சமையல் குறிப்புகள்! ரெடிமேட் மிக்சட் மாவு
ஐந்தே நிமிடத்தில் அசத்தல் சமையல்! எப்பேற்பட்ட அவசரத்திலும் இந்தப் பொடியை வைத்து உடனடியாக பலவகை டிஷ்களை செய்து குழந்தைகளை மகிழ்விக்கலாம். சு...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_4673.html
ஐந்தே நிமிடத்தில் அசத்தல் சமையல்!
எப்பேற்பட்ட அவசரத்திலும் இந்தப் பொடியை வைத்து உடனடியாக பலவகை டிஷ்களை செய்து குழந்தைகளை மகிழ்விக்கலாம். சுவையோடு சத்துக்களையும் அள்ளி வழங்கும் இந்தப் பொடியை செய்வதும் மிக எளிது.
தேவையானவை: நிலக்கடலை மாவு & ஒரு கப், சோயா மாவு & ஒரு கப், சோளமாவு & ஒரு கப், பொட்டுக்கடலை மாவு & ஒரு கப், சேமியா மாவு & ஒரு கப், வறுத்த அவல் பவுடர் & ஒரு கப், வறுத்து பொடித்த ஜவ்வரிசி & ஒரு கப், வறுத்துப் பொடித்த ரவை & ஒரு கப், வறுத்த மைதா மாவு & ஒரு கப், வறுத்த கடலை மாவு & ஒரு கப், வறுத்த கோதுமை மாவு & ஒரு கப், வறுத்த பச்சரிசி மாவு & ஒரு கப், வறுத்த புழுங்கல் அரிசி மாவு & ஒரு கப்.
செய்முறை: எல்லாவற்றையும் கலந்து வைத்துக்-கொண்டால் கீழ்க்காணும் ‘டிஷ்’களையெல்லாம் உங்கள் அருமை குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.. ஒரு கப் மாவுடன் ஒன்றரை கப் சர்க்கரைத்தூள், சிறிது ஏலத்தூள் கலந்து நெய் விட்டு உருண்டைகளாக பிடிக்கலாம்.
ஒரு கப் மாவுடன், ஒரு கப் துருவிய வெல்லம் சேர்த்து தேங்காய்த் துருவல் கலந்து ‘லாடு’ போல் செய்து தரலாம்.
வெல்லப்பாகில், மாவை போட்டு கிளறி, பிளாஸ்டிக் கவரில் தட்டி, தோசைக்கல்லில் சிறிது நெய் விட்டு சுட்டால் திடீர் போளி ரெடி!
மாவை நெய்யில் வறுத்து, பால் விட்டுக் கிளறி சர்க்கரை சேர்த்து ‘அல்வா’ போலவும் கிண்டலாம்.
ஒரு கப் மாவில் 4 டீஸ்பூன் நெய் விட்டு, வறுத்து அரை லிட்டர் பாலில் வேகவிட்டு சர்க்கரை சேர்த்து இறக்கவும். பிரமாதமான ‘பிரதமன்’ ரெடி!
மாவில் தண்ணீர் தெளித்துப் பிசறி, ஆவியில் வேகவிட்டு இறக்கவும். அதில், நெய்யில் வறுத்த தேங்காய் துருவல், ஏலப்பொடி, சர்க்கரைத்தூள் கலந்து இனிப்புப் புட்டு செய்யலாம்.
அதே மாவை தண்ணீர் சேர்த்து பிசறி, உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து ஆவியில் வேகவிட்டு எடுத்தால், ‘காரபுட்டு’ ரெடி!.
இஞ்சி, பச்சைமிளகாய், உப்பு அரைத்து மோரில் கலந்து கொள்ளவும். இதில் மாவை கொட்டி பிசைந்து பிளாஸ்டிக் பேப்பரில் தட்டி, ரொட்டிபோல் சுட்டு சாப்பிடலாம்.
தேங்காய் பாலில், மாவைக் கரைத்து சிட்டிகை உப்பு, சர்க்கரைத்தூள் சேர்த்து இனிப்பு தோசை சுடலாம்.
Post a Comment