங்கள், அபு அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அவர்களது இல்லத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்கி இருந்தார்கள். பின்பு மதீனத்து நபவி பள்ளியைக் கட்டுவதற்கான இடத்தைத் தேர்வு செய்து, அபுபக்கர் (ரலி) அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு, அந்த இடத்தில் பள்ளியையும் கட்டினார்கள். அதனைச் சுற்றிலும் வீடுகளைக் கட்டிக் கொள்ள இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள். அபுபக்கர் (ரலி) அவர்கள் ஜன்னல் கதவு பள்ளியை நோக்கி இருப்பது போல ஒரு வீட்டையும் கட்டிக் கொண்டார்கள். பள்ளிவாசல் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது, சிலரை மக்காவிற்கு அனுப்பி தனது குடும்பத்தவர்களை அழைத்து வரும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பணித்தார்கள். இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய குடும்பத்தவர்களுடன், அபுபக்கர் (ரலி) அவர்களது குடும்பத்தவர்களும் இணைந்து மதீனாவிற்கு வந்து, பழைய வீட்டில் அதாவது சுன்ஹ் என்ற இடத்தில் தங்கினார்கள். குறிப்பு : ஹிஜரத் மற்றும் அதில் அபுபக்கர் (ரலி) அவர்களின் பங்கு குறித்து விரிவாக அறிந்து கொள்ள ஹிஜ்ரத் என்ற நூலைப் பார்வையிடுக!! இத்துடன் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் அபுபக்கர் (ரலி) அவர்களுடைய ஹிஜ்ரத் பயண வரலாறு முடிவுக்கு வந்தாலும், இதிலிருந்து தான் அபுபக்கர் (ரலி) அவர்களின் கிலாபத் - அதாவது இஸ்லாமிய உம்மத்தின் முதல் கலீபா ஆட்சிப் பிரதிநிதியாகப் பரிணமாம் அடைகின்றார்கள். அதற்கான தகுதிகளும், அனுபவங்களும் இதிலிருந்து தான் ஆரம்பமாகின்றன என்பதை வரலாறு அறிந்தவர்கள் கூறும் உண்மையாகும். மேலும், அபுபக்கர் (ரலி) அவர்களது வாழ்க்கையை நாம் மேலும் ஆய்வு செய்வதென்றால், அது இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையோடு, அவர்களது வரலாற்றோடு பிண்ணிப் பிணைந்து வரக் கூடியதாக இருக்கும். அதிலும் இத்துடன் உமர் (ரலி) அவர்களது வாழ்க்கையும், பிணைந்தே செல்லும். எனவே, சுருக்கம் கருதியும், இன்னும் அபுபக்கர் (ரலி) அவர்களது வாழ்க்கையை அதிகம் சுருக்கி விடாமலும், அவர்களது வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களை கீழக்காணும் தலைப்புகளின் கீழ் இன்ஷா அல்லாஹ் நாம் பார்க்க இருக்கின்றோம். · பத்ர் யுத்தம் ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு · உஹது யுத்தம், ரமளான் 3 · அகழ் யுத்தம் · ஹ{தைபிய்யா உடன்படிக்கை, துல்காயிதா 6 · கைபர் யுத்தம், முஹர்ரம் 7 · மக்கா வெற்றி, ரமளான் 8 · ஹ{னைன் யுத்தம் · தபூக் யுத்தம், ரஜப் 9 · ஹிராக்ளியஸ் · ஹஜ் - தலைமைப் பொறுப்பு வகித்தல் · இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மரணம் (12, ரபியுல் அவ்வல் 11) இத்துடன் அபுபக்கர் (ரலி) அவர்களின் ஆரம்ப வாழ்க்கை முடிவுற, அதனை அடுத்து இரண்டாவது பாகமாக கலீபா அபுபக்கர் (ரலி) அவர்களின் வாழ்வு மலரும் இன்ஷா அல்லாஹ். பத்ர் யுத்தம் ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு பதர் யுத்தம் நடைபெறுவதற்கு முன் இருந்த சூழ்நிலைகளை நாம் ஆராய்ந்து பார்த்தோமானால், இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அவர்களது அருமைத் தோழர்களும் மக்கத்துக் குறைஷிகள் தந்த சொல்லொண்ணா வன்கொடுமைகளைச் சகித்தும், பொறுமையுடன் தங்களது இறைநம்பிக்கையைப் பாதுகாத்து வந்தார்கள். ஒரு கட்டத்தில் இறைநிராகரிப்பாளர்களின் கொடுமைகள் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கவே, தாங்கள் ஏற்றுக் கொண்ட இறை மார்க்கத்தைப் பாதுகாக்கவும், தங்களது உயிர் உடமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும், அபிசீனியா மற்றும் மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் மேற் கொண்டார்கள். இதனையும் பொறுக்கமாட்டாத குறைஷிகள் இஸ்லாத்தையும், அதனைப் பின்பற்றும் முஸ்லிம்களையும் அவர்கள் அடைக்கலம் தேடிச் சென்ற இடங்களிலெ;லலாம் சென்று, இஸ்லாமிய ஊற்றை அதன் ஆரம்ப பிராவகத்திலேயே அடைத்து விட, அழித்து விட நாடினார்கள். அந்த வகையில் மதீனாவிற்கு அடைக்கலம் தேடிச் சென்ற முஸ்லிம்களையும் நிம்மதியாக இருக்க விடக் கூடாது எனத் தீர்மானித்த குறைஷிகள் தங்களது முழுப் பலத்தையும் திரட்டிக் கொண்டு, மதீனாவை நோக்கிப் படையெடுத்தார்கள். இப்பொழுது, தங்களது உயிர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஆயுதமேந்துவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை முஸ்லிம்களுக்கு..! எனவே, தற்காப்பு யுத்தத்திற்குத் தயாராகுமாறு தனது தோழர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவிப்புக் கொடுத்தார்கள். இதிலிருந்து தங்களது இறைநம்பிக்கையைப் பாதுகாத்துக் கொள்வதற்கு வரிசையாகப் பல போர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது முஸ்லிம்களுக்கு. இன்னும் அனைத்துப் போர்களுக்கும் பத்ருப் போருக்கும் பல வித்தியாசங்களும், இன்னும் சிறப்புத் தகுதிகளும் இருந்தன. இது முஸ்லிம்களின் ஜீவ மரணப் போராட்ட யுத்தமாகும். இதில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றால் இஸ்லாம் பாதுகாக்கப்படும். முஸ்லிம்கள் தோற்று விட்டால், இஸ்லாத்தைப் பின்பற்ற ஆள் இல்லாத அளவுக்கு அழிவு தான் ஏற்படும் என்ற நிலையில் தான் முஸ்லிம்கள் இருந்தனர். இந்தப் போரில் கலந்து கொண்டவர்களை இறைநம்பிக்கையில் முந்திக் கொண்டவர்கள் என்றழைக்கப்படுகின்றனர். ஆம்..! 313 முஹம்மதுகள் ஆயிரம் அபூஜஹ்லை எதிர்க்க களம் நோக்கி வந்திருந்தனர். முஸ்லிம்களின் தரப்பில் 313 வீரர்களும், அவர்களில் 236 பேர் அன்ஸாரிகளும், 77 பேர் முஹாஜிர்களாகவும் இருந்தனர். இன்னும் முஸ்லிம்களிடம் 70 ஒட்டகங்களும், 3 குதிரைகளும் இருந்தன. இதனைக் கொண்டே மாற்றி மாற்றிப் பயணம் செய்து போர்க்களம் நாடி வந்திருந்தனர். இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறைவனிடம் பிரார்த்திக்க ஆரம்பித்தார்கள். இறைவா! நீ எனக்கு வாக்களித்தவற்றை நிறைவேற்றித் தருவாயாக..! இறைவா..! இந்தச் சின்னஞ்சிறு கூட்டத்தை நீ அழித்து விட்டால், இந்தப் பூமியில் உன்னை வணங்குவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்..! என்றும் பிரார்த்தித்தார்கள். அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மீது போர்வையைப் போர்த்திக் கொண்டே அபுபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! எனது தாயும், தந்தையும் உங்களுக்கு அற்பணமாகட்டும்..! இறைவன் உங்களது