30 வகை பருப்பு மசியல்!

30 வகை பருப்பு மசியல்! சப்பாத்தி, பூரி போன்ற டிபன் அயிட்டங்களுக்கும் சரி.. புலவு மற்றும் சாதத்துக் கும் சரி.. ‘தால்’ எனப்படும் பருப்பு மசி...

30 வகை பருப்பு மசியல்! சப்பாத்தி, பூரி போன்ற டிபன் அயிட்டங்களுக்கும் சரி.. புலவு மற்றும் சாதத்துக் கும் சரி.. ‘தால்’ எனப்படும் பருப்பு மசியல் சிறந்த காம்பினேஷன். பாசிப்பருப்பு, கடலைப்பருப்பில் செய்யும் தால்தான் பொதுவாக எல்லோரும் செய்யும் அயிட்டம். அதைத் தவிர இன்னும் பல ருசிகளில் தால் செய்து அசத்தலாம். எப்போதுமே வீட்டில் இருக்கும் துவரம்பருப்பு, கொண்டைக்கடலை, பச்சைப்பயறு போன்ற பருப்பு மற்றும் பயறு வகைகளைக் கொண்டு செய்யப்பட்ட வித்தியாசமான மற்றும் புதுமை யான ‘தால்’ வகைகளின் அணிவகுப்பு.. இதோ ஆரம்பம்! சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய இந்த சைட்-டிஷ்களை நீங்களும் செய்து, சுவைத்து, பரிமாறி மகிழுங்கள். ------------------------------------------------------------------------------ ஆப்பிள் தால் தேவையானவை: புளிப்பு ஆப்பிள் - 2, சாம்பார்தூள் - 4 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 1, பழுத்த தக்காளி - 1, கடுகு, சீரகம் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - 2 டீஸ்பூன், வேகவைத்த துவரம்பருப்பு - ஒரு கப், எலுமிச்சம்பழச் சாறு - சிறிதளவு, மல்லித்தழை - சிறிதளவு. செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். தக்காளியை விழுதாக அரைக்கவும். ஆப்பிளை தோல் சீவி, துண்டுகளாக நறுக்கி எலுமிச்சம்பழச் சாறில் அரைமணி நேரம் ஊறவிடவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்க்கவும். ஒரு நிமிடம் கழித்து, தக்காளி விழுது, சாம்பார்தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். ஆப்பிள் துண்டுகளை சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்கவிடவும். உப்பு, மல்லித்தழை தூவி, அடுப்பை குறைந்த தீயில் வைத்து 10 நிமிடம் கிளறவும். அருமையான ஆப்பிள் மசியல் ரெடி. தக்காளிக்கு பதிலாக புளிக்கரைசலும் சேர்க்கலாம். ----------------------------------------------------------------------- கோகனட் தால் தேவையானவை: பாசிப்பருப்பு - அரை கப், தேங்காய் துருவல் - ஒரு கப், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பூண்டு - 6 பல், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், கடுகு - தேவையான அளவு, காய்ந்த மிளகாய் - 2, உப்பு - ருசிக்கேற்ப. செய்முறை: பருப்பை வாசனை வரும்வரை எண்ணெய் இல்லாமல், வெறும் வாணலியில் வறுக்கவும். பிறகு வேகவிடவும். மிக்ஸியில் தேங்காய், பூண்டு, மஞ்சள்தூள், மிளகாய்தூள் சேர்த்து அரைக்கவும். வெந்த பருப்புடன் உப்பு, அரைத்த கலவை சேர்க்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, காய்ந்த மிளகாயை இரண்டாகக் கிள்ளிப் போட்டு, கறிவேப்பிலை போட்டு, பருப்பு கலவையை சேர்க்கவும். கொதிக்கவிட வேண்டாம். சூடானால் போதுமானது. சாதம், பப்படத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். ----------------------------------------------------------------------------- முளைப்பயறு தால் தேவையானவை: வெங்காயம் - 1, பாசிப்பயறு (முளை கட்டியது) - அரை கப், தனியாதூள் - அரை டீஸ்பூன், மிளகாய்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு (தேவையானால்) - 2 பல், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப, மல்லித்தழை - சிறிதளவு. செய்முறை: பயறை வேகவிடவும். முக்கால் பாகம் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். மீதியை மிக்ஸியில் தனியாதூள், உப்பு, இஞ்சி சேர்த்து, தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை வதக்கவும். அரைத்த கலவையை சேர்த்து வதக்கவும். வெந்த பருப்பையும் சேர்க்கவும். சிறிது நேரம் நன்றாக கிளறவும். மல்லித்தழையைப் பொடியாக நறுக்கி தூவி அலங்கரிக்கவும். சப்பாத்தியுடன் சாப்பிட அருமையான சைட் டிஷ் இது. -------------------------------------------------------------------------------- மிக்ஸ்டு வெஜிடபிள் தால் தேவையானவை: பாசிப்பருப்பு - ஒன்றரை கப், இஞ்சி - 50 கிராம், மல்லித்தழை - சிறிதளவு, பொடியாக நறுக்கிய காய்கறிகள் (காலிஃப்ளவர், கேரட், சிகப்பு முள்ளங்கி, பூசணி, பட்டாணி எல்லாம் சேர்த்து) - ஒரு கப், எலுமிச்சம்பழச் சாறு - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன். செய்முறை: பச்சை மிளகாய், மல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும். இஞ்சியைத் தோல் சீவி, விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் பாசிப்பருப்பை வாசனை வரும்வரை வறுக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். (எவ்வளவு தளர்த்தியாக பருப்பு வேண்டுமோ, அந்த அளவு நீரை கொதிக்க விடவும்). பெரிய பிரஷர் பான் அல்லது கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம் போட்டு வெடித்ததும், இஞ்சி விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 2 நிமிடம் கழித்து நறுக்கிய காய்கறிகள் + பெருங்காயம், உப்பு, மல்லித்தழை சேர்க்கவும். அதோடு வறுத்த பாசிப்பருப்பை சேர்த்து கொதிக்கும் நீரை விட்டு, மூடியால் மூடி 40 நிமிடம் வேக விடவும். நடு நடுவே கிளறிவிடவும். (தீயைக் குறைவாக வைக்கவும்). இப்பொழுது பருப்பும் காய்கறியும் சேர்ந்து வெந்திருக்கும். எலுமிச்சம்பழச் சாறை சேர்க்கவும். பாஸ்மதி அரிசி சாதத்துடன் சாப்பிட, சத்தான பருப்பு மசியல் ரெடி. ---------------------------------------------------------------------- பாலக்-குடமிளகாய் தால் தேவையானவை: பருப்பு - 2 கப் (எந்த பருப்பு வேண்டுமானாலும்), பொடியாக நறுக்கிய பாலக் கீரை - ஒரு கப், பொடியாக நறுக்கிய குடமிளகாய் - அரை கப், பச்சை மிளகாய் - 3, கரம் மசாலாதூள் - ஒரு டீஸ்பூன், கடுகு, சீரகம் - தாளிப்பதற்கு தேவையான அளவு, மாங்காய் துண்டு (பெரியது) - 1, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். பருப்புகளையும், மாங்காயையும் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேகவிடவும். (குழைய வேண்டாம்). கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் வெடித்ததும், குடமிளகாய் போட்டு வதக்கி, 2 நிமிடம் கழித்து கரம் மசாலாதூள் போட்டு கிளறவும். வெந்த பருப்பை சேர்க்கவும். உப்பு சேர்க்கவும். நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து, மேலும் 10 நிமிடம் வேகவிடவும். சாதத்துடனோ, சப்பாத்தியுடனோ சாப்பிடவும். குறிப்பு: பாலக் கீரைக்கு பதிலாக வெந்தயக்கீரை, முள்ளங்கி கீரை சேர்க்கலாம். பருப்புகளுக்கு பதிலாக முளைகட்டிய பயறும் சேர்க்கலாம். கொண்டைக்கடலையை முந்தின நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் வேகவைத்தும் இந்த தால் செய்யலாம். ---------------------------------------------------------------------------------- கீரை பருப்பு தயிர் தால் தேவையானவை: பாலக் கீரை - ஒரு கட்டு, மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், தயிர் - 3 டேபிள்ஸ்பூன், கடலைமாவு - 3 டீஸ்பூன், வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு டீஸ்பூன், வேர்க்கடலை - 2 டீஸ்பூன், உப்பு, சர்க்கரை - சிறிதளவு. தாளிக்க: எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது. செய்முறை: கீரையைக் கழுவி, ஆய்ந்து நறுக்கி வைக்கவும். அரைமணி நேரம் வெள்ளை கடலையையும், வேர்கடலையையும் வெந்நீரில் ஊற வைத்து, குக்கரில் வேகவிடவும். பிறகு கீரையையும் கடலைகளுடன் சேர்த்து வேக விடவும். தயிரில் கடலைமாவை பேஸ்ட் மாதிரி கரைத்து கொள்ளவும். கீரை, கடலை கலவையை வேகவைத்த தண்ணீருடன் நன்றாக மசித்து கொள்ளவும். தயிரில் கரைத்த கடலைமாவை இதில் கலக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, கீரைக் கலவையில் கொட்டவும். கடைசியில் சிறிது சர்க்கரையும், தேவையான உப்பையும் போட்டு, 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். ------------------------------------------------------------------------- நெய் பருப்பு மசியல் தேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப், பாசிப்பருப்பு - கால் கப், தக்காளி - 2, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, மிளகாய்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், சாம்பார்தூள் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன். செய்முறை: தக்காளியைப் பொடியாக நறுக்கவும். 2 பருப்புகளையும் குக்கரில் குழைய வேகவிடவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தைப் போட்டு, வெடித்ததும் தக்காளி துண்டுகள், மிளகாய்தூள், பெருங்காயம், சாம்பார்தூள் போட்டு நன்றாகக் கிளறவும். 