கோரிக்கைகளை நிச்சயம் ஏற்றுக் கொள்வான், விரைவில் உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றி வைக்கப்படும் என்று கூறினார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களின் இந்த ஆறுதல் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே களம் நோக்கி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர். (54:45) என்ற வசனத்தை இறைவன் அருளினான். இறைநத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த வசனத்தை ஓதிக் கொண்டே களம் நோக்கி விரைந்தார்கள். மேலும், அந்தச் சம்பவம் குறித்து இறைவசனம் இவ்வாறு சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றது. (நினைவு கூறுங்கள்;) உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது; ''(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்"" என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான். (8:9) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்து போர் நடவடிக்கைகளைக் காண்பதற்காக, நபித்தோழர்கள் ஒரு மேடை ஒன்றை அமைத்தார்கள். அதில் அமர்ந்து கொண்டிருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அபுபக்கர் (ரலி) அவர்கள் காவலாக நின்று கொண்டிருந்தார்கள். இப்பொழுது போர் தொடங்கியது. வலது பக்க அணிக்கு அபுபக்கர் (ரலி) அவர்களும், இடது பக்க அணிக்கு அலி (ரலி) அவர்களும் தளபதிகளாக இருக்க போர் ஆரம்பமாகியது. இந்தப் போர் நடைபெறும் சமயத்தில் அபுபக்கர் (ரலி) அவர்களது மகன் அப்துர் ரஹ்மான் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை. அவர் குறைஷிகளின் பக்கம் இருந்து கொண்டிருந்தார். இன்னும் குறைஷிகளின் சார்பாக போருக்கும் வந்திருந்தார். போர்க்களக் காட்சியினூடே நடந்த இந்தச் சம்பவத்தை பின்னாளில் அசை போட்ட தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடந்த இந்த உரையாடல் இஸ்லாமிய வரலாற்றில் இறைநம்பிக்கைக்கும், இறைநிராகரிப்பிற்கும் இடையே உள்ள கொள்கை வித்தியாசத்தை அளவிடக் கூடிய நிகழ்ச்சியாக அமைந்து விட்டது. ஆம்..! ஒருநாள் மகன் தந்தையை நோக்கிச் சொன்னார். பத்ருப் போர்க்களத்தின் பொழுது, தந்தையே..! உங்களது தலை எனது வாளுக்கு மிக அருகில் வந்தது. ஆனால் நீங்கள் எனது தந்தை என்ற காரணத்தினால் உங்களைத் தாக்கமால் விட்டு விட்டேன், பெற்ற பாசம் தடுத்து விட்டது என்று கூறினார். அதனைக் கேட்ட அபுபக்கர் (ரலி) அவர்கள் தாமதிக்காமல் கூறினார், மகனே..! உனது தலை எனது வாளுக்கு அருகில் அப்பொழுது இருந்திருக்குமானால்..! இந்நேரம் நீ என்னுடன் பேசிக் கொண்டிருக்க மாட்டாய் மகனே..! எனது வாளுக்கு உனது தலையை இரையாக்கி இருப்பேன் என்று கூறினார்கள். பத்ருப் போரில் எதிரிகள் தோற்கடிக்கப்பட்டார்கள். இன்னும் தலைமை தாங்கி வந்திருந்த மிகப் பிரபலமான குறைஷித் தலைவர்கள், கொல்லப்பட்டும் விட்டார்கள். அதில் அபூ ஜஹ்ல், உத்பா, ஷைபா போன்ற குறைஷிகளின் தலைவர்களும் கொல்லப்பட்டவர்களின் பட்டியலில் அடங்குவர். உஹது யுத்தம், ரமளான் 3 சரியாக ஒரு வருடம் களித்து தோற்றுப் போன குறைஷிகள் மீண்டும் அபுசுப்யானின் தலைமையில் 3000 பேர் கொண்ட படையைத் தயார் செய்து கொண்டு, உஹது மலை அடிவாரத்தில் முஸ்லிம்களைச் சந்திக்கத் தயாரகி வந்தனர். முஸ்லிம்களைத் தாக்குவதற்காகவே மக்காவை விட்டு வெளிக்கிளம்பி வந்திருக்கின்ற குறைஷிப் படைகளின் வருகையை அறிந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களையும் போருக்குத் தயாராகுமாறு உத்தரவிட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களது உத்தரவுப்படி 1000 பேர் கொண்ட முஸ்லிம் படைப்பிரிவு உஹதுக் களம் நோக்கி நரக ஆரம்பித்தது. இடையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வேஷதாரியான அப்துல்லா பின் உபையின் நயவஞ்சகத்திற்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இவன் இறைநம்பிக்கை கொண்டிருந்தாலும், அதனை முழுமையாகச் செயல்படுத்த இயலாத நிலையில், நயவஞ்சகத்தை தனது நெஞ்சிலே வளர்த்தவனாக மாறிப் போனவன். இவன் போருக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் சென்று கொண்டிருந்த முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பங்கினரை தன்னோடு அழைத்துக் கொண்டு, மீண்டும் மதீனா நோக்கிச் செல்ல ஆரம்பித்தான். எனவே, இப்பொழுது முஸ்லிம் படையினரின் எண்ணிக்கை ஆயிரத்திலிருந்து எழுநூறானது. குறிப்பு : போர்க்களக் காட்சிகளை விரிவாக அறிந்து கொள்ள எமது இணையத்தளத்தில் உள்ள நூலகத்தில் உள்ள 1. முஹம்மது (ஸல்) அவர்களது வாழ்க்கை வரலாறு மற்றும் 2. போர்க்களத்தில் நாயகம் ஆகிய நூற்களில் பார்வையிடுக. போர்க்களக் காட்சிகளில் ஓரிடத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களை குறைஷிகளில் ஒருவன் மிகக் கடுமையாகத் தாக்கி விடுகின்றான். அவன் எறிந்த கல் ஒன்று இறைத்தூதர் (ஸல்) அவர்களது முகத்தைப் பதம் பார்த்தது. இன்னொருவன் அவர்களது தலைக் கவசத்தின் மீது கடுமையானதொரு தாக்குதலை நடத்தினான், மூன்றாமவன் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முகத்தில் தாக்கியதும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முகத்திலிருந்து இரத்தம் வழிந்தோட ஆரம்பித்தது. படைத்தவனை நோக்கி அழைப்பு விடுக்கின்ற தன்னுடைய தூதரது முகத்தை இரத்தத்தால் காயப்படுத்துகின்ற இந்த சமுதாயம் எவ்வாறு வெற்றியடைய முடியும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்த வேளையில் முணுமுணுத்தபடி இருந்தார்கள். இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நினைவிழந்த நிலையில், எங்கு தனது தோழர்கள் தங்களது குறுதிகளைச் சிந்தி மரணத்தைத் தழுவிக்கிடந்தார்களோ அவர்களுடனேயே மயங்கிக் கிடந்தார்கள். இப்பொழுது குறைஷிகள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள் என்ற செய்தி காட்டுத் தீ போலப் பரவ வைத்தனர். போர்க்களமெங்கும் எதிரொலித்த அவர்களது வதந்திகள், முஸ்லிம்களை நிலைகுலையச் செய்தது. இன்னும் எந்தத் திக்கை நோக்கி நின்றார்களோ அந்தத் திக்கை நோக்கி, முஸ்லிம்களில் சிலர் வெருண்டோட ஆரம்பித்தார்கள். இந்த நிலையில் பாதகத்திலிருந்து விடுபட்ட சிறிது நேரத்திலேயே, நபித்தோழர்கள் மீண்டும் அணி திரளலானார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மயங்கிக் கிடப்பதை முதன் முதலில் அறிந்து, பிணக்குவியல்களுக்கு நடுவே இருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களை இனங் கண்டு கொண்டு விட்டார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள். அலி (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களது தோள் புஜங்களைத் தூக்கி விட, தல்ஹா (ரலி) அவர்களது ஒத்துழைப்பினால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களது கன்னதைக் கிழித்துக் காயப்படுத்திக் கொண்டிருந்த தலைக்கவசத்தைத் தனது பற்களாலேயே கடித்து அப்புறப்படுத்தினார்கள் அபூ உபைதா (ரலி) அவர்கள். அதன் காரணமாக அவர்களது இரண்டு பற்கள் ஷஹீதாக்கப்பட்டன. இறைத்தூதர் (ஸல்) அவர்களை இந்தளவு காயப்படுத்தி மக்களுக்கு எதிராக பிரார்த்தனை செய்யும் நபித்தோழர்கள் வேண்டி நின்ற பொழுது கருணையே உருவான இறைத்தூதர் (ஸல்) அவர்களது தனது தோழர்களை நோக்கிக் கூறினார்கள் : இல்லை..! நான் மக்களைச் சபிப்பதற்காக அனுப்பப்பட்ட தூதனல்லவே எனப் பதிலிறுத்தார்கள். எனவே, சபிப்பதற்குப் பதிலாக, இறைவா..! எனது மக்களை நேர்வழியில் செலுத்துவாயாக..! அவர்கள் அறியாத மக்களாக இருக்கின்றார்கள்..! என்று பிரார்த்தனை புரிந்தார்கள் கருணை நபியவர்கள். இதனை அடுத்து அபுபக்கர் (ரலி), உமர் (ரலி), அலி (ரலி), தல்ஹா (ரலி), மற்றும் சுபைர் (ரலி) ஆகிய நபித்தோழர்கள் இணைந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களை பாதுகாப்பான மலைப் பகுதிக்கு அழைத்துச்சென்றார்கள். இந்த இடத்தில் தான் காலித் பின் வலீத் அவர்கள் எதிரியின் தரப்பில் இருந்து கொண்டு மீண்டும் தாக்குதல்களைத் தொடுத்த பொழுது, காலித் பின் வலீத் ஐ எதிர்த்து அவர்களை விரட்டி விடுமாறு உமர் (ரலி) அவர்களுக்கு கட்டளையிட்டார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். இறுதியில் காலித் பின் வலீத் அவர்கள் தனது படையைத் திருப்பி அழைத்துக் கொண்டு போர்க்களத்தை விட்டுச் சென்று விட்டார். ஹஸ்ரத் ஹம்ஸா (ரலி) அவர்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டார்கள். போர் ஆரம்பித்த சற்றைய நேரத்திற்கெல்லாம் அபுபக்கர் (ரலி) அவர்களது மகன் அப்துர் ரஹ்மான் எதிரிகளின் தரப்பில் இருந்து கொண்டு, என்னுடன் மோதுவதற்கு உங்களில் யாருக்குத் தைரியமிருக்கின்றது வாருங்கள்..! என்று கூக்குரலெழுப்பிக் கொண்டிருந்தார். தனது மகனை சவாலை ஏற்றுக் கொண்டு மகனை உருவிய வாளுடன் சந்திக்கப் புறப்பட்ட அபுபக்கர் (ரலி) அவர்களைத் தடுத்து நிறுத்திய இறைத்தூதர் (ஸல்) அவர்கள்..! அபுபக்கரே..! உமது வாளை உறையிலிடுங்கள்..! அவர் பிழைத்துப் போகட்டும்..! விட்டு விடுங்கள் என்று கூறினார்கள். மலையில் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட எழுபது நபர்களில் அபுபக்கர் (ரலி) அவர்களும் ஒருவராவார். அகழ் யுத்தம் - ஷவ்வால் 5 அகழ் யுத்தம் - ஷவ்வால் 5 முஸ்லிம்களை அழித்தொழித்தொழித்து விடலாம் என்று குறைஷிகள் கண்ட கனவு பத்ருப் போரிலும், உஹதுப் போரிலும் கானல் நீராகிப் போனாலும், குறைஷிகளை அடுத்து இன்னுமொரு எதிரிக்கு இப்பொழுது முஸ்லிம்கள் முகம் கொடுக்க வேண்டியதிருந்தது. மதீனாவைச் சுற்றிலும் வாழ்ந்து கொண்டிருந்த யூதர்கள் மக்கத்துக் குறைஷிகளைப் போலவே முஸ்லிம்களை வளர விடுவது நமக்கு ஆபத்து என்று உணர ஆரம்பித்தார்கள், முஸ்லிம்களை அழித்து விட வேண்டுமென்பது அவர்களது தனியாத ஆசையாகவும் இருந்தது. இன்னும் இதற்கான சதித் திட்டங்களைத் தீட்டிய அவர்கள், முஸ்லிம்களை நேரிடையாக மோதுவதைத் தவிர்த்துக் கொண்டு, சதித்திட்டங்களின் வாயிலாகவும், மோசடிச் செயல்களின் வாயிலாகவும் முஸ்லிம்களைக் கருவறுக்க வேண்டும் என திட்டம் தீட்டலானார்கள். எனவே, அதன் முதற்கட்டமாக மக்கத்துக் குறைஷிகளுக்கும் இன்னும் தங்களது சகோதர யூத குலத்தவர்களுக்கும் அவர்கள் முஸ்லிம்களை அழித்தொழிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி செய்திகளை அனுப்பி, முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் தரிக்க வேண்டுகோள் வைத்தார்கள். யூதர்களின் சதிச் செயல்களின் காரணமாக, கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் கொண்ட படை ஒன்று திரண்டது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த தூதையும், அதனை ஏற்றுக் கொண்ட நெஞ்சங்களையும் அழித்தொழிப்பதற்காக, படை திரண்டு வருகின்றது என்பதனைக் கேள்விப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவைச் சுற்றிலும் அகழ் - குழி தோண்டுமாறு தனது தோழர்களுக்கு உத்தரவிட்டதோடு, தானும் அதில் பங்கெடுத்துக் கொண்டார்கள். மதீனாவின் எல்லைக்குள் எதிரிகள் நுழைவதற்கு முன்பாகவே இப்பொழுது குழி வெட்டப்பட்டு தயார் நிலையில் இருந்தது. எதிரிகள் தரப்பில் 10 ஆயிரம் ஆயுதந் தரித்த போர் வீரர்கள் திரட்டப்பட்டிருந்த அதே வேளையில், முஸ்லிம்களின் தரப்பிலோ 3 ஆயிரத்திற்கு மேல் வீரர்கள் இல்லை. 3 ஆயிரத்திற்கும் சற்றுக் குறைவான எண்ணிக்கையுடையோராக இருந்தார்கள். இவர்களில் பலர் ஊணமுற்றோராக இருந்ததோடு, அந்தக் காலகட்டத்தில் கடுமையான குளிர் நேரமாகவும் இருந்தது. முஸ்லிம்கள் எண்ணிக்கையிலும், இன்னும் வாய்ப்பு வசதிகளிலும் மிகக் குறைவான வளத்தையே பெற்றிருந்தும் கூட, அவர்களது இறைநம்பிக்கையின் உறுதியானது ஒரு மாத கால முற்றுகையைத் தாக்குப் பிடிக்க வைத்ததோடு மட்டுமல்லாது, எதிரிகளின் தரப்பில் கடுமையான சேதத்தையும் ஏற்படுத்தியது. இந்த முற்றுகைப் போராட்டத்தில், அகழியின் ஒரு பகுதி அபுபக்கர் (ரலி) அவர்களின் தலைமையின் கீழ் இருந்தது. அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசலும் கட்டப்பட்டது, அந்தப் பள்ளிவாசல் ஷா வலியுல்லாஹ் அவர்களது காலத்திலும் கூட இருந்தது என்று வராற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. ஹ{தைபிய்யா உடன்படிக்கை, துல்காயிதா 6 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களுடன் துல்காயிதா 6 அன்று மதீனாவிலிருந்து மக்காவிற்கு ஹஜ் செய்யும் நிமித்தமாகக் கிளம்பினார்கள். இஹ்ராம் அணிந்திருந்த நிலையில், பலிப் பிராணிகளையும் தங்களுடன் கொண்டு சென்றதோடு, முழுக்க முழுக்க ஹஜ் செய்யும் நோக்கத்துடனேயே மக்காவை நோக்கிக் கிளம்பினார்களே ஒழிய, குறைஷிகளை எதிர்த்துப் போர் புரியும் நிமித்தமாகச் செல்லவே இல்லை. இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன், அன்ஸார்களும், முஹாஜிர்களும் இன்னும் உதவியாளர்களுமாக கிட்டத்தட்ட 3 ஆயிரம் பேர்களுடன் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். வரும் வழியில் மக்கத்துக் குறைஷிகள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு நுழைவதைத் தடுக்கும் பொறுட்டு திரண்டு நிற்பதாகத் தகவல் கிடைத்தவுடன், வழக்கமான பாதையை விட்டு விட்டு, பாதையை மாற்றி