2 நிமிடத்துக்குப் பிறகு உப்பு போடவும். கடைசியில் வெந்த பருப்பைப் போட்டு கொஞ்ச நேரம் கொதிக்க விடவும். இந்த ‘தாலை’ விரைவாகவும் சுலபமாகவும் செய்யலாம். --------------------------------------------------------------------------- ‘ஆல் இன் ஒன்’ தால் தேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், பாசிப்பருப்பு - அரை கப், பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிதளவு, பூண்டு - 3, பட்டாணி - கால் கப், கேரட் - பாதி, கீரை (ஏதாவது ஒரு கீரை) - ஒரு கப், உப்பு - ருசிக்கேற்ப, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன். தாளிக்க: எண்ணெய் - தேவையான அளவு, கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன். செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு, கேரட் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கவும். பட்டாணியையும் கேரட்டையும் தனியாக மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். கீரையுடன் 2 பருப்புகளையும் சேர்த்து வேகவிடவும். கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பிறகு, தக்காளி சேர்த்து வதக்கவும். வேகவைத்த கீரை, பருப்புகள், கேரட், பட்டாணி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதித்ததும் இறக்கவும். ------------------------------------------------------------------------------ ஈஸி தால் தேவையானவை: துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 2 டேபிள்ஸ்பூன், பூண்டு - 2 பல், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - ருசிக்கேற்ப, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, பச்சை மிளகாய் - 1, நெய் - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - சிறிதளவு, எலுமிச்சம்பழச் சாறு - சிறிதளவு. செய்முறை: எல்லா பருப்புகளையும் வேகவைத்து, மிக்ஸியில் போட்டு அரைக்கவும். கடாயில் நெய் ஊற்றி, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, பாதியாக நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். அரைத்த பருப்பை சேர்த்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். கெட்டியாக இருந்தால் தண்ணீர் சேர்க்கலாம். அடுப்பிலிருந்து இறக்கி, எலுமிச்சம்பழச் சாறு பிழிந்து, மல்லித்தழை தூவிப் பரிமாறவும். -------------------------------------------------------------------------------- பெல்லாரி தால் (ஆந்திரா) தேவையானவை: பெரிய வெங்காயம் - 1, துவரம்பருப்பு - அரை கப், புளித்தண்ணீர் - 4 டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, கறிவேப்பிலை, மஞ்சள்தூள் - சிறிதளவு. அரைக்க: துவரம்பருப்பு - அரை கப், தேங்காய் துருவல்- - ஒரு சிறிய கப், பச்சை மிளகாய் - 3 அல்லது 4, தனியா - கால் கப், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - ஒரு கப், சீரகம் - 3 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன். செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள சாமான்கள் அனைத்தையும் மிக்ஸியில் அரைத்துவைக்கவும். துவரம்பருப்பை வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இதில் கறிவேப்பிலையும், மஞ்சள்தூளும் சேர்க்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன், அரைத்த விழுதையும் வெந்த பருப்பையும் சேர்த்து சிறிதுநேரம் கொதிக்க விடவும். வித்தியாசமான சுவையுடன் பெல்லாரி பருப்பு மசியல் ரெடி. ---------------------------------------------------------------------------- கலவைப் பயறு தால் தேவையானவை: முழு உளுத்தம்பருப்பு, கருப்பு கொண்டைக்கடலை, காராமணி - தலா ஒரு கப், தனியாதூள் - 2 அல்லது 3 டீஸ்பூன், கரம் மசாலாதூள் - ஒரு டீஸ்பூன், கிராம்பு - 5, பிரிஞ்சி இலை - 2 (சிறியது), பட்டை - சிறியதாக 4 துண்டுகள், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - ருசிக்கேற்ப, பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம் - பாதி, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை. செய்முறை: தானியங்களை முதல்நாள் இரவு ஊறவைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். குக்கரில் எல்லா தானியங்களையும் வேகவிடவும். ரொம்பவும் குழைந்துவிட வேண்டாம். வெந்த பிறகு இதில் பிரிஞ்சி இலை, கரம் மசாலாதூள், மஞ்சள்தூள், தனியாதூள், பெருங்காயத்தூள், தேவையான உப்பு