ஹ{தைபிய்யா என்ற இடத்தை ஒட்டிய பகுதி வழியாகத் தன்னுடைய பயணத்தைத் தொடர்கின்றார்கள். வழக்கம் போல இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது ஆருயிர்த் தோழர் அபுபக்கர் (ரலி) அவர்களிடம் நிலைமையின் போக்கு பற்றி கலந்தாலோசனை செய்த பொழுது, நாம் எந்த நோக்கத்திற்காக மதீனாவை விட்டுப் புறப்பட்டு வந்திருக்கின்றோமோ, அந்த நோக்கம் தவிர வேறு நோக்கம் எதுவும் கிஞ்சிற்றும் கிடையாது, போர் செய்யும் நோக்கமோ அல்லது குறைஷிகளுடன் விவாதம் செய்யும் நோக்கத்துடனோ நாம் இந்தப் பயணத்தைத் தொடரவில்லை என்பதனை குறைஷிகளுக்குத் தெளிவாக விளங்க வைத்து விட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் முஸ்லிம்கள் தங்களது நோக்கத்தைத் தெளிவாகத் தெரிவித்து விட்ட பின்னரும், குறைஷிகளுக்கு திருப்தி ஏற்படாமல், தங்களது தரப்புப் பேச்சுவார்த்தைக்கு உர்வா பின் மஸ்ஊது என்பவரைஇறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் குறைஷிகள் அனுப்பி வைத்தார்கள். இப்பொழுது உர்வா ஒரு மிகப் பெரிய பணியைச் செய்ய ஆரம்பித்தார். அதாவது, முஸ்லிம்களை எதிர்ப்பதற்காக குறைஷிகள் மிகப் பெரிய படை ஒன்றைத் தயார் செய்து தயாராக வைத்திருப்பதாக இறைத்தூதர் (ஸல்) அவர்களை நம்ப வைத்து விட வேண்டும், அவர் மனதில் குறைஷிகளைப் பற்றிய அச்சத்தை ஊட்டி விட வேண்டும் என்பதே உர்வா வின் திட்டமாக இருந்தது. உர்வா வின் இந்தத் திட்டத்தையும், அவரது ஆணவப் பேச்சையும் பொறுக்க மாட்டதா அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள், கோபம் கொண்டவர்களாக..! ஓ! கற்சிலைகளான லாத்தையும், உஸ்ஸாவையும் வணங்கக் கூடியவர்களே..! அறிவு கெட்ட நீங்களே போருக்குத் தயாராகி விட்ட பின், அல்லாஹ்வையும், அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மீது இறைநம்பிக்கை கொண்டிருக்கின்ற நாங்களும் உங்களுக்கெதிராகத் தயாரகுவேமே ஒழிய, பயம் காரணமாக இறைத்தூதர் (ஸல்) அவர்களை கை கழுவி விட்டுச் சென்று விடுவோம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள் என்று முழங்கினார்கள். யார் இந்த மனிதர்? உர்வா உறும ஆரம்பித்தார். இவர் தான் இப்னு அபீ குஹஃபா, என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உர்வா வுக்கு பதிலளித்தார்கள். நான் உங்களிடம் தான் பேச வந்திருக்கின்றேன். அவரிடமல்ல. அவருக்கு நான் தகுந்த நேரத்தில் பதில் கூறுவேன் என்று சினந்தான் உர்வா. உர்வா வினுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை முறிந்து போனதன் பின், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது ஒட்டகையுடன், ஒரு தூதரை அனுப்பி குறைஷிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வரும்படி பணித்தார்கள். ஆனால் குறைஷிகளோ, அந்த ஒட்டகத்தின் கால்களை வெட்டி விட்;டார்கள். இந்தச் சம்பவம் நடந்த பின்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், பேச்சுவார்த்தைக்கான கதவை மூடி விடவில்லை. இப்பொழுது உதுமான் பின் அஃபான் (ரலி) அவர்களை குறைஷிகளிடமும், இன்னும் முக்கியமாக அபுசுஃப்யான் மற்றும் மற்ற குறைஷித் தலைவர்களைச் சந்தித்து, முஸ்லிம்கள் வந்த நோக்கத்தை விளக்கி வரும்படி அனுப்பி வைத்தார்கள். உதுமான் (ரலி) அவர்கள் முஸ்லிம்களின் நோக்கத்தை விளக்கியதன் பின்பும், குறைஷிகளின் பிடிவாதம் தளரவில்லை. உதுமான் அவர்களே..! நீங்கள் வேண்டுமானால் கஃபாவை வலம் வந்து விட்டுப் போங்கள் என்று சலுகை காட்டினார்கள். ஆனால் உதுமான் (ரலி) அவர்களோ, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஃபாவை வலம் வராத வரை நான் வலம் வர மாட்டேன் என்று கூறினார்கள். இதனைக் கேட்ட குறைஷித் தலைவர்களுக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது, இப்பொழுது உதுமான் (ரலி) அவர்களை தங்களது பாதுகாப்பின் கீழ் திரும்பிப் போக முடியாத அளவுக்கு தடுத்து வைத்துக் கொண்டார்கள். உதுமான் (ரலி) அவர்களை தடுத்து வைத்துக் கொண்ட செய்தி, இப்பொழுது உதுமான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டு விட்;டார்கள் என்ற வதந்தியாக ஹ{தைபிய்யாவில் இருக்கக் கூடிய முஸ்லிம்களிடம் வந்தடைந்தது. உதுமான்(ரலி) அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கடுமையான கோபத்திற்கு ஆளானார்கள். இன்னும் கொலைக்குப் பழிக்குப் பழி எடுக்காமல் விடுவதில்லை என்று சபதம் செய்து கொண்டார்கள். இப்பொழுது, தனது தோழர்கள் அனைவரையும் அழைத்தார்கள். புதிதாக உருவெடுத்துள்ள இந்தப் பிரச்னையில், அனைவரும் உறுதியோடு இருந்து போராடுவோம் என்று அனைவரிடம் பைஅத் என்று சொல்லக் கூடிய சத்தியப் பிரமாணம் பெற்றுக் கொண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மரத்தினடியில் நின்று கொள்ள, நபித்தோழர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கையில் கை வைத்து, சபதம் எடுத்து உறுதிப் பிரமாணம் செய்தார்கள். இந்த உறுதிப் பிரமாணத்தைத் தான் இஸ்லாமிய வரலாறு, பைஅத்துர் ரிழ்வான் என்றழைக்கின்றது. மேலும், இந்த உறுதிப் பிரமாணத்தைப் பற்றி திருமறைக்குர்ஆனில் இறைவன் இவ்வாறு சிலாகித்துக் குறிப்பிடுகின்றான் : முஃமின்கள் அந்த மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்த போது மெய்யாகவே அல்லாஹ் அவர்களைப் பொருந்தி (ஏற்றுக்) கொண்டான். அவர்களுடைய இதயங்களில் இருப்பதை அவன் அறிந்து, அவர்கள் மீது (சாந்தியையும்) அமைதியை(யும்) இறக்கியருளி, அவர்களுக்கு அண்மையில் வெற்றியையும் அளித்தான்.(48:18) உதுமான் (ரலி) அவர்கள் அங்கே இல்லாத காரணத்தால், அவர்களுக்காக வேண்டி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தானே பைஅத் எடுத்துக் கொண்டார்கள். தனது கரத்தின் மீது தனது மற்றொரு கரத்தை வைத்து உதுமான் (ரலி) அவர்களுக்காக பைஅத் எடுத்துக் கொண்டார்கள். இந்த பைஅத் நடந்து முடிந்த பின் தான், தமக்குக் கிடைத்த செய்தி தவறான செய்தி என்பதையும், இன்னும் இந்த வருடம் ஹஜ்ஜுச் செய்யாமல் திரும்பி விட்டால், அடுத்த வருடம் தாராளமாக வந்து ஹஜ் செய்து விட்டுப் போகலாம் என்ற நிபந்தனையுடன் கூடிய செய்தியை, சுஹைல் அவர்களிடம் குறைஷிகள் தெரிவித்து அனுப்பி விட்டனர். மேலே நடந்த சம்பங்களும் அதில் முஸ்லிம்கள் உறுதியுடன் நிலைத்திருந்ததையும் இறைவன் மிகவும் புகழ்ந்ததோடு, அவர்களைப் பெருமைப்படுத்தியும் விட்டான். மிக நீண்ட ஆலோசனைகளுக்குப் பின்பு, இருதரப்பிலும் ஒரு முடிவெடுக்கப்பட்டு, அதற்கான ஒப்பந்தங்களை இருவரும் எழுதிக் கொள்ளச் சம்மதித்தனர். செய்து கொண்ட ஒப்பந்தமானது குறைஷிகளுக்குத் தான் மிகவும் சாதகமானதாக