சேர்க்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, பச்சை மிளகாய், கிராம்பு, பட்டை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெந்த பருப்புகளை இதில் சேர்த்து மேலும் 5 நிமிடம் கிளறவும். ------------------------------------------------------------------ கோசம்பரி (ஆந்திரா) தேவையானவை: வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப், பச்சை மிளகாய் - 3 அல்லது 4, இஞ்சி துருவல் - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, எலுமிச்சம்பழச் சாறு அல்லது ஆம்சூர் தூள் - 3 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, மல்லித்தழை - சிறிதளவு. செய்முறை: தேங்காய் துருவலை மிக்ஸியில் (தண்ணீர் சேர்க்காமல்) தூளாக்கவும். கடலையை முந்தின நாள் இரவே ஊறவைக்கவும். ஊற வைத்த கடலையை எடுத்து பச்சை மிளகாயை இஞ்சியுடன் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். பிறகு உப்பு, எலுமிச்சம்பழச் சாறு, தேங்காய் தூள் சேர்க்கவும். கடுகு தாளித்து, அரைத்த கலவையை இதில் கொட்டி, 5 நிமிடம் கொதிக்க விடவும். காரம் அதிகமாக தேவையானால் காய்ந்த மிளகாய் 2 சேர்க்கவும். நறுக்கிய மல்லித்தழை தூவி பரிமாறவும். ---------------------------------------------------------------------- மாங்கா பருப்பு தேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப், மாங்காய் (காய்வெட்டாக) - 1, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - ஒன்றரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் - 1, பூண்டு - 3 பல், கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1 அல்லது 2, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன். செய்முறை: வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கவும். பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். மிதமான தீயில் வைத்து, அரைவேக்காடாக பருப்பை வேகவைக்கவும். மாங்காயை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கி, பருப்புடன் சேர்த்து நன்றாக கூழாக ஆகும் வரை வேகவிடவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், காய்ந்த மிளகாய் துண்டுகள், பூண்டு, வெங்காயத்தைப் போட்டு நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும். கறிவேப்பிலை கிள்ளி போட்டு, மாங்காய் பருப்பில் சேர்க்கவும். புளிப்பும் காரமும் சேர்ந்து சூப்பராக இருக்கும் இந்த தால். ---------------------------------------------------------------------------- தால் ஃப்ரை தேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப், பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 1, தக்காளி - 1, கடுகு, வெந்தயம், சீரகம், தனியா - நான்கும் தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், ஆம்சூர் பொடி அல்லது எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டீஸ்பூன், துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. செய்முறை: வெங்காயத்தை நீளவாக்கில், மெல்லியதாக நறுக்கவும். தக்காளி, மல்லித்தழை, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். பருப்பை வேகவிட்டு, கரண்டியின் பின்புறத்தால் நன்றாக மசித்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, வெந்தயம், சீரகம், தனியா இவற்றைப் போட்டு வறுக்கவும். பிறகு வெங்காயம், தக்காளி, துருவின இஞ்சி போட்டு, 5-லிருந்து 7 நிமிடம் வதக்கவும். ஆம்சூர் பொடி அல்லது எலுமிச்சம்பழ சாறு, மிளகாய்தூள் சேர்த்து மேலும் 2 நிமிடம் கிளறவும். வெந்த பருப்பை சேர்த்து கொதிக்கவிடவும். மல்லித்தழை தூவிப் பரிமாறவும். புலவு, சப்பாத்தி அல்லது சாதத்துடன் சாப்பிட ஏற்றது. ------------------------------------------------------------------------- ஆலு தால் தேவையானவை: உருளைக்கிழங்கு - கால் கிலோ, பாசிப்பருப்பு - அரை கப், தக்காளி - 2, பச்சை மிளகாய் - 50 கிராம், மிளகு - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கரம் மசாலாதூள் - 2 டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, தனியாதூள் - ஒரு டீஸ்பூன், ஆம்சூர் தூள் அல்லது எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டீஸ்பூன். செய்முறை: தேவையான தண்ணீர் விட்டு பாசிப் பருப்பை வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு, உருளைக்கிழங்கு