இருக்கின்றது என்று அபிப்பராயப்பட்ட உமர் (ரலி) அவர்கள், தனது கருத்தை அபுபக்கர் (ரலி) அவர்களிடம் எடுத்துக் கூறினார்கள். உமர் (ரலி) அவர்களது ஆலோசனையை மறுத்த அபுபக்கர் (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களது கருத்தை ஏற்குமாறு ஆலோசனை வழங்கியதோடு, இறைத்தூதர் (ஸல்) அவர்களது வழிமுறையை இறுகப்பற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள். அதனை அடுத்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் நேரடியாகப் பேசிப் பார்த்து விடுவோம் என்று கிளம்பிய உமர் (ரலி) அவர்கள், தமது கருத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வெளிப்படுத்திய போது, நான் அல்லாஹ்வின் கட்டளைப்படி தான் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றி உள்ளேன் என்று பதில் தந்ததுடன், உமர் (ரலி) அவர்கள் அமைதியாகி விட்டார்கள். ஒப்பந்தங்கள் அலி (ரலி) அவர்கள் எழுத, முஸ்லிம்களின் சார்பில் அபுபக்கர் (ரலி), உமர் (ரலி), அலி (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) மற்றும் பலர் கையெழுத்திட்டார்கள். ஒப்பந்தங்கள் எழுதப்பட்டு முடிக்கப்பட்டவுடன், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உம்ரா மட்டும் செய்து விட்டு திரும்பி விட்டார்கள். அவ்வாறு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் தான் சூரா அல் ஃபத்ஹ் - என்ற அத்தியாயம் இறக்கியருள் செய்யப்பட்டது. இந்த அத்தியாயத்தில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமானது, ஒரு தெளிவான வெற்றி என அருள் செய்யப்பட்டிருந்தது. இமாம் சுஹ்ரி அவர்கள் இந்த அத்தியாயம் பற்றிக் குறிப்பிடும் போது, ஹ{தைபிய்யா வெற்றியைப் போல வேறு எப்பொழுதும் முஸ்லிம்கள் வெற்றி பெற்றதில்லை, அவ்வளவு மிகப் பெரிய வெற்றியை ஹ{தைபிய்யா உடன்படிக்கை மூலம் முஸ்லிம் அடைந்து கொண்டார்கள் என்று குறிப்பிடுகின்றார்கள். இந்த ஒப்பந்தத்திற்குப் பின், முஸ்லிம்களும் மக்கத்துக் குறைஷிகளும் நட்பு முறையில் சந்தித்துக் கொண்டார்கள், முன்பு இந்த சந்திப்பு போருக்கான சந்திப்பாகத் தான் இருந்தது. இப்பொழுது, இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளாத மக்கள் மத்தியில் இஸ்லாத்தின் தூதை எடுத்துச் செல்வது மிகவும் எளிதாகவும் இருந்தது. இந்த ஒப்பந்தத்திற்குப் பின்பு தான் இஸ்லாத்தின் தூதை ஏராளமான பேர்கள் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள். இதுவரை காலமும் ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டு நோக்குவோமானால், ஹ{தைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்பு, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை இதுகாலம் வரை ஏற்றிருக்கக் கூடியவர்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆம்! ஹ{தைபிய்யா உடன்படிக்கையின் பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றி வந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 1400 தான் இருந்தது. ஆனால் ஹ{தைபிய்யா உடன்படிக்கை நடைபெற்ற பின் இரண்டு ஆண்டுகளில் மக்காவை வெற்றி கொண்டு, மக்காவிற்குள் பிரவேசிக்கும் பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 10 ஆயிரம் பேர்களுடன் நுழைந்தார்கள் என்று வரலாறு கூறுகின்றது. எனவே, இமாம் சுஹ்ரி அவர்களின் கருத்து முற்றிலும் உண்மையானதே என்று வராற்று ஆசிரியம் இப்னு ஹிஸாம் அவர்கள் கூறுகின்றார்கள். கைபர் யுத்தம், முஹர்ரம் 7 ஹ{தைபிய்யாஉடன்படிக்கைக்குப் பின்பு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு மாத கால அளவு தான் தங்கியிருந்திப்பார்கள். பின்பு அவர்கள் கைபரை நோக்கிப் படை எடுத்தார்கள். இந்த கைபர் பகுதியில் அதிமான யூதக் குலங்களும், அவர்களைச் சார்ந்தவர்களின் கோட்டைகளும் அதிகமாக இருந்தன. இந்தப் போரில் அலி (ரலி) அவர்கள் வெள்ளைக் கொடி ஏந்திக் கொண்டு சென்றார்கள். எந்தக் கோட்டையைத் தகர்க்க முடியாது என இறுமாப்புடன் இருந்தார்களோ, அதனைத் தகர்க்கும்படைக்கு தலைமை தாங்கி அபுபக்கர் (ரலி) அவர்கள் சென்றார்கள். ஆனால் அவர்களும் தோல்வியையே தழுவினார்கள். பின்பு உமர் (ரலி) அவர்களின் தலைமையில் படை சென்ற போதும், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை, மூன்றாவதாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அலி (ரலி) அவர்களின் தலைமையில் படையை அனுப்பி வைத்தார்கள். அப்பொழுது, நான் இப்பொழுது அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அதிகமதிகம் நேசிக்கக் கூடியவரையும், இன்னும் போர்க்களத்தில் இருந்து புறமுதுகிட்டு ஓடாத ஒருவரையும் இந்தப் படைக்குத் தலைவராகத் தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கின்றேன் என்று கூறி அனுப்பி வைத்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அந்த முன்னறிவிப்பு, நிறைவேறியது, அந்த கைபர் கோட்டை கைப்பற்றப்பட்டது. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இந்த முன்னறிவிப்புக்குச் சொந்தக் காரர், அலி (ரலி) அவர்கள் தான். மக்கா வெற்றி, ரமழான் 8 ஹ{தைபிய்யா உடன்படிக்கையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிமுறைகளை வெகு நீண்ட காலம் குறைஷியர்களால் பேணிக் காக்க இயலவில்லை. வெகு சீக்கிரமே அவர்கள் விதிமுறைகளை மீற ஆரம்பித்தார்கள். பனூ குஸாஆ என்ற கோத்திரத்தார்கள் முஸ்லிம்களுடன் நட்பு ஒப்பந்தம் செய்திருந்தார்கள். அந்த அடிப்படையில், அவர்கள் மீது போர் தொடுப்பதும், அவர்கள் மீது போர் தொடுப்பவர்களுக்கு ஒத்துழைப்பதும் ஹ{தைபிய்யா உடன்படிக்கைப்படி, உடன்படிக்கையை முறிக்கும் செயலாகும். ஆனால் பனூ குஸாஆ மீது பனூ பக்கர் என்ற கோத்திரத்தவர்கள் தாக்குதல் நடத்திய போது அவர்களுக்கு குறைஷிகள் உதவிகளைச் செய்ய ஆரம்பித்தார்கள். பனூ குஸாஆ குறைஷிகள் மற்றும் பனூ பக்கர் கோத்திரத்தவர்களின் தாக்குதலுக்குப் பயந்து கஃபாவில் அடைக்கலம் புகுந்தும் பிரயோசனமின்றிப் போனது. எனவே, இப்னு சலீம் என்பவரை மதீனாவிற்குத் தூது அனுப்பி, முஸ்லிம்களின் உதவியைக் கோரிப் பெறுவது என்று முடிவெடுத்தார்கள். இந்த அடிப்படையில், இப்னு சலீம் மதீனா சென்று இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்ததோடு மட்டுமல்லாது, தங்களது நிலையைக் குறித்து ஒரு உருக்கமான பாடல் ஒன்றையும் பாடினார். அந்தப் பாடலின் வரிகளில் இழையோடிய சோகத்தையும், அவர்களது தேவையையும் உணர்ந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ரமழான் மாதம் 8 ம் நாளன்று மக்காவை நோக்கிப் படையெடுக்க முடிவு செய்தார்கள். ரமழான் 10 ம் நாளன்று 10 ஆயிரம் தோழர்கள் புடைசூழ மக்காவிற்குள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிரவேசித்தார்கள். இப்பொழுது, முஸ்லிம்களை எதிர்ப்பது என்பது வீண் வேலை என்றுணர்ந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சிறிய தந்தையார் அப்பாஸ் அவர்கள், சமாதானம் செய்து கொள்ள இறைத்தூதர் (ஸல்) அவர்களை அணுகினார்கள். அப்பாஸ் அவர்களின் சமாதானத் தூதை ஏற்றுக் கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், மக்காவில் உள்ள அனைத்து முஸ்லிமல்லாதவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கினார்கள். ஆனால் சில நபர்களைக் குறித்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அவர்களுக்கு பொதுமன்னிப்பு கிடையாது என்றும், இன்னும் அவர்கள் கஃபாவின் திரைச்சீலையினால் சுற்றப்பட்டிருந்தாலும் அவர்களைக் கொன்று விடும்படிக் கூறினார்கள். ஏனெனில், கடந்த காலத்தில் அவர்கள் செய்த கொடுஞ் செயல்கள் மன்னிப்பின் எல்லையையும் கடந்த அநாகரீகச் செயலாக இருந்தது தான் அதன் காரணமாகும். கடந்த 13 ஆண்டுகளில் சொல்லொண்ணா துயரங்களை முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்து விட்ட அவர்களுக்குத் தான் இன்று பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. எந்த நகரில் இருந்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விரட்டப்பட்டார்களோ, அதே நகரில் இன்று ஆட்சியாளராக 10 ஆயிரம் தோழர்கள் புடை சூழ எதிர்ப்பின்றி பிரவேசிக்கும் வல்லமையை இறைவன் முஸ்லிம்களுக்கு வழங்கியிருந்தான். இப்பொழுது அபுபக்கர் (ரலி) அவர்கள் தனது தந்தையார் அபூ குஹஃபா அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன் நிறுத்தி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே..! எனது தந்தைக்கு இஸ்லாத்தினைப் பற்றி சற்று எடுத்துக் கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். அபுபக்கரே..! இந்தப் பெரிய மனிதரை சங்கடத்திற்குள்ளாக்கி விட்டீர்களே..! என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறி விட்டு, அவரைத் தேடி நான் தான் போயிருக்க வேண்டும் என்றார்கள். இல்லை..! இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! அவர் தங்களைத் தேடி வந்திருப்பது தான் சிறந்தது என்றார், அபுபக்கர் (ரலி) அவர்கள். தனக்கு முன்பு நெருக்கமாக அபூ குஹாஃபா அவர்களை அழைத்து அமர வைத்துக் கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அவரது நெஞ்சின் மீது தனது கையை வைத்து, அபூ குஹஃபா அவர்களே, இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி, கலிமாவைக் கற்றுக் கொடுத்தார்கள். இப்பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இனிய நண்பரான அபுபக்கர் (ரலி) அவர்களின் தந்தையாரும், மக்காவின் வெற்றிக்குப் பின் இஸ்லாத்தினைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள். ஹ{னைன் யுத்தம் தபூக் யுத்தம், ரஜப் 9 (குறிப்பு : இரண்டையும் விரிவாக போர்க்களத்தில் நாயகம், என்ற நூலில் பார்வையிடவும்). ஹிராக்ளியஸ் அரேபியாவில் உள்ள கிறிஸ்தவர்களின் துணையுடன் ஹிராக்ளியஸ் மதீனாவின் மீது படையெடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றான் என்ற செய்தி இறைத்தூதர் (ஸல்) அவர்களை அடைந்த பொழுது, தற்காப்புக்காக போர் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டார்கள். இப்பொழுது, மிகப் பெரிய வல்லரசை எதிர்த்துப் போர் புரியத் தயாராகிக் கொண்டிருந்த பொழுது, முஸ்லிம்களின் நிலையோ, மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது. காரணம், அப்பொழுது மதீனாவில் பஞ்சம் தலைவிரித்தாடிக் கொண்டிருந்தது. எனவே, இந்தப் போரை ஜெய்ஸ{ல் யுஷ்ரா என்றழைக்கின்றனர். இன்னும் அந்த நேரத்தில் தான் பேரீத்தம் பழங்கள் பழுத்துக் கொண்டிருந்தன, எனவே மதீனாவாசிகள் தங்களது நகரத்தை விட்டுச் செல்வதற்கும் மனமில்லாதிருந்தார்கள். இந்த இரண்டு சூழ்நிலைகளையும் பயன்படுத்திக் கொண்ட மதீனத்து நயவஞ்சகர்கள், முஸ்லிம்களின் மனதில் விஷ வித்துக்களை விதைக்க ஆரம்பித்தார்கள். எனினும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் இந்த கஷ்டங்களை எல்லாம் தாண்டி, தங்களது மன உறுதியை நிரூபித்துக் கொண்டிருந்தார்கள். தங்களது பொருள்களாலும், தியாகத்தாலும் இஸ்லாத்தின் மேன்மைக்கு சான்று பகர்ந்து கொண்டிருந்தார்கள். இன்னும் உமர் (ரலி) அவர்களோ, இந்த முறையாவது அபுபக்கர் (ரலி) அவர்களை மிஞ்சி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டவர்களாக, தனது வீட்டிற்குச் சென்ற உமர்(ரலி) அவர்கள் தனது வாழ்நாள் சேமிப்பில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு வந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! இதோ பெற்றுக் கொள்ளுங்கள். இந்தப் போருக்கான எனது பங்கை என்றார்கள். உமரே..! உமது வீட்டாருக்கு எதையேனும் மிச்சம் வைத்திருக்கின்றீர்களா? என்றார்கள். ஆம்! தங்களுக்குக் கொடுத்தது போல அவர்களுக்குத் தேவையான அளவு பொருட்களை வைத்து விட்டு வந்திருக்கின்றேன் என்றார்கள். இப்பொழுது அபுபக்கர் (ரலி) அவர்களின் முறை வந்தது..! அபுபக்கர் அவர்களே..! தாங்கள் என்ன கொண்டு வந்தீர்கள்? இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். இதோ யாரசூலுல்லாஹ்..! என்று தான் கொண்டு வந்த செல்வத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுத்த பொழுது, தங்களது குடும்பத்தாருக்காக எதனை விட்டு வந்திருக்கின்றீர்கள்? என்றார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள்..! ஆம்..! யா! ரசூலுல்லாஹ்..! அல்லாஹ்வையும், அவனது தூதர் (ஸல்) அவர்களையும் விட்டு வந்திருக்கின்றேன் என்றார்கள்..! அதாவது, இந்த உலக வாழ்க்கைக்கான எதனையும் நான் விட்டு வரவில்லை, மாறாக, மறுமைக்கானவற்றையும், இறைவனுடைய பாதுகாப்பையும், அவனது தூதரது வழிமுறையையும் விட்டு வந்திருக்கின்றேன் என்றார்கள். அப்பொழுது, உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :- இனி, எப்பொழுதும் நான் அபுபக்கர் (ரலி) அவர்களை மிஞ்சவே முடியாது என்றார்கள். தலைமை அலுவலகத்தின் தலைமைக் காரியதரிசியாகவும், மற்றும் உத்தரவுகள் பிறப்பித்தல், கொடியை தாங்கிக் கொள்ளுதல் போன்ற அனைத்துப் பணிகளும் அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு வழங்கப்பட்டது. 