துண்டுகளை 5 நிமிடம் வறுக்கவும். தனியாதூள், மசாலாதூள், மிளகு, உப்பு சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் வதக்கவும். நடுநடுவே கிளறிவிடவும். மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சீரகத்தைப் போட்டு, வெடித்ததும் வெந்த பருப்பைப் போட்டு மேலும் 2 நிமிடம் கொதிக்கவிடவும். வறுத்த உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து மேலும் 2, 3 நிமிடம் கிளறவும். கலவை கெட்டியானதும், ஆம்சூர் தூளோ அல்லது எலுமிச்சை சாறோ ஊற்றி, ஒரு கிளறு கிளறி இறக்கவும். ----------------------------------------------------------------------------- பஞ்சாபி சன்னா மசாலா தேவையானவை: வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப், பெரிய வெங்காயம் - 2, உப்பு - ருசிக்கேற்ப, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 10 அல்லது 12 பல், நெய் - 6 டீஸ்பூன், தக்காளி - 2, பச்சை மிளகாய் - 1, கரம் மசாலா - அரை டீஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு, சீரகம் - அரை டீஸ்பூன். செய்முறை: வெள்ளை கடலையை முதல்நாள் இரவு ஊறவைக்கவும். மறுநாள் குக்கரில் மஞ்சள்தூள், உப்பு, அரை ஸ்பூன் மிளகாய்தூள், பூண்டு சேர்த்து 4 விசில் வரை வேகவிடவும். 4-வது விசிலில், அடுப்பை ‘ஸிம்’மில் சிறிது நேரம் வைக்கவும். வெங்காயத்தை விழுதாக அரைக்கவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி, 2 பல் பூண்டு அரைத்த வெங்காய விழுதுடன் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும். இப்பொழுது சீரகம் சேர்க்கவும். பிறகு மசித்த தக்காளி சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும். பச்சை மிளகாய், உப்பு, மிளகாய்தூள், மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். மொத்த மசாலாவையும் குக்கரில் சேர்த்து, கொஞ்சம் நீர் விட்டு, சிறிது நேரம் கொதிக்கவிடவும். கரம் மசாலாவையும், மல்லித்தழையையும் சேர்க்கவும். சின்னக் குழந்தை கூட இன்னொரு சப்பாத்தி கேட்கும், சன்னா மசாலா துணை இருந்தால். ------------------------------------------------------------------------------ பாசிப்பருப்பு துவையல் தேவையானவை: பாசிப்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 4, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - 3 பல், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாசிப்பருப்பை வெறும் கடாயில் நன்கு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். பொன்னிறமாக வறுத்ததும் இறக்கி ஆறவிட்டு, மற்ற பொருட்களோடு சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள். அம்மியில் அரைத்தால் அற்புதமான மணமும் ருசியும் கொடுக்கும். சூடான ரசம் சாதம், உடைத்த அரிசி ரவைக் கஞ்சி, தண்ணீர் விட்ட சாதம்.. என எதற்கும் ஈடு கொடுக்கும் இந்தத் துவையல். ----------------------------------------------------------------- கடலைமாவு சப்பாத்தி தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், நெய் - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. பூரணத்துக்கு: கடலை மாவு - அரை கப், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், கரம்மசாலாதூள் - அரை டீஸ்பூன், லெமன் சால்ட் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: கோதுமை மாவை நெய், உப்பு சேர்த்து சப்பாத்திமாவு போல் பிசைந்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து கடலைமாவு சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள். மாவு நன்கு வறுபட்டு, வாசனை வந்ததும் பூரணத்துக்கான மற்ற பொருட்களையும் சேர்த்து சிறிது வறுத்து இறக்குங்கள். கோதுமை மாவிலிருந்து சிறிது எடுத்து கிண்ணம் போல் செய்து, கடலை மாவு பூரணத்தை சிறிது வைத்து மூடி, அதை உருட்டி சப்பாத்தி போல திரட்டி தோசைக்கல்லில் சுட்டெடுங்கள். இந்த சப்பாத்தியை நன்கு அழுத்தி, அழுத்திவிட்டு முறுகலாக சுட்டு எடுக்கவேண்டும். அப்போதுதான் ருசியே! ----------------------------------------------------------------------- முந்திரிப்பருப்பு பக்கோடா தேவையானவை: முந்திரிப்பருப்பு - ஒரு கப், கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு - 2 டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய்-இஞ்சி விழுது - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: எண்ணெய் நீங்கலாக, மற்ற எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து சிறிதளவு தண்ணீர் தெளித்து, பிசறிக்கொள்ளுங்கள் (மாவுக்கலவை, முந்திரிப்பருப்பில் நன்கு ஒட்டிக்கொள்ளுமாறு பிசறவேண்டும்). எண்ணெயைக் காயவைத்து, மிதமான தீயில் முந்திரிக் கலவையை உதிர்த்தாற்போல போட்டு, நன்கு ‘மொறுமொறு’ப்பாக வேகவிட்டு எடுங்கள். குறிப்பு: நடுத்தரத் தீயில்தான் பக்கோடாக்களை வேக-வைக்கவேண்டும். அதிகமான தீயில் வெந்தால், முந்திரிப்பருப்பு கருகிவிடும். ---------------------------------------------------------------------------- பாதாம்பருப்பு ரோல் தேவையானவை: பாதாம் பருப்பு - ஒரு கப், சர்க்கரை - ஒரு கப், லிக்விட் க்ளூகோஸ் (டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்) - ஒரு டீஸ்பூன், பால் - அரை கப், ஃபுட் கலர் (ஏதாவது இரு நிறங்கள்) - சில துளிகள். செய்முறை: பாதாம் பருப்பை கொதிக்கும் நீரில் போட்டு அரை மணி நேரம் ஊறவைத்து, தோல் உரித்து கழுவிக்கொள்ளுங்கள். பால் சேர்த்து அதை நைஸாக அரைத்துக்கொள்ளுங்கள். சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறுங்கள். லிக்விட் க்ளூகோஸையும் (விருப்பப்பட்டால்) சேர்த்துக் கிளறுங்கள். அதைச் சேர்த்ததும் கலவையை சிறிது எடுத்து உருட்டி பார்த்தால் உருட்ட வரும். அப்போது கீழே இறக்கி, இரண்டு பகுதிகளாக பிரித்து, இரு வேறு கலர்கள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். இரண்டு கலர் கலவையையும் தனித்தனியே பெரிய சப்பாத்தி களாகத் திரட்டுங்கள். ஒரு கலர் சப்பாத்தி மேல் மற் றொரு கலர் சப்பாத்தியை வைத்து, அப்படியே பாய் போல சுருட்டுங்கள். பிறகு, விரல் நீளத் துண்டு களாக நறுக்குங்கள். குறிப்பு: லிக்விட் க்ளூ கோஸ் சேர்க்காமலும் செய்யலாம். ஆனால், கலவை உருட்டும் பதம் வரும்போது கவனமாக இறக்கிவிடவேண்டும். ------------------------------------------------------------------------ பருப்புபுட்டு தேவையானவை: கடலைப்பருப்பு - அரை கப், பாசிப்பருப்பு - அரை கப், வெல்லத்தூள் - ஒரு கப், ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - அரை கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: பருப்புகள் இரண்டையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைத்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். இட்லிப் பாத்திரத்தில் வைத்து, ஆவியில் வேகவைத்து ஆற வைத்து உதிர்த்துக்கொள்ளுங்கள். வெல்லத்தை கால் கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் கொதிக்கவிட்டு நெய், தேங்காய் துருவல், ஏலக்காய்தூள், வேக வைத்து உதிர்த்த பருப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். ------------------------------------------------------------------------- பருப்பு கொழுக்கட்டை தேவையானவை: (மேல் மாவுக்கு) பச்சரிசி - ஒரு கப், உப்பு - தேவையான அளவு. பூரணத்துக்கு: உளுத்தம்பருப்பு - கால் கப், துவரம்பருப்பு - கால் கப், பச்சை மிளகாய் - 3, இஞ்சி - ஒரு துண்டு, சீரகம் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: அரிசியை ஊறவைத்து ஒரு மணி நேரம் கழித்து, வீட்டுக்குள்ளேயே நிழல் உலர்த்தலாக உலர்த்தி, சற்று ஈரம் இருக்கும் போது மிக்ஸியில் அரைத்து, சலித்து வைத்துக்கொள்ளுங்கள். உளுத்தம்பருப்பையும், துவரம்பருப்பையும் ஒன்றாக ஊறவையுங்கள். ஒரு மணி நேரம் ஊறியதும், உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், தேங்காய் துருவலோடு சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுங்கள். இதை இட்லிப் பாத்திரத்தில் வைத்து வேகவிடுங்கள். வெந்ததும் எடுத்து ஆறவிடுங்கள். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெந்ததை உதிர்த்து சேர்த்து கிளறுங்கள். அத்துடன் எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து கலந்து இறக்குங்கள். பச்சரிசி மாவை அளந்துகொண்டு சம அளவு தண்ணீர் எடுத்து (ஒரு கப் மாவு - ஒரு கப் தண்ணீர்) கொதிக்கவிடுங்கள். சிறிது உப்பு சேருங்கள். தண்ணீர் கொதிக்கும்பொழுது மாவைச் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். சிறிது மாவெடுத்து கிண்ணம் போல் செய்து, பருப்பு பூரணத்தை உள்ளே வைத்து மூடி ஆவியில் வேகவைத்து எடுத்து, சுடச்சுடப் பரிமாறுங்கள். ------------------------------------------------------------------------- பாசிப்பருப்பு