30 ஆயிரம் படை வீரர்களுடன் இஸ்லாமியப் படை தபூக் என்ற இடத்தை அடைந்தது. ஆனால் ஹிராக்ளியஸின் படை அதன் முகாமை விட்டும் ஒரு இஞ்ச் கூட நகர்ந்திருக்கவில்லை. ஜெருஸலத்தின் கவர்னராக இருந்த ஜான் என்பவர் முஸ்லிம்களிடம் வந்து சமாதான ஒப்பந்தம் கோரினார். சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட பின் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனா திரும்பினார்கள். ஹஜ்ஜுக்குத் தலைமை தாங்குதல் துல்ஹஜ் 9 அன்று அபுபக்கர் (ரலி) அவர்களது தலைமையில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் ஒரு குழுவினரை ஹஜ் செய்யும் நிமித்தமாக மக்காவுக்கு அனுப்பி வைத்தார்கள். இதன் மூலமாக முதன்முதலாக ஹஜ் சென்ற குழுவிற்கு தலைமைப் பொறுப்பேற்ற நற்பேற்றை இஸ்லாமிய வரலாற்றில் தக்க வைத்துக் கொண்ட பெருமை அபுபக்கர் (ரலி) அவர்களைச் சாரும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சார்பாக 20 பலிப்பிராணிகளையும், தனது சார்பாக ஐந்து பலிப்பிராணிகளையும் இன்னும் 300 தோழர்களுடன் மக்காவை நோக்கி ஹஜ் செய்யும் நிமித்தம் அபுபக்கர் (ரலி) அவர்களது தலைமையில் முஸ்லிம்கள் ஹஜ் செய்யச் சென்றனர். இந்த வருடத்தில் முஸ்லிம்களுடன், இணைவைப்பாளர்களும் இணைந்து ஹஜ்ஜை நிறைவேற்றினார்கள். இந்த வருடத்திற்குப் பின்பு, இணைவைப்பாளர்கள் ஹரம் பகுதிக்குள் நுழைவதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். இந்த சமயத்தில் தான் அலி (ரலி) அவர்கள் சூரா அல் பராஅத் தின் வசனங்களை உரத்த குரலில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சார்பாக முழங்கிக் கொண்டு வந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இறுதி வாழ்வு, 12 ரபிய்யுல் அவ்வல் ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ஹஜ்ஜத்துல் விதா என்ற இறுதி ஹஜ்ஜை நிறைவேற்றியதன் பின்னால், மதீனா திரும்பிய நாளில் இருந்து, அதாவது ஸஃபர் மாதம் இறுதி அல்லது ரபிய்யுல் அவ்வல் மாதத்தின் ஆரம்ப நாட்களில் இருந்து சுகவீனத்திற்கு ஆளானார்கள். அதுவே அவர்களது இறுதி வாழ்வுக்கான ஆரம்பமாகவும் இருந்தது. ஒருநாள் நடுஇரவின் பொழுது தனது அடிமையான அபூ முவைஹபா அவர்களையும் அழைத்துக் கொண்டு ஜன்னத்துல் பக்கியை நோக்கிச் சென்ற இறைத்தூதர் (ஸல்) அவர்கள், இறைவனின் கட்டளைப்படி அங்கே அடக்கமாகி இருக்கின்ற தனது உறவினர்களுக்காகவும் மற்றும் தனது தோழர்களுக்காகவும் பிரார்த்தனை செய்தார்கள். ஜன்னத்துல் பக்கீயின் மத்தியில் நின்று கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், மண்ணறைவாசிகளே..! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டுமாக..! இங்கே உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைக் காட்டிலும் உங்களது நிலை மிகவும் மேலானது. சோதனைகள் இருளின் ஒரு பகுதியைப் போன்று வந்து கொண்டிருக்கின்றன. அதன் பின்பு தனது அடிமையான முவைஹபா அவர்களின் பக்கம் திரும்பிய இறைத்தூதர் (ஸல்)அவர்கள், இந்த உலகத்தின் முடிவில்லாத வாழ்வும் அதன் வளங்களின் திறவுகோள்கள் ஒரு கையிலும், இன்னும் சுவனம் இன்னுமொரு கையிலும் எனக்கு வழங்கப்பட்டு, இவற்றிற்கிடையே எனது விருப்பம் முன்வைக்கப்பட்டுள்ளது. நான் எனது இறைவனின் சங்கையான முகத்தையும், சுவனத்தையும் தேர்வு செய்து விட்டேன் என்றார்கள். அபூ முவைஹபா அவர்களோ..! இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! இந்த உலக வாழ்க்கையையும், அதன் வளங்களையும் பெற்றுக் கொள்ளுங்களேன் என்றார்கள்..! இல்லை..! இல்லை..! நான் எனது இறைவனின் சங்கையான முகத்தையும், சுவனத்தையும் தேர்வு செய்து விட்டேன் என்றார்கள். அதன் பின் அங்கு அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்களுக்காக தொழுது விட்டு, அவர்களுக்காகப் பிரார்த்தனையும் செய்து விட்டுத் திரும்பினார்கள். வீட்டிற்குத் திரும்பி வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அங்கு ஆயிஷா (ரலி) அவர்களுக்கு தலைவலி கண்டிருக்கக் கண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் தலைவலி ஆரம்பமாகியது. ஆயிஷாவே..! எனக்கும் தலைவலி வேதனை எடுக்கின்றது..! என்று கூறினார்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள். அப்பொழுது ஆரம்பித்த தலைவலி நேரம் செல்லச் செல்ல உயர்ந்து கொண்டே சென்றது. இந்த அளவு வேதனையிலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தனது மனைவிமார்களிடம் செல்லக் கூடிய நாட் கணக்கின் படி தவறாது, ஒவ்வொருவரது இல்லத்திற்கும் சென்று வந்தார்கள். இப்பொழுது, வேதனையின் உச்சத்தில் இருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தனது மனைவிமார்கள் அனைவரையும் அழைத்து, தனது இறுதிக் காலத்தை ஆயிஷா (ரலி) அவர்களது இல்லத்தில் தங்கிக் கொள்ள அனுமதி கேட்டார்கள். அவர்களும் சம்மதம் தெரிவித்து விடவே, அலி (ரலி) அவர்களது தோளில் ஒரு கையையும், ஃபழ்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்களது தோளில் ஒரு கையையும் போட்டுக் கொண்டு, ஆயிஷா (ரலி) அவர்களது வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். தலைவலியிலிருந்து சற்று நிவாரணம் பெற தலையில் சிறு துண்டை வைத்து கட்டப்பட்டது, இருந்தும் மிகவும் பலவீனமான நிலைக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். எனவே, நடக்க இயலாத அவர்களது பாதங்கள், தரையில் இழுபட்டுக் கொண்டிருந்த நிலையிலேயே ஆயிஷா (ரலி) அவர்களது இல்லம் வந்து சேர்ந்தார்கள். சுகவீனமுற்றிருந்த இந்த நிலையிலேயே ஒருநாள், பள்ளிவாசலுக்கு வருகை தந்திருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், மிம்பரில் அமர்ந்தவாறு உஹதுப் போரில் இறந்து போன தனது தோழர்களுக்காக பிரார்த்தனை புரிந்தார்கள். பின் அங்கு கூடியிருந்த மக்களிடம் உரையாற்ற ஆரம்பித்தார்கள் : இறைவன் தனது அடிமைகளில் ஒருவரிடம் இந்த உலக வாழ்க்கையின் வளங்கள், இன்னும் அவனிடம் மீளுதல் இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யும்படிக் கூறினான், அந்த அடியான், தனது இறைவனிடம் மீளுவதையே தேர்ந்தெடுத்துக் கொண்டார் என்று கூறினார்கள். தனது உற்ற தோழர், ஆருயிர் நண்பர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருவதனங்களில் இருந்து வந்த அந்த வார்த்தையின், அர்த்தப் பொருள் என்ன என்பதை சொல்லாமலேயே விளங்கிக் கொண்ட அபுபக்கர் (ரலி) அவர்களின் கன்னங்களில் இருந்து நீர் முத்துக்கள் உருண்டோடிக் கொண்டிருந்தன. இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! நாங்கள் எங்களைத் தங்களுக்காக அற்பணம் செய்யக் காத்திருக்கின்றோம், இன்னும் எங்களது பெற்றோர்களையும் கூட..! என்றார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள். தோழரே..! உங்களை நீங்கள் ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். பின்பு, இந்தப் பள்ளிக்குள் மக்கள் நுழைவதற்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கின்ற அனைத்து வழிப் பாதைகளையும் அடைத்து விடுங்கள், அபுபக்கர் (ரலி) அவர்களது வீட்டிலிருந்து வருகின்ற பாதையைத் தவிர என்று கூறினார்கள். அபுபக்கர் அவர்களை விட உதவிகரமாக இருந்த ஒருவரை நான் அறியமாட்டேன் என்றும் கூறினார்கள். எனக்கு உற்ற தோழர் ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படிப் பணிக்கப்பட்டால், நான் அபுபக்கர் அவர்களைத் தான் தேர்ந்தெடுப்பேன் என்றார்கள். இந்தத் தோழமையும், சகோதரத்துவமும் இறைநம்பிக்கையினால் விளைந்ததுவாகும், இவை யாவும் இறைவன் நம்மை ஒன்று கூட்டும் நாள் வரைத் தொடர வேண்டும் என்றும் பிரார்த்தித்தார்கள். அதன் பின் முஹாஜிர்களை நோக்கி, முஹாஜிர்களே..! அன்ஸார்கள் செய்திருக்கின்ற உதவிகளை எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள், அவர்களது உதவிக்கு நீங்கள் கடன் பட்டுள்ளீர்கள் என்ற பொருள்பட கூறினார்கள். பின்பு இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு நோயின் கடுமை அதிகமாகியது. எனவே, அபுபக்கர் (ரலி) அவர்களையே தொழுகையை முன்னின்று நடத்துமாறு கேட்டுக் கொண்டார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, எனது தந்தை இளகிய மனம் படைத்தவர், திருமறைக் குர்ஆனை ஓதும் போது அவருக்கு அழுகை வந்து விடும். எனவே, பின் நிற்பவர்கள் திருமறைக்குர்ஆனை சரியாகச் செவி மடுக்க முடியாது, எனவே, அவருக்குப் பதில் வேறு ஒருவரை நியமியுங்கள் என்று கூறினார்கள். ஆனால், ஆயிஷா (ரலி) அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், மீண்டும் அபுபக்கர் (ரலி) அவர்களையே தொழ வைக்கும்படி ஏவினார்கள். மீண்டும் ஆயிஷா (ரலி) அவர்கள் வலியுறுத்தியும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபுபக்கர் (ரலி) அவர்களையே தொழ வைக்கும்படி உத்தரவிட்டார்கள். அப்பொழுதிலிருந்து, வியாழன் இரவுத் தொழுகையிலிருந்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்து நோய்வாய்ப்பட்ட காலத்தில் இருந்து மரணமாகும் வரைக்கும் 17 நேரத் தொழுகைகளை இமாமாக முன்னின்று அபுபக்கர் (ரலி) அவர்கள் நடத்தியுள்ளார்கள். ஞாயிற்றுக் கிழமை காலையில் தனது அறையில் இருந்து வெளியில் வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தலையில் துண்டு கட்டப்பட்டிருந்தது. அப்பொழுது அபுபக்கர் (ரலி) அவர்களது தலைமையில் தனது தோழர்கள் கூட்டுத் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருப்பதைக் கண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முகம் சந்தோஷத்தால் மலர்ந்தது. அவர்கள் முன்னோக்கி வரவும், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு தோழர்கள் வழி விட்டு ஒதுங்கினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வருவதை அறிந்து கொண்ட அபுபக்கர் (ரலி) தனது தலைமை தாங்கி தொழுகை நடத்திக் கொண்டிருப்பதில் இருந்து பின்வாங்கி, இறைத்தூதர் (ஸல்) அவர்களை இமாமாக முன்னிறுத்த முயன்ற பொழுது, தடுத்து நிறுத்திய இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அபுபக்கர் (ரலி) அவர்களையே தொழுகையை முன்னின்று நடத்துமாறு பணித்தார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களின் வலது பக்கத்தில் அமர்ந்தவாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றினார்கள். அந்தத் தொழுகை நடந்து முடிந்த பின், உயர்ந்த தொணியில் பள்ளியை விட்டும் வெளியில் கேட்கும் அளவுக்கு அதிக அளவு சப்தத்துடன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்கள் முன் உரையாற்றினார்கள். எனது மக்களே..! நெருப்பு மூட்டப்பட்டு விட்டது, சோதனைகள் இருளின் ஒருபகுதியைப் போல வந்து கொண்டிருக்கின்றன. அண்ணல் நபி (ஸல்) மேலும் நவின்றார்கள்:- 'அனைவரையும் விட அதிகமாக எவருடைய செலவத்திற்கும் நட்புக்கும் நான் கடமைப்பட்டிருக்கின்றேனே அவர் அப10பக்ரு (ரலி) அவர்களாவார். நான் உலகின் என் சமுதாயத்தவரிலிருந்து எவராவது ஒருவரை என் நண்பனாக ஆக்கிக் கொள்ள முடியுமென்றால் அப10பக்ரையே எடுத்துக் கொள்வேன். ஆனால் இஸ்லாத்தின் உறவே நட்புக்கு போதுமானதாகும். ஆம்! செவி சாயுங்கள்! உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயங்கள் தம் இறைத்தூதர்கள் மற்றும் பெரியார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். இதோ பாருங்கள். நீங்கள் அத்தகைய நடத்தைளை மேற்கொள்ளக் கூடாது. நான் உங்களை அதனை விட்டும் தடுத்துவிட்டுச் செல்கின்றேன்". மேலும் கூறினார்கள்: 'ஹலால், ஹராம் (ஆகுமானது, தடுக்கப்பட்டது) என்னும் கட்டளைகளை (நானே பிறப்பித்ததாக்க் கருதி என்னுடன் இணைத்தப் பேசாதீர்கள். இறைவன் அகுமாக்கியுள்ளவற்றையே நான் ஆகுமாக்கியுள்ளேன். அவன் தடை செய்தவற்றையே நான் தடை செய்துள்ளேன்." நோய் வாய்ப்பட்ட இதே நிலையில் ஒருநாள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் குடும்பத்தாரை நோக்கி கூறினார்கள்: 'இறைத்தூதரின் மகளான ஃபாத்திமாவே! இறைத்தூதரின் அத்தையான சபிய்யாவே! இறைவனிடம் உங்களுக்குப் பயன்படும் எந்த நற்செயலாது செய்து கொள்ளுங்கள். நான் உங்களை இறைவனின் தண்டனையிலிருந்து காப்பாற்றிட முடியாது." ஒருநாள் நோயின் கடுமை அதிகமாக இருந்தது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் முகத்தில் போர் வையைப் போட்டுக் கொள்வார்கள். பிறகு எடுத்து விடுவார்கள். இந்த நிலையில் ஆயிஷா (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திருநாவிலிருந்து பின்வரும் சொற்களைச் செவியுற்றார்கள். 'ய10தர்களின் மீதும் கிறஸ்தவர்களின் மீதும் இறைவனின் சாபமுண்டாகட்டும்! அவர்கள் தங்கள் இறைத்தூதர்களின் மண்ணறைகளை வணக்கஸ்தளங்களாக்கின் கொண்டார்கள்." அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் எப்போதோ ஒரு முறை சில பொற்காசுகளைக் கொடுத்து வைத்திருந்தார்கள். அந்த அமைதியற்ற நிலையிலேயே ஒருமுறை, 'ஆயிஷாவே! அந்தப் பொற்காசுகள் எங்கே?" என்று வினவினார்கள். 'முஹம்மத் இறைவனின் பரிபாலிக்கும் ஆற்றலைக் குறித்து ஐயங்கள் கொண்டவனாக, அவனைச் சந்திப்பது விருப்பத்தக்கதா? உடனே அந்தப் பொற்காசுகளை இறைவழியில் தருமம் செய்து விடு!" என்று ஆணையிட்டார்கள்.

Related

வரலாற்றில் ஒரு ஏடு 5516000656605333173

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item