சீயம் தேவையானவை: பச்சரிசி - அரை கப், உளுத்தம்பருப்பு - அரை கப், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு. பூரணத்துக்கு: பாசிப்பருப்பு - ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப், சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன். செய்முறை: அரிசியும், உளுத்தம்பருப்பையும் ஒன்றாக ஊறவைத்து நன்கு அரைத்தெடுங்கள். உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பாசிப்பருப்பை மலர வேக வையுங்கள். சர்க்கரை, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி சேர்ந்தாற்போல் வந்ததும் ஏலக்காய்தூள், நெய் சேர்த்து கிளறுங்கள். இந்தப் பூரணத்தை ஆறவைத்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வையுங்கள். பிறகு ஒவ்வொன்றாக எடுத்து, அரைத்து வைத்திருக்கும் மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள். செட்டி நாட்டின் ஸ்பெஷல் இனிப்பு இந்த சீயம். -------------------------------------------------------------------------- ஸ்டஃப்டு பருப்பு தேவையானவை: பாகற்காய் (சற்று சிறியதாக) - கால் கிலோ, துவரம்பருப்பு - அரை கப், கடலைப்பருப்பு - அரை கப், புளி - எலுமிச்சை அளவு, மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, வெல்லத்தூள் - 2 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். கால் கப் புளித்தண்ணீரை எடுத்து வைத்துவிடுங்கள். பாகற்காயை கீறி, விதைகளை நீக்கிவிட்டு மீதமுள்ள புளித்தண்ணீரில் ஊறவையுங்கள். பருப்பு வகைகளை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைத்து, எடுத்து வைத்துள்ள புளித்தண்ணீர், சோம்பு, மிளகாய்தூள், வெல்லத்தூள், உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள். 8 டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறுங்கள். இது வெந்து உதிரானதும் இறக்கிவைத்துக் கொள்ளுங்கள். புளித்தண்ணீரில் உள்ள பாகற்காயை எடுத்து அதனுள் பருப்பு கலவையை அடைத்து, ஒரு நூலால் பாகற்காயைக் கட்டுங்கள். எண்ணெயைக் காயவைத்து அதில் பாகற்காய், உப்பு சேர்த்து கிளறி மூடிவைத்து, அவ்வப்போது தண்ணீர் தெளித்து, சிறு தீயில் நன்கு வதக்கி எடுங்கள். நாக்கைச் சப்புக்கொட்டிச் சாப்பிட வைக்கும் அசத்தலான அயிட்டம் இது. ---------------------------------------------------------------------------------- துவரம்பருப்பு போளி தேவையானவை: மைதா - ஒரு கப், உப்பு - தேவையான அளவு, நெய் அல்லது எண்ணெய் - சுட்டெடுக்கத் தேவையான அளவு. பூரணத்துக்கு: துவரம்பருப்பு - அரை கப், சர்க்கரை - அரை கப், ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: மைதா மாவை, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி சற்று இளக்கமாகப் பிசைந்துகொள்ளுங்கள். அதன் மேலே சிறிது எண்ணெய் தடவி, மூடி வைத்து, 2 மணி நேர ஊறவிடுங்கள். இதுதான் போளிக்கான மேல்மாவு. துவரம்பருப்பை நெத்துப் பருப்பாக, குழையாமல் வேகவைத்து, தண்ணீரை வடியுங்கள். சர்க்கரை, தேங்காய் துருவல், வேகவைத்த பருப்பு.. மூன்றையும் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறுங்கள். சர்க்கரை இளகி, மீண்டும் இறுகும் வரை கிளறி, ஏலக்காய்தூள் சேர்த்து இறக்குங்கள். ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளுங்கள். இப்போது பூரணம் ரெடி. அடுத்து, மைதாவை சிறிய அளவு எடுத்து உருட்டி, கிண்ணம் போல செய்து, உள்ளே பருப்பு பூரணத்தை வைத்து மூடி, மெல்லிய போளியாக திரட்டுங்கள். தோசைக்கல்லில் போட்டு, நெய் அல்லது எண்ணெய் சேர்த்து சுட்டெடுங்கள். ---------------------------------------------------------------------------- வெந்தயக்கீரை பருப்பு சப்ஜி தேவையானவை: கடலைப்பருப்பு - அரை கப், வெந்தயக்கீரை - 2 கட்டு, பெரிய வெங்காயம் - 1, பூண்டு - 4 பல், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன். தாளிக்க: சீரகம் - அரை டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து, குழையாமல் வேகவையுங்கள். கீரையை ஆய்ந்து, சுத்தம் செய்யுங்கள். பூண்டு, வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, சீரகம் தாளித்து பூண்டு சேருங்கள். பூண்டு வதங்கியதும் வெங்காயத்தையும் சேர்த்து வதக்குங்கள். அத்துடன் கீரை, மிளகாய்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, பருப்பை சேருங்கள். சிறு தீயில் நன்கு வதக்கி எடுக்கும்பொழுது எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து கிளறி இறக்குங்கள். தண்ணியாக இல்லாமல் சிறிது கெட்டியாக இருப்பதுதான், இந்த சப்ஜியின் ஸ்பெஷல். ----------------------------------------------------------------------------- மசூர் பருப்பு ரோல் தேவையானவை: மசூர் பருப்பு - அரை கப், உருளைக்கிழங்கு - 2, கார்ன்ஃப்ளார் - கால் கப், எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு, கரம்மசாலாதூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு. அரைக்க: இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 5 பல், பச்சை மிளகாய் - 3, முந்திரிப்பருப்பு - 6. செய்முறை: பருப்பை மலர வேகவைத்து தண்ணீரை வடித்துக்கொள்ளுங்கள். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து கட்டியில்லாமல் மசித்துக்கொள்ளுங்கள். அத்துடன் வேகவைத்த பருப்பு, கார்ன்ஃப்ளார், எலுமிச்சம்பழச் சாறு, மல்லித்தழை, கரம்மசாலாதூள், உப்பு, அரைத்த விழுது சேர்த்து நன்கு பிசையுங்கள். பிசைந்த கலவையிலிருந்து சிறிது எடுத்து, சிறு ரோல்களாக உருட்டி காயும் எண்ணெயில் பொரித் தெடுங்கள். --------------------------------------------------------------------------- இளந்தேங்காய் பருப்பு கறி தேவையானவை: கடலைப்பருப்பு - அரை கப், இளம் தேங்காய் (நறுக்கியது) - ஒரு கப், பச்சைமிளகாய் - 3, பெரிய வெங்காயம் - 1, சீரகம் - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, நெய் - 2 டீஸ்பூன். செய்முறை: கடலைப்பருப்பை குழையாமல், அரை அவியலாக வேகவையுங்கள். வெந்த பருப்புடன், பொடியாக நறுக்கிய தேங்காய், வெங்காயம், கீறிய பச்சைமிளகாய், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடுங்கள். பின்பு சீரகத்தை இரண்டு கைகளாலும் தேய்த்து அதில் போட்டு, கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு, நெய் ஊற்றி சேர்த்து கலந்து இறக்குங்கள். குறிப்பு: தேங்காய் முற்றலாக இல்லாமல், நன்கு இளசாக இருந்தால்தான் இந்தக் கூட்டு சுவைக்கும். -------------------------------------------------------------------------------------- பருப்பு போண்டா தேவையானவை: உளுத்தம்பருப்பு - ஒரு கப், துவரம்பருப்பு - அரை கப், சின்ன வெங்காயம் - ஒரு கப், பச்சை மிளகாய் - 5, இஞ்சி - ஒரு துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு, தேங்காய் (பல்லு பல்லாகக் கீறியது) - கால் கப். தாளிக்க: மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி - 10. செய்முறை: உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பை தனித்தனியே ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். துவரம்பருப்பை கரகரப்பாக அரைத்தெடுங்கள். உளுத்தம்பருப்பை பொங்க பொங்க அரையுங்கள். இரண்டையும் ஒன்றாக கலந்துகொள்ளுங்கள். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை பொடியாக நறுக்கி, மாவில் சேருங்கள். அத்துடன் தேங்காய், உப்பு சேர்த்துக் கலக்குங்கள். எண்ணெயில் மிளகு, சீரகம், முந்திரி சேர்த்து வறுத்து மாவில் சேருங்கள். நன்கு கலந்து, சிறு போண்டாக்களாக உருட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள். -------------------------------------------------------------------------------------- பருப்பு வெங்காய சப்ஜி தேவையானவை: கடலைப்பருப்பு - அரை கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 3, இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மிளகாய்தூள் - ஒன்றரை டீஸ்பூன், புளி விழுது - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: கடலைப்பருப்பை வேகவையுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து சீரகம் தாளித்து, வெங்காயம் சேருங்கள். வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போக வதக்குங்கள். அத்துடன் தக்காளி, மிளகாய்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி பருப்பு, புளி விழுது சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். புளிப்பும் காரமும் சேர்ந்த வித்தியாசமான சப்ஜி இது. சாதம், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது. ---

Related

30 நாள் 30 வகை சமையல் 23